Featured post

கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்

 கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்"! வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், 'ஆண்டவன்'  திரைப்படம் உருவாகியுள...

Wednesday 27 November 2019

எனக்கான இடத்தை யாரும் தட்டிப் பறிக்க முடியாது: நடிகர் அப்புக்குட்டி!

எனக்கு யாரும் போட்டி இல்லை :நடிகர் அப்புக்குட்டி!

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் மத்தியில் கதை நாயகனாக தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றிருப்பவர் நடிகர் அப்புக்குட்டி. சிறந்த நடிகராக தேசிய விருது பெற்றவர் மட்டுமல்ல வித்தியாசமான பாத்திரங்களுக்கும் விதிவிலக்கான பாத்திரங்களுக்கும் தன்னை ஒப்படைப்பவர் என்று பெயர் பெற்றவர் .

தனக்கென ஒரு தனி நாற்காலி தயாரித்துக்கொண்டு தமிழ் சினிமாவில் பயணிக்கும் அவர் கையில் இப்போதும் 8 படங்கள்.  அவரிடம் பேசியபோது கேட்டோம்,

தேசிய விருது பெற்று இருக்கிறீர்கள் இருந்தாலும் உங்களுக்கான சரியான அங்கீகாரம் கிடைத்திருப்பதாக உணர்கிறீர்களா ?

"என்னைப் பொறுத்தவரை இல்லாத வாய்ப்புகளையும் கிடைக்காத உயரங்களையும் நினைத்து வருத்தப் படுவதைவிட கிடைப்பதில் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம் .

எனக்கு இப்போது வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன .நான் நடித்து 'வாழ்க விவசாயி',' குஸ்கா' படங்கள் வெளிவர தயாராக இருக்கின்றன இப்போது எட்டு படங்களில் நடித்து வருகிறேன் .  ,'வல்லவனுக்கு வல்லவன்', 'பூம் பூம் காளை',  'வைரி', 'ரூட்டு'.'மாயநதி' , 'இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு' , 'பரமகுரு' , 'கல்தா' போன்ற படங்கள் கைவசம் உள்ளன .எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை மகிழ்ச்சியாகவே  இருக்கிறேன்."
என்கிறார்.


 உங்களுக்குப் போட்டியாக யாரை நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது 

,"உண்மையைச் சொன்னால் பலருக்கும் பலர் போட்டியாக இருப்பார்கள் .ஆனால் எனக்கு யாரும் போட்டி என்று கூற முடியாது. எனக்கு நகைச்சுவை பாத்திரங்களில் சூரி, சந்தானம் ,யோகிபாபு, சதீஷ் எனக்கு போட்டி என்று சிலர் நினைக்கிறார்கள் கேட்கிறார்கள்.நான் அப்படி நினைக்கவில்லை .சிலர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் அவர்களை நான் போட்டியாக கருதவில்லை .எனக்கு நான் மட்டுமே போட்டி .

இந்தப் பாத்திரம் அப்புக்குட்டிக்குச்  சரியாக பொருந்தும் அவர் சரியாக நடிப்பார் என்று நம்பிக்கையுடன் வரும் வாய்ப்புகள் எனக்கு மட்டுமே சொந்தமானது. எனக்கு வரும் அழைப்புகைளை யாரும் தட்டிப்பறிக்க முடியாது. என் இடத்தை யாரும் இட்டு நிரப்ப முடியாது .அது போல் எனக்கு யாரும் போட்டி கிடையாது எனக்கு நானே தான் போட்டி . " என்கிறார் தெளிவாக..

எப்படிப் பட்ட படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்ற போது, 

" அப்புகுட்டி என்றால் இயல்பாக நடிப்பார் என்ற எண்ணம் உள்ளது .நான் விரும்புவதும் அதைத்தான்.

 நல்ல நகைச்சுவை வேடங்களிலும் மனதை தொடும் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலும் வித்தியாசமான கதைகளிலும் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

 எல்லா வாய்ப்புகளையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை . சும்மா வந்து போகும் கதாபாத்திரம் எனக்கு தேவையில்லை.

நான் எப்போதும் இப்படித்தான் நினைைக்கிறேன். நான் கதாநாயகன் அல்ல .நான் கதை நாயகன் மட்டுமே .

கதாநாயகன் என்கிற போது ஒரு வட்டத்துக்குள் சுழல வேண்டியிருக்கும் .அதனால் எனக்கென்று பாத்திரங்களில் எந்த இலக்கும் வரையறையும் வரம்பும் கிடையாது .அப்படிப்பட்ட  நடிகராக ,ஒரு இயக்குநரின் நடிகராக நான் பயணம் செய்ய வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்." என்கிறார்.

சமீபத்திய எதிர்பார்ப்பாக நீங்கள் கருதுவது என்ன என்றால்,
" நான் நடித்து அடுத்து இரண்டு படங்கள் வெளியாகத்  தயாராக இருக்கிறது. குறிப்பாக  'வாழ்க விவசாயி' மிகவும் நல்ல படம் 'விவசாயிகளின் வாழ்வியலை அழகாகவும் மனதை தொடும்படி  சொல்லும் கதை.. இனி யார் விவசாயம் பற்றியும் விவசாயிகளைப் பற்றி படம் எடுத்தாலும் இந்த ப் படத்தின் பாதிப்பு, இல்லாமல் இந்தப் படத்தின் சாயல் இல்லாமல் எடுக்க முடியாது .இப்படிச்  சொல்லும்  அளவுக்கு முழுமையாக விவசாயிகளின் பிரச்சினைகளை உணர்ச்சிகரமாக பேசுகிற படமாக இது இருக்கும் .

இதில் நடித்திருப்பதில் பெருமைப்படுகிறேன் .எனக்கு இதில் நல்ல பெயர் கிடைக்கும் .விவசாயம் பற்றிய விழிப்புணர்வு படமாகவும் இது இருக்கும் .அடுத்து நான்  நடித்த' குஸ்கா ' படம் வருகிறது அது என்னுடைய இன்னொரு பரிமாணத்தைக் காட்டும் படி இருக்கும்." என்கிறார்.
 இப்படி வரிசை கட்டி நிற்கும் பலதரப்பட்ட படங்களோடு புதிய நம்பிக்கையோடு அப்புக்குட்டியின் திரைப்பயணம் தொடர்கிறது .

No comments:

Post a Comment