Tuesday, 6 May 2025

சந்தானம் நடிக்கும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தின்

 *சந்தானம் நடிக்கும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு* 





நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் நடைபெற்ற வெளியீட்டிற்கு முன் நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 


இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஆஃப்ரோ பேசுகையில், ''ஒவ்வொரு இன்டர்வியூவிலும் நான் எஸ் டி ஆரின் ரசிகன் என்று சொல்லியிருக்கிறேன். அவர் இந்த மேடையில் இருக்கும்போது நானும் இருப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இதுவே என்னுடைய பெரிய இலக்கு என்றும் சொல்லலாம். 


இந்த குழுவுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறேன். நிறைய சுயாதீன இசை கலைஞர்களுடன் பணியாற்றுவேன். இந்தப் படத்தில் கெளுத்தி என்ற சுயாதீன கலைஞர் பாடல் எழுதியிருக்கிறார். வங்கல் புள்ள விக்கி ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடல்களை எல்லாம் கேட்டு ரசிப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த வாரம் படம் வெளியாகிறது. படத்தை பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்," என்றார். 


நடிகர் நிழல்கள் ரவி பேசுகையில், ''சந்தானத்தின் ரசிகர்களுக்கு என் முதல் நன்றி.  இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளர் ஆர்யா, கிஷோர், சந்தானம், பிரேம் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

சினிமாவில் ஹீரோவாக நடித்து விட்டேன், வில்லனாக நடித்து விட்டேன், கேரக்டராகவும் நடித்துவிட்டேன், காமெடியாக நடிக்கவில்லையே என்று எண்ணியிருந்தேன். இயக்குநர் கார்த்திக் யோகியும் , நடிகர் சந்தானமும் இணைந்து ' டிக்கிலோனா' திரைப்படத்தில் எனக்கு ஒரு நகைச்சுவை வேடத்தை வழங்கினார்கள்.  அதனைத் தொடர்ந்து 'வடக்குப்பட்டி ராமசாமி 'படத்தில் நல்லதொரு கேரக்டரை கொடுத்து நிழல்கள் ரவியை காமெடி நடிகராகவும் வெற்றி பெற செய்தார்கள். இதற்காக சந்தானத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தில் மெக்டவல்ஸ் எனும் கப்பலில் கேப்டனாக பணி புரியும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். சினிமாவில் காமெடியை பார்த்து ரசிக்கிறோம் அல்லது அதை பற்றி விமர்சிக்கிறோம். ஆனால் உண்மையில் காமெடியாக நடிப்பது தான் கஷ்டமானது.  சந்தானம் அதை எளிதாக செய்கிறார் என்றால் அது கடவுளின் கொடை. 


இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான தீபக் குமார் பதேவின் தந்தையும் ஒளிப்பதிவாளர் தான். அவருடைய ஒளிப்பதிவில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். 


இந்த திரைப்படம் முழுவதும் கப்பலின் பின்னணியில் நடைபெறுகிறது. இதற்காக கலை இயக்குநர் மோகன் அற்புதமாக அரங்கங்களை வடிவமைத்திருந்தார்,'' என்றார்.


நடிகை கீதிகா திவாரி பேசுகையில், ''இந்த படத்தில் பணியாற்றியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. சினிமா மீதான சந்தானத்தின் ஈடுபாடு என்னை வியக்க வைத்தது.  படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அக்கறை வெளிப்பட்டது. 20 மணி நேரம் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்ற போதும் உற்சாகம் குறையாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் பணியாற்ற வைத்தார். 


இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


நடிகை கஸ்தூரி பேசுகையில், ''இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக பெரிய முதலாளி ஆர்யாவிற்கும், சின்ன முதலாளி கிஷோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  


நான் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் ரசிகை. சந்தானம் சாருடன் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறேன். இருந்தாலும் இந்த படத்தில் பணியாற்றும் போது அவருடைய எளிமை, கடின உழைப்பை பார்த்து வியந்தேன். அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ என்றும் சொல்வேன். 


நான் தொடக்க காலத்தில் கவர்ச்சியாக நடிப்பது தான் கஷ்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் காமெடியாக நடிப்பது தான் கஷ்டம் என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். 


