Saturday, 15 November 2025

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த 'ஆண்பாவம் பொல்லாதது' படக்குழு

 *ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த 'ஆண்பாவம் பொல்லாதது' படக்குழு*








டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட 'ஆண்பாவம் பொல்லாதது' எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 


தயாரிப்பாளர்கள் டி. கே. டி. நந்தகுமார் மற்றும் எம். எஸ். கே. ஆனந்த் ஆகியோரின் இணை தயாரிப்பில் பிளாக் ஷீப் ஃபைண்ட்ஸ் ( Black Sheep Finds) நிறுவனத்தின் படைப்பு பங்களிப்புடன் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பதினைந்து கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வரும் நிலையில் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணமாக அமைந்த ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் நடிகர் ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் பேசுகையில், 


'' நேற்றைய நினைவுகள் இனிமையாக 

இன்றைய நினைவுகள் அனுபவங்களாக நாளைய கனவுகள் நிஜமாக நாங்கள் வித்திட்ட இந்த விதைக்கு ஆதரவு அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தின் வெற்றி நிறைய விசயங்களை பார்க்க வைத்திருக்கிறது. நான் பார்க்காத பல விசயங்களை இந்தப் படத்தின் மூலம் பார்த்தேன். ஒரு படத்தை உருவாக்கினாலும்... அந்தப் படத்தை நாம் பலமுறை பார்த்தாலும்... இந்த இடத்தில் திரையரங்கத்தில் ரசிகர்கள் சிரிப்பார்களா..! என்ற தயக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த தயக்கத்தை உடைத்து கவலைப்படாமல் தூங்கச் சொல்லுங்கள் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எங்களுக்கு முதலில் சொன்ன பத்திரிகையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் என் முதல் நன்றி. பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு நிறைய பேர் சமூக வலைதளங்களில் எழுத்தாகவும், வீடியோவாகவும் படத்தைப் பற்றி எழுதினீர்கள். அதன் பிறகு மக்கள் இதனை ஏற்றுக்கொண்டு திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி அடையச் செய்திருக்கிறார்கள். இதுதான் இந்த பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணம். 


ஆண்களின் அக வாழ்க்கையை பற்றி பேச வேண்டும். இதற்கு முன் இதைப் பற்றி பேசிய படங்கள் குறைவு. இன்றைய சமூகத்திற்கு அது அவசியம் தேவைப்படுவதால்.. இதைப் பற்றிய முதல் விதையை பிளாக் ஷீப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் தான் எங்களிடம் சொன்னார்.‌ அதன் பிறகு இதனை வலைத்தொடராக உருவாக்கலாம் என திட்டமிட்டோம். அதன் பிறகு இதற்கான கதையை எழுதுவதற்காக கதாசிரியர் சிவக்குமார் முருகேசனிடம் கொடுத்தோம். அவர் திரைக்கதையை முழுவதுமாக எழுதி முடித்த பிறகு அதை வாசிக்கும் போது இதை திரைப்படமாக உருவாக்கலாம் என திட்டமிட்டோம்.  அதனைத் தொடர்ந்து இந்த கதை இயக்குநர் கலையரசன் தங்கவேலிடம் செல்கிறது. பிறகு ரியோ ராஜிடம் செல்கிறது. பிறகு டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு செல்கிறது. அங்கு இது இறுதி வடிவம் பெறுகிறது. இவர்கள் அனைவரும் வைத்த நம்பிக்கையால் தான் இப்படம் உருவானது. அதன் பிறகு இதில் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் இணைந்தனர். 


இந்தப் படத்தில் எனக்கும் நடிப்பதற்கு  வாய்ப்பளித்தனர். எனக்கான திரை பகிர்வினை வழங்கிய ரியோ ராஜுக்கும் நன்றி.‌ இந்தப் படத்தின் மூலம் என்னை நடிகராக அனைவருக்கும் அறிமுகப்படுத்திய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 


இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் பிளாக் ஷீப் நிறுவனத்திலிருந்து ஏராளமான கலைஞர்கள் உருவாகி திரையுலகில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தொடர்ந்து நாங்கள் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். அவர்களுக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா ' படத்தில் நடிப்பதற்கு முன்பிருந்தே நடிகர் ரியோ ராஜை நான் ஸ்டார் என்று தான் குறிப்பிடுவேன். அவர்தான் நான் ஒரு நடிகர் என்று சொல்வார். இந்த படத்தின் மூலம் ஸ்டாராகி இருக்கிறார்.‌ இதற்கு ஆண்பாவம் பொல்லாதது அழுத்தமான காரணமாகி இருக்கிறது. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்'' என்றார். 


இயக்குநர் கலையரசன் தங்கவேல் பேசுகையில், 


''கதாசிரியர