Saturday, 13 September 2025

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சக்தி திருமகன்' படம் மூலம்

 *நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சக்தி திருமகன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருப்தி ரவிந்தரா!*






'அருவி' மற்றும் 'வாழ்' படங்கள் புகழ் இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சக்தி திருமகன்' படம் மூலம் திறமையான இளம் கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார் மகாராஷ்டிரா துலேவைச் சேர்ந்த நடிகை திருப்தி ரவிந்தரா. இந்தப் படம் செப்டம்பர் 19, 2025 அன்று வெளியாகிறது. 


திரை வசீகரமும் திறமையும் கொண்ட கதாநாயகிகளை தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும். அந்த வகையில், கணினி அறிவியலில் பட்டம் பெற்ற முன்னாள் மென்பொருள் பொறியாளரான திருப்தி, ஐந்து வருடங்கள் மேடை நாடக அனுபவம் பெற்ற பிறகு நடிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கிறார்.  மேடை நடிப்பில் வலுவான அடித்தளம் பெற்றது மட்டுமல்லாது ஈஸ்டர்ன் மசாலா, லிசோல், ஜெப்டோ, ஐஇடிஎல் மற்றும் சைடஸ் உள்ளிட்ட பல தேசிய விளம்பரங்களில் பணிபுரிந்த அனுபவமும் பெற்றிருக்கிறார். 


'சக்தி திருமகன்' படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “நான் நன்கு நடிப்பு பயிற்சி எடுத்த களம் தியேட்டர் நாடகம் தான்.  தற்போது 'சக்தி திருமகன்' படத்தில் இயக்குநர் அருண் பிரபு, விஜய் ஆண்டனி சார் மற்றும் படக்குழுவினருடன் பணிபுரிந்ததும் இந்தப் படம் மூலம் அறிமுகமாவதும் என் வாழ்வின் பெருமையான தருணம். இந்தப் படம் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்" என்றார். 


தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாகவும் ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாகவும் திருப்தி தமிழ் மொழி கற்றுக் கொண்டிருக்கிறார். ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் முறைக்காக அவர் தமிழ் சினிமாவை வியந்து பார்க்கிறார். 


'சக்தி திருமகன்' படத்தில் கதாநாயகியாக அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானது. நடனம் மற்றும் யோகா தெரிந்தவரான திருப்தி தனது திறமையை வெளிப்படுத்தும் அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் பன்மொழிகளிலும் நடிக்கத் தயாராக உள்ளார்.  


ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்கள் மற்றும் படங்களை கொடுக்கும் திறமையான இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார் திருப்தி. 


'சக்தி திருமகன்' படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிம்றனர். புதுமுக நாயகி திருப்தி தமிழ் சினிமாவில் திறமை, நளினம் மற்றும் சாதுரியத்துடன் நிச்சயம் தனக்கான இடத்தைப் பிடிப்பார்!

No comments:

Post a Comment