இயக்குநர் பிரேம் ஆனந்த் என்னிடம் கதையை சொல்லும்போது நீங்கள் சந்தானத்திற்கு அம்மா என்றார், நான் பதறினேன். முதல் காட்சியில் மட்டும் தான் அம்மா, அதன் பிறகு படம் முழுவதும் அலப்பறை தான் என்றார். கதை கேட்கும் போது நான் எப்படி சிரித்தேனோ அதேபோல் தான் ரசிகர்கள் நீங்கள் திரையரங்கத்தில் படத்தை பார்க்கும் போதும் சிரிப்பீர்கள்.  இந்தப் படத்தில் நான் தான் கவர்ச்சி மாம். 


உள்ளொன்று வைத்து புறம் பேசாத, மனதில் தோன்றியதை பட்டென்று பேசும் எஸ் டி ஆரை எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவர் நேர்மையானவர். பெருந்தன்மையானவர். அவரைப்பற்றி வெளியில் நான்கு பேர் நான்கு விதமாக பேசினாலும், அவரைப்பற்றி அவரிடம் பழகியவர்களுக்கு மட்டும் தான் தெரியும். 


எனக்கு மனச்சோர்வாக இருக்கும்போது இப்படத்திற்காக பின்னணி பேச அழைப்பு விடுத்தார்கள். படத்தின் டப்பிங் பார்த்துவிட்டு எனக்கு சரியாகி விட்டது. மனச்சோர்வு பறந்து விட்டது. இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரை வேற மாதிரி பார்த்து ரசிப்பீர்கள். இந்தக் கோடை விடுமுறைக்கு உங்களது கவலைகளை கழட்டி வைத்து விட்டு இந்த படத்தை பார்த்தால் உற்சாகம் அடைவீர்கள், சந்தோஷம் அடைவீர்கள்,'' என்றார். 


இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் பேசுகையில், ''என்னை இயக்குநராக இங்கு நிற்க வைத்திருக்கும் சந்தானத்திற்கும் , இயக்குநர் ராம் பாலாவிற்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உடன் இருப்பவர்களை உயர்த்தி விட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைவதை பார்த்து சந்தோஷம் அடைபவர் தான் சந்தானம். அவருக்கும் ஒரு காட்பாதர் இருக்கிறார். அவருடைய வளர்ச்சியை கண்டு சந்தோஷமடையும் எஸ் டி ஆர் தான் அது. அவரும் இங்கு இருக்கிறார். 


'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தின் இயக்குநர் என்று சொல்லிக் கொள்வதை விட, இப்படத்தின் கதையை நானும் இணைந்து எழுதி இருக்கிறேன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் இயக்குநர் தான் வெளிச்சத்திற்கு வருவார். அந்தப் படத்தின் கதாசிரியர் வெளியே தெரிய மாட்டார். அது போல் இந்த படத்திற்கு நடைபெறக்கூடாது. இந்தப் படத்தில் என்னுடன் முருகன், சேது ஆகிய இருவரும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றால் அதில் இவர்களுக்கும் பங்கு உண்டு. 


இந்தப் படத்தின் ஐடியாவை 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் கதையை சொல்வதற்கு முன்னாலேயே சந்தானத்திடம் சொன்னேன். அவர் ஐடியா நன்றாக இருக்கிறது ஆனால் படத்தின் பட்ஜெட் மிக அதிகம். அதனால் அதற்கான தயாரிப்பாளர் கிடைக்கும் வரை காத்திரு என்றார். சின்ன பட்ஜெட்டில் உன் திறமையை வெளிப்படுத்து, அந்த திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு அதை எடுக்கலாம் என்றார். சந்தானத்தின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது. 'டிடி ரிட்டர்ன்ஸ்' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவர் சொன்னது போல் இப்படத்திற்கான தயாரிப்பாளரையும் கொடுத்தது.‌ 


ஆர்யா போன்ற தூய மனம் கொண்ட தயாரிப்பாளர் எங்களுக்கு கிடைத்தது வரம் தான். எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவரைப் போலவே இப்படத்திற்கு முதுகெலும்பாக செயல்பட்டவர் கிஷோர். 


'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இதிலும் இணைந்து பணியாற்று இருக்கிறார்கள். இதில் ஓ ஜி சாண்டாவை பார்ப்பீர்கள். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை விட இதில் நடித்திருக்கும் கிச்சா எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவரும். 


இப்படத்தின் ஹீரோயின் கீதிகா. அவர் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாளே அழுக்கான ஆடையை கொடுத்து நடிக்க சொன்னோம். எந்தவித தயக்கமும் இல்லாமல் நடித்தார். இந்தப் படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். 


ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் எப்படி ஒரு புதிய வீரரை அணியில் இடம்பெறச் செய்தார்களோ, அதே போல் எங்கள் அணியில் நிழல்கள் ரவியை நாங்கள் இணைத்துக் கொண்டோம். அவருடைய நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவரும். 


இந்த படம் மல்டி ஜானர் மூவியாக இருக்கும். குழந்தைகள் முதல் ஃபேமிலி ஆடியன்ஸ் வரை அனைவரும் ரசிக்கக் கூடிய வகையில் இந்தப் படம் இருக்கும். மனிதனுக்கு உள்ள உணர்வுகள் எல்லாம் இதயம் சம்பந்தப்பட்டது. மன அழுத்தம், பயம், கோபம் இதெல்லாம் மனம் சம்பந்தப்பட்டது. இதயத்தை தொடும் படத்தை கொடுப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் ஸ்டிரஸ் பஸ்டர் மூவியை கொடுப்பதற்கு சந்தானம் மட்டும்தான் இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். நம்பி வாங்க...! சிரிச்சிட்டு போங்க..! நன்றி,'' என்றார். 


நடிகர் ஆர்யா பேசுகையில், ''இந்தப் படத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் ஐடியாவை சந்தானம் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  ஏற்கனவே மூன்று பாகங்களை எடுத்திருக்கிறார்கள். இனிமேல் இதில் என்ன புதிதாக சொல்லப் போகிறார்கள் என்ற எண்ணத்துடன் தான் இயக்குநர் பிரேம் ஆனந்திடம் கதையைக் கேட்க தொடங்கினேன். ஆனால் அவர் கதையை சொன்ன விதம் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையைக் கேட்டு முடித்தவுடன் இதனை திரைக்கதையாக எழுதிக் கொண்டு வந்தால் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றேன். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து கடுமையாக உழைத்து திரைக்கதையாக கொடுக்கும் போது பெரிய பட்ஜெட் படமாக இருந்தது. இதற்காக நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் பேசினேன்.‌ அவர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் தான் கிஷோரை அறிமுகப்படுத்தினார்கள். இந்த திரைப்படத்திற்காக சந்தானத்தையும், இயக்குநர் பிரேம் ஆனந்தையும் கிஷோரிடம் ஒப்படைத்து விட்டேன். இதுதான் என்னுடைய பணி. அதன் பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திட்டமிட்டு உருவாக்கிய படம் தான் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. 


ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் எனும் நம்பிக்கை இருக்கிறது. 


இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தில் நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் நட்புக்காகவே ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு விருந்தினராக இங்கு வருகை தந்த சிலம்பரசனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். 


நடிகர் சந்தானம் பேசுகையில், ''தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2, டி டி ரிட்டர்ன்ஸ் என அனைத்து படங்களுக்கும் எழுத்து வடிவில் எங்களுக்கு உதவிய எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இருந்தாலும் அவருடைய ஆன்மா எங்கள் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் என நம்புகிறேன். 


இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள எஸ் டி ஆர் அவர்களுக்கு நன்றி. அவரைப் பற்றி நான் பல மேடைகளிலும், பல இன்டர்வியூக்களிலும் சொல்லியிருக்கிறேன், அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று. அவர்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி , உயரத்திற்கு அழைத்துச் சென்றார்.  'காதல் அழிவதில்லை' படத்தில் துணை நடிகராக நடித்திருக்கிறேன். அதனை பார்த்து தான் 'மன்மதன்' படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார் சிலம்பரசன். 

