Thursday, 10 July 2025

யாதும் அறியான்’ படத்தில் விஜயின் அரசியல் தொடர்பான காட்சிகள் வைத்தது ஏன்? - படக்குழு விளக்கம்

 ’யாதும் அறியான்’ படத்தில் விஜயின் அரசியல் தொடர்பான காட்சிகள் வைத்தது ஏன்? - படக்குழு விளக்கம்




விஜயின் அரசியல் காட்சிகளும், சிவகார்த்திகேயனின் பாராட்டும்! - அரசியல் மற்றும் திரையுலக கவனத்தை ஈர்த்த ‘யாதும் அறியான்’!


வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள  சைக்கோ திரில்லர் படம் ‘யாதும் அறியான்’ ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது!



தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசியல் இரண்டையும் சற்று அதிர செய்திருக்கிறது ‘யாதும் அறியான்’ படத்தின் டிரைலர். டிரைலரே இப்படி என்றால், படம் எப்படி இருக்கும்!, என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மக்கள் மனதில் பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. குறிப்பாக, டிரைலரில் 2026 ஆம் ஆண்டு விஜய் முதல்வராகி விடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து, த.வெ.க தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் டிரைலரை கொண்டாடி வருவதோடு, மறுபக்கம் திரையுலக பிரபலங்கள் பலர் படத்தின் டிரைலரை பாராட்டி வருகிறார்கள்.


வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘யாதும் அறியான்’ படத்தின் டிரைலர் மக்களிடம் பெற்ற வரவேற்பு மற்றும் திரையுலகம் மற்றும் அரசியல் உலகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கும் குறித்து ‘யாதும் அறியான்’ படக்குழு பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். 


படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எம்.கோபி படம் குறித்து கூறுகையில், “நான் விஜய் ரசிகன், சினிமாத்துறையில் பயணிக்கும் போது அனைவருக்கும் ஏற்படுவது போல தான், அவரை வைத்து ஒரு படம் இயக்க மாட்டோமா! என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரது அடுத்தடுத்த அறிவிப்புகள் வந்துக் கொண்டிருந்த நிலையில், 69 வது படத்துடன் அவர் நடிப்பதை நிறுத்துவிடப் போகிறார், என்பது அதிர்ச்சியாக இருந்தது. இனி அவருடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம், அவரைப் பற்றி பேசுவதற்கான இடம் படத்தில் அமைந்ததாலேயே அப்படிப்பட்ட காட்சிகளை வைத்தோம். அது முழுக்க முழுக்க கற்பனையானதே தவிர மற்றபடி அதில் வேறு எந்த அரசியல் பிரச்சாரமும் இல்லை.” என்றார்.


படத்தின் நாயகன் தினேஷ் கூறுகையில், “மிகப்பெரிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தாலும், சினிமாவை பொறுத்தவரை இயக்குநர் என்ன சொன்னாரோ அதை கேட்டு மட்டுமே நடித்திருக்கிறேன். இந்த படத்திற்காக எனது பின்புலத்தை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு கடுமையாக உழைத்திருக்கிறேன். சுமார் 15 நாட்கள் கடியான தூக்கம் இல்லாமல், உழைத்திருக்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன், என்று இயக்குநர் முடிவு செய்தப் பிறகு இந்த படத்திற்காக எப்படி எல்லாம் உழைக்க முடியுமோ அப்படி உழைத்திருக்கிறேன்.


படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருந்த விஜய் பற்றிய காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விஜயின் அரசியல் பிரச்சாத்திற்கான விளக்கம் போல் டிரைலர் அமைந்திருப்பதாகவும் பலர் சொல்கிறார்கள். ஆனால், முதலில் என் படத்தில் இப்படிப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் வேண்டுமா!, என்று நான் யோசித்தேன், தயங்கினேன். ஆனால், இயக்குநரின் கண்ணோட்டத்தை பொறுத்தவரை அந்த காட்சிகள் திரைக்கதையோடு பயணிப்பதால், ஒரு நடிகனாக அதை ஏற்றுக் கொண்டேன்.” என்றார்.


