Featured post

கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்

 கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்"! வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், 'ஆண்டவன்'  திரைப்படம் உருவாகியுள...

Tuesday 18 October 2022

முதல்வருக்கு வ.கௌதமன் கோரிக்கை.*

 *முதல்வருக்கு  வ.கௌதமன்  கோரிக்கை.*


வன்னியர்களுக்கான 10.5% தனி இடஒதுக்கீட்டிற்கென சிறப்புச் சட்டம் இயற்றி எதிர்வரும் கூட்டத்தொடரிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.* 


வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு போராட்டம் 1987-ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமூகமாக வன்னியர்கள் உள்ளனர். அவர்கள்  வாழ்கின்ற வட தமிழ்நாட்டின் மாவட்டங்கள் அனைத்தும் இன்றும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதை மாநிலத் திட்டக் கமிஷனே தனது அறிக்கைகளில் மிகத்தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளித் தேர்வுகள் வெளியாகும்போது வன்னியர் வாழும் மாவட்டங்களான விழுப்புரமும், திருவண்ணாமலையும், கிருஷ்ணகிரியும் தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தில் கடைசி நிலையில் இருந்து வருவது ஒன்றே, வன்னியர்கள் முன்னேறவில்லை என்பதற்கான தெளிவான அடையாளம். ஆகையினால் இனியும் காலம் தாமதிக்காமல் ஏற்கனவே  சட்டமன்றத்தில் தந்த வாக்குறுதிப்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடக்கவிருக்கும் கூட்டத்தொடரிலேயே சிறப்புச் சட்டம் இயற்றி நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.


ஈவு இரக்கமின்றி 21 உயிர்களைப் பலிகொண்ட இடஒதுக்கீட்டின் உரிமைப் போராட்டத்திற்கு, 2021-ஆம் ஆண்டு விடியல் பிறந்தது என்று நாங்கள் மகிழ்ந்திருந்த வேளையில்  உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை பல்வேறு காரணங்களைக்கூறி, அந்தச் சட்டத்தை இரத்து செய்தது. மாநில அரசுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க அதிகாரமில்லை, சாதிரீதியாக இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது, இந்திய அரசியலமைப்பின் 102-ஆவது திருத்தத்திற்கு விரோதமானது, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குள் உள் இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று பூதாகாரமான காரணங்களைத் தனது தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துக் காட்டியது. நல்வாய்ப்பாக, இவையெல்லாம் முழுக்கத் தவறு என்று தில்லி உச்சநீதிமன்றம் தனது 31-3-2022 அன்று வழங்கிய தீர்ப்பில் தெளிவாகக் கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. மேலும் மாநில அரசுக்கு சாதிரீதியாக தனி இடஒதுக்கீடு கொடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், 1985-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கொடுத்தது தவறு என்றும், உள் இடஒதுக்கீடு சமகாலத்திய புள்ளி விவரங்களின் அடிப்படையில் அளிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் தலைவராக இருந்த நீதியரசர் ஜனார்த்தனம் அவர்கள்தான் முஸ்லீம்களுக்கும், அருந்ததியினருக்கும் உள் இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களின் அரசிடம் கையளித்தார். உடனடியாக அவை சட்டமாகி அமலுக்கு வந்தன. அதன் பின்னர் பொறுப்பேற்ற செல்வி ஜெயலலிதா அவர்களின் அரசிடம் 69 சதவிகித இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கற்கான பரிந்துரையை அளித்தார். அதுவும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


ஆனால், வன்னியர் தனி இடஒதுக்கீடு என்று வரும்போது மட்டும், வன்னியர் அல்லாத பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் உறுப்பினர்கள் ஒன்று கூடிக்கொண்டு, காழ்ப்புணர்ச்சியோடு அதனை எதிர்த்தனர். அப்பொழுதே, 2012-ஆம் ஆண்டே நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களது பரிந்துரையை ஏற்று சட்டம் இயற்றியிருந்தால், அவரது பரிந்துரைக்கு ஆதாரமான புள்ளி விவரங்கள் பழமையானவை என்று கூறப்பட்டிருக்காது. ஆனால், ஒன்பது ஆண்டு கால தாமதம், வன்னியர்களின் தனி இடஒதுக்கீட்டுக் கோரிக்கையைச் சட்ட சிக்கலுக்கு உள்ளாக்கி விட்டது. உச்சநீதிமன்றம் கூறியிருப்பது சமகாலப் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதாகும். எனவே வன்னியர்களுக்கென உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான தரவுகளைத் திரட்டுமாறு தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உடனடியாக அரசாணை மூலமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


1987 ஆம் ஆண்டு நடந்த உரிமைப் போராட்டத்தை விட பல மடங்கு உறுதிமிக்க ஒரு போராட்டத்தை கையில் எடுக்காமல் இருக்கவும் தொழில்நுட்பப் படிப்புக்கான கலந்தாய்வுகள் முடிந்து மருத்துவத்திற்கான கலந்தாய்வுகள் நடக்க இருக்கின்ற இத்தகைய சூழ்நிலையில் இதற்கு மேலும் தனிப்பெரும் சமூகமான வன்னியர்களைத் திட்டமிட்டு புறக்கணிக்காமல்  நீண்ட நெடுங்காலமாக அவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் சமூக அநீதியை களைந்து, அருந்ததியருக்கு உள்ளது போன்று நெகிழ்வுத் தன்மையோடு கூடிய 10.5 சதவிகித தனி இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கிட  எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே தனி சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றி போர்க்கால அடிப்படையில்  நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக மீண்டும் ஒருமுறை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.


*வ.கௌதமன்* 

பொதுச் செயலாளர்

தமிழ்ப் பேரரசு கட்சி

"சோழன் குடில்" 

18.10.2022

No comments:

Post a Comment