Saturday, 1 August 2020

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி இரங்கல் செய்தி.

திரைப்படக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருந்த காலம் அது! உலகத் திரைப்படங்களை தேடி அலையும் வேளையில் தமிழில் நவீன இலக்கியத்தின் அறிமுகம் கிடைத்ததும் அந்த நாட்கள் தான்.

கி. ராஜநாராயணன் தொடங்கி நாஞ்சில் நாடன், சா. கந்தசாமி என ஒவ்வொரு எழுத்தாளர்களையும் கடிதங்கள் வழியாக தொடர்பை வளர்த்துக் கொண்டும், அவர்களது படைப்புகளை இரவு பகல் பாராமல் வாசித்ததும் அந்த  நாட்கள்தான்.

சா. கந்தசாமி அவர்களின் சூரிய வம்சம் தொடங்கி சாயாவனம், அவன் ஆனது, தக்கையின் மீது நான்கு கண்கள் தொகுப்பு வரை அனைத்தையும் ஒரு வார காலத்திற்குள் வாசித்து முடித்தேன். சா. கந்தசாமியின் எழுத்துக்கள் ஒரு கிராமத்து தமிழ் இளைஞனின்  எண்ணங்களையும்,  ஏமாற்றங்களையும், எதிர்பார்ப்புகளையும், அலைக்கழிப்புகளையும் கொண்டிருந்ததால் நான் ஈர்க்கப்பட்டேன்.

எல்லோரும் "சாயாவனம்" நாவலை அவரின் சிறந்த படைப்பாக பாராட்டுவார்கள். அவருடைய "அவன் ஆனது" நாவல் என்னால் மறக்க முடியாதது. அடுத்து  "தொலைந்து போனவர்கள்" என் வாழ்நாளில் இறுதிக்காலம் உள்ளவரை மறக்கமுடியாத பாத்திரங்களால் புனையப்பட்டது. இந்த  இரண்டு நாவல்களையுமே திரைப்படமாக உருவாக்கும் திட்டம் இருக்கின்றது.

எப்பொழுதும் என் மீது தனித்த அன்பும் நட்பும் கொண்டிருந்தவர் சா. கந்தசாமி அவர்கள். அவரது எழுத்துக்களைப் போன்றே அவரும் பாசாங்கற்ற சிறந்த மனிதர்.

படைப்பாளிகள் மறைந்தாலும் அவர்கள் உருவாக்கிய படைப்புகள் இவ்வுலகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும்! அந்த வரிசையில் சா. கந்தசாமி எழுத்துக்கள் என்றும் நிலைபெற்றிருக்கும்.

தங்கர்பச்சான்.

No comments:

Post a Comment