படப்பிடிப்பு தளத்தில் எனக்கான அறிமுகக் காட்சி பற்றிய விவாதம் நடைபெற்றது. "நீ லொள்ளு சபாவில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கிறாய். உன்னுடைய அறிமுகக் காட்சியில் ரசிகர்களிடத்தில் கைதட்டல் வரவேண்டும். அதற்காக எப்படி உன்னை அறிமுகப்படுத்துவது" என விவாதித்து கொண்டிருக்கிறோம் என்றார். அந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டு என்னுடைய யோசனையையும் சொன்னேன்.‌ அதன் பிறகு அந்த காட்சி படமாக்கப்பட்டது. இதை ஏன் நான் இப்போது இங்கு சொல்கிறேன் என்றால், அன்றைய தினம் சினிமாவில் திரையில் நான் தோன்றும்போது கைத்தட்டல் இருக்க வேண்டும் என்று எனக்காக எடுத்த அக்கறையும், அன்பும்  இன்று வரை குறையாமல் தொடர்கிறது. இது போன்றதொரு நல்ல மனம் படைத்த சிலம்பரசன் நண்பராக கிடைத்ததற்கு இறைவனுக்குத்தான் நான் நன்றியை சொல்ல வேண்டும்.  சிம்பு ஐ லவ் யூ. எப்போதும் அவருக்கு பின்னால் நான் இருப்பேன். எஸ் டி ஆர் 49லும் என்னுடைய பங்களிப்பை வழங்குவேன். என்னுடைய பெற்றோர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.


அடுத்ததாக என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான ஆர்யா.  ஆர்யாவை மட்டும் தான் எனக்குத் தெரியும். ஆர்யா தான் நிஹாரிகா என்டர்டெய்ன்மென்டை சார்ந்த கிஷோரை அறிமுகப்படுத்தினார்.  அவரை நான் 'கிளாரிட்டி 'கிஷோர் என்று தான் அழைப்பேன்.  அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


ஆர்யா என் உயிர் நண்பர். 'கல்லூரியின் கதை' படத்தில் தான் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். படப்பிடிப்பு தளத்தில் எங்களுடன் நடித்த அழகான பெண்களை கவர்வதற்காக ஆர்யா என்னை காமெடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட்டார். அந்த அழகான பெண்கள் சற்று சந்தேகத்துடன் என்னை  பார்த்தார்கள். நண்பர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அவர்கள் முன்னால் நானும் சில காமெடியை பேசி நடித்து காட்டினேன். இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும் கவனித்து விட்டு, எங்களிடம் கேட்டனர், பிறகு சமாளித்தோம். ஆனால் ஆர்யா காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விடவில்லை. 'சேட்டை' படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என டைட்டிலில் இடம் பெற வைத்தார். 'லிங்கா' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் போது அவர் என்னிடம் நீங்கள் காமெடி சூப்பர் ஸ்டாரா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே என் நண்பர் ஆர்யா செய்த வேலை அது என விளக்கம் அளித்தேன். 


இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ஆனந்த் ஆர்யாவிடம் விவரித்தார் அவருக்கும் பிடித்து விட்டது. படத்தின் பணிகள் தொடங்கின. இந்த தருணத்தில் நான் சென்னையின் புறநகர் பகுதியில் வீடு ஒன்றினை வாங்கி, அதனை சீரமைத்து அங்கு குடும்பத்தினருடன் சென்று வசிக்கலாம் என திட்டமிட்டேன். இதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் என்னுடைய மனைவியும், அம்மாவும் அந்த வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வருவார்கள். இந்தத் தருணத்தில் ஒரு முறை ஆர்யா எனக்கு போன் செய்த போது வீட்டை புதுப்பிக்கும் பணியில் இருக்கிறேன் என்று சொன்னேன் உடனடியாக அவர் அந்த வீட்டிற்கு வந்தார். வீட்டை முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்டு என்று சொல்லிவிட்டார். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்க, ஆர்யா அவரது நண்பருக்கு போன் செய்து வீட்டை இடிக்கும் பணியில் தீவிரம் காட்டி விட்டார். இந்த விஷயத்தை நான் எங்கள் வீட்டில் தெரிவிக்கவில்லை. அடுத்த வாரம் என்னுடைய அம்மாவும், மனைவியும் அந்த வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு வீடு இல்லாததை கண்டு திகைத்து விட்டார்கள். அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டை காணவில்லை என்று சொன்னார்கள். அதன் பிறகு அவர்களிடம் நடந்ததை சொன்னேன். ஆர்யா சொன்னால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் சொன்னேன். அப்போது என்னுடைய அம்மா நீங்கள் இருவரும் படத்தில்தான் இப்படி நடிப்பீர்கள். நிஜத்திலுமா இப்படி இருப்பீர்கள் எனக் கேட்டார். இந்த லெவலில் தான் எங்களுடைய பிரண்ட்ஷிப் இருக்கிறது. 