2024-ல் இருந்து 2026-க்கு கதை நகர்கிறதே படத்தில் டைம் டிராவலர் கான்சப்ட் எதாவது இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் எம்.கோபி, “படத்தில் டைம் டிராவலர் கான்சப்ட் எதுவும் இல்லை, ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள் இருக்கும், அது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும். மேலும், மற்ற சைக்கோ திரில்லர் படங்களுக்கும் எங்கள் படத்திற்கும் உள்ள வித்தியாசமே, டைம் டிராவல் போன்ற ஒரு பயணம் தான். அதை நாங்கள் எப்படி கையாண்டிருக்கிறோம், என்பதே மிக சுவாரஸ்யமாக இருக்கும்.” என்றார்.


சிவகார்த்திகேயனின் பாராட்டு குறித்து கூறிய நாயகன் தினேஷ், “படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், டிரைலர் மிகவும் நன்றாக இருக்கிறது, என்று சொன்னதோடு. ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, என்று பல விசயங்களை பாராட்டி பேசினார். படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தவர் நடிகர்களின் நடிப்பு, மேக்கிங் என அனைத்தும் மிக சிறப்பாக இருப்பதாக கூறினார்.” என்றார்.


முதல் படம் நடிப்பு அனுபவம் குறித்து பேசிய நடிகர் தினேஷ், “சிறு சிறு வேடங்களில் சில படங்களில் நடித்தாலும், இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறேன். இது எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல. ஒரு நண்பர் மூலமாக எனக்கு இயக்குநர் கோபி அறிமுகமானார். அவர் என்னை சந்தித்த போது, அவர் வைத்திருந்த கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன், என்று அவர் உணர்ந்ததால் மட்டுமே என்னை நடிக்க வைத்தார். நானும், 15 நாட்கள் தூக்கம் இல்லாமல் இரவு, பகலாக நடித்திருக்கிறேன். நிச்சயம் படம் மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.


இந்த தினேஷை ஹீரோவாக நடிக்க வைப்பதற்காக எழுதப்பட்ட கதையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் கோபி, “தினேஷை சந்திப்பதற்கு முன்பாகவே இந்த கதையை நான் எழுதி முடித்து விட்டேன். நானே தயாரிக்க முடிவு செய்த போது குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டில் பண்ண வேண்டும் என்ற திட்டத்தில் அதற்கான பணிகளை செய்துக் கொண்டிருந்தேன். அப்போது நண்பர் மூலம் தினேஷை சந்தித்தேன், அவருக்கு நடிக்க ஆர்வம் இருப்பதையும் அறிந்தேன், அவருடன் பேசிய போது, என் கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அதை தொடர்ந்து அவரிடம் கதையை விவரித்தேன், அவருக்கும் கதை பிடித்திருந்தது. அதே சமயம், அவரிடம் என் கதைக்கான ஹீரோவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதால் தான் இந்த படத்தில் நடிக்க வைக்கிறேன், மற்றபடி படத்தின் பொருளாதரம் தொடர்பாக உங்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை, என்று கூறிவிட்டேன்.


தினேஷும் தனது பணி உள்ளிட்ட அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு அறிமுக நடிகராக எங்களுடன் பயணித்தார். படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களுடன் மிக சாதாரணமாக பழகி, படக்குழு அனுபவித்த அனைத்த கஷ்ட்டங்களையும் அவரே அனுபவித்து, படத்தை 15 நாட்களில் முடிக்க உதவியாக இருந்தார். ஒரு நடிகராக நிச்சயம் இந்த படத்தில் அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார், இந்த படமும் அவரது திறமையை வெளிக்காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.” என்றார்.


பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார்.  இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.


படம் முழுவதும் ஐந்து கதபாத்திரங்கள் மட்டுமே இடம் பெற்றாலும், அவர்களை கொண்டு திரைக்கதை மற்றும் காட்சிகளை திரில்லிங்காக மட்டும் இன்றி, சைக்கோ திரில்லர் பாணியில் இதுவரை பார்த்திராத ஒரு பாணி கையாளப்பட்டிருக்கும் இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


தொழில்நுட்பக் குழு:


ஒளிப்பதிவு : எல்.டி

இசை : தர்ம பிரகாஷ்

கலை : நெல்லை லெனின்

பாடல்கள் : எஸ்.கே.சித்திக்

பி.ஆர்.ஓ : தர்மதுரை, சுரேஷ்சுகு

No comments:

Post a Comment