'கல்லூரியின் கதை' படத்தில் தொடங்கிய எங்கள் நட்பில் நாங்கள் இருவரும் எதற்காகவும் பயந்ததில்லை. எதுவாக இருந்தாலும் தைரியமாக செய்வோம். வாழும் வரை சந்தோஷமாக வாழ்வோம். எது வந்தாலும் அதனை எதிர்கொள்வோம் என்பார். அந்த ஒரு சக்தி தான் அவரை இங்கு தயாரிப்பாளராக நிற்க வைத்து இருக்கிறது. என்னையும் நாயகனாக உயர்த்தி இருக்கிறது. 


இந்தப் படத்தில் நடிக்கும் போது வேறு எந்த படத்திலும் நடிக்காதே உன் அனைத்து பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆர்யா நம்பிக்கை கொடுத்தார். படத்தை வெற்றி பெற செய்வது மட்டும்தான் உன் வேலை என்றார் அதற்காக இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆர்யாவுக்கு தருவேன் என்று நம்புகிறேன். 


இந்தப் படத்தின் இயக்குநரான பிரேம் ஆனந்தை நான் தமிழ் சினிமாவின் கிறிஸ்டோபர் நோலன் என்று தான் சொல்வேன். ஒரு கதையை சொன்னால் அதனை பல லேயர்களில் சொல்வார். 'டிடி ரிட்டர்ன்ஸ்' படம் ஒரு ஹாரர் படம் என்றாலும் அதில் ஒரு கேம் ஷோ இருக்கும். அந்த கேமிற்குள் ஒரு திருட்டு கும்பலின் அட்வென்ச்சர் இருக்கும். இப்படி மல்டி லேயரில் ஒரு கதையை கச்சிதமாக உருவாக்குவார். அதேபோல் தான் இந்தப் படத்தின் கதையையும் அவர் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் தெளிவாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறார். அந்த வகையில் ஆனந்த்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்திற்காக பணியாற்றிய முருகன், சேது உள்ளிட்ட என்னுடைய குழுவினருக்கும், இந்த படத்தில் என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தில் மாறனுக்கு டிவி காமெடி இருக்கிறது. ரெடின் கிங்ஸ்லிக்கு தலைகீழாக நடக்கும் காமெடி இருக்கிறது. மொட்டை ராஜேந்திரனுக்கு ஒரு எலி காமெடி இருக்கிறது. நிழல்கள் ரவி சாருக்கு ஒரு டாய்லெட் காமெடி இருக்கிறது. யாஷிகா ஆனந்திற்கு ஒரு பாட்டில் காமெடி இருக்கிறது. கஸ்தூரி மேடத்திற்கு ஒரு புக் காமெடி இருக்கிறது. இதற்கெல்லாம் திரையரங்கத்தில் கைத்தட்டல் கிடைக்கும். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நகைச்சுவை காட்சிகளில் பங்களிப்பு இருக்கிறது. 


ஒரு படத்திற்கு மிகப்பெரிய பலமே இசைதான். இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கின்றன. படத்தைப் பார்க்கும்போது பின்னணி இசைக்காகவும் நீங்கள் கைதட்டுவீர்கள். குறிப்பாக மொட்டை ராஜேந்திரனுக்காக இவர் வாசித்திருக்கும் பின்னணி இசை ரசிகர்களை கவரும். இதற்காக ஆஃப்ரோவுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தில் ஹீரோயின் கீதிகா வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


இந்த திரைப்படத்தில் புதிதாக என்ன இருக்கிறது என்றால், ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் கௌதம் வாசுதேவ் மேனனும், செல்வராகவனும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.  


ஒருவர் மிகுந்த உயரத்திற்கு செல்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டும் காரணம் அல்ல. உதாரணத்திற்கு ராமாயணத்தில் அனைவரும் ராமரை புகழ்கிறார்கள் என்றால்.. அவருடன் இருந்த சீதை, லட்சுமணன், விபீஷணன், பரதன், ராவணன் என எல்லா கேரக்டரும் சேர்ந்தது தான் ராமர் எனும் வெளிப்பாடு. அந்த வகையில் ஒருவர் உயரத்திற்கு செல்கிறார் என்றால் அவருடைய தனித்திறமை மட்டும் அதற்கு காரணம் அல்ல. அவரை சுற்றி  இருப்பவர்களும் தான் காரணம் என்பேன். இங்கு நான் உயர்வதற்கு சிலம்பரசன், ஆர்யா என பலரும் காரணமாக உள்ளார்கள். 


மே 16ம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் காமெடியை இடம்பெறச் செய்திருக்கிறோம். டி டி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை விட மும்மடங்கு காமெடியுடன் கூடிய விருந்து இருக்கிறது. அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள்,'' என்றார். 


நடிகர் சிலம்பரசன் பேசுகையில், ''இந்தப் படத்தின் முந்தைய பாகங்களை பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். நான் முதலில் சினிமா ரசிகன். ஒரு ரசிகனாகத்தான் திரைப்படத்தை பார்ப்பேன். அது சந்தானம் படமாக இருந்தாலும் அவருக்கும், எனக்குமான நெருங்கிய தொடர்புகளை எல்லாம் படம் பார்க்கும்போது சற்று தள்ளி வைத்து விடுவேன். அந்த வகையில் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய மெனக்கெட்டு வித்தியாசமாக ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் பார்ட் 1 பார்ட் 2 என இரண்டு பாகத்தையும் சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக சந்தானத்தின் உடல் மொழி, வசன உச்சரிப்பு நன்றாக இருக்கிறது. முதலில் இந்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


நடிகர் ஆர்யா எனக்கு நெருங்கிய நண்பர். நண்பர் ஆர்யாவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.


இயக்குநர் பிரேம் ஆனந்த் - சந்தானத்தின் பிரத்யேக குழுவில் இருப்பவர். இங்கு அவருடைய குழுவில் உள்ள முருகன், சேது ஆகியோரை மேடையில் சந்தானம் அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவரும் 'மன்மதன்' பட காலகட்டத்திலேயே படப்பிடிப்பு தளத்தில் இவர்களுடன் சந்தானம் விவாதித்துக் கொண்டிருப்பார். இவர்கள் யார் என மனதிற்குள் கேள்வி எழும்.  சந்தானத்திடம் கேட்ட போது என்னுடைய நண்பர்கள் தான் என விளக்கம் அளித்தார். இதை ஏன் நான் விவரிக்கிறேன் என்றால் அன்று தொடங்கிய அவர்களின் நட்பு இன்று வரை தொடர்கிறது. இந்தப் படம் வரை ஒரு துளி அன்பும், அக்கறையும் குறையாமல் அவர்கள் தங்களுடைய உழைப்பை வழங்குகிறார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதனால் இயக்குநர் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட அந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


இசையமைப்பாளர் ஆஃப்ரோ புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


'வேட்டை மன்னன்' படத்தில் நடித்த போதே எனக்கு ரெடின் கிங்ஸ்லியை தெரியும். அப்போதே இயக்குநர் நெல்சனிடம் இவர் எதிர்காலத்தில் பெரிய காமெடியனாக வருவார் என்று சொன்னேன். அப்போது நெல்சன் சிரித்தார். இன்று நெல்சன், ரெடின் இல்லாமல் எந்த படத்தையும் இயக்குவதில்லை. 


இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 


இந்தப் படத்தை பார்த்தேன். எங்கள் இயக்குநர் கௌதம் மேனனை இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை.  இதற்காகவாவது உங்களை நான் சும்மா விடப்போவதில்லை. இருந்தாலும் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். 


சந்தானத்தை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. சந்தானம் எல்லா மேடைகளிலும் உங்களை குறிப்பிட்டு பேசுகிறார். இதன் பின்னணி என்ன என்று என்னிடம் பலமுறை பலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் அதுதான் அவரின் கேரக்டர் என பதிலளித்திருக்கிறேன்.  


இந்தத் தருணத்தில் அனைவரிடத்திலும் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு உதவியை செய்கிறீர்கள் என்றால் எதையும் எதிர்பார்க்காமல் செய்யுங்கள். எதிர்பார்ப்பை மனதில் வைத்துக் கொண்டு யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் நாம் செய்த உதவியை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு உரிய மரியாதையை அளித்து பேசுவார்கள். பலர் இதை புறக்கணித்து விடுவார்கள். அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யுங்கள். 


சந்தானத்தின் இப்படம் அவருடைய நெக்ஸ்ட் லெவலாக இருக்கும். 


'எஸ் டி ஆர் 49' இல் நாங்கள் இருவரும் இணைந்து இருக்கிறோம். ஏன் என்பதை சொல்ல விரும்புகிறேன். இன்றைய சினிமாவில் காமெடி குறைந்து விட்டது.

No comments:

Post a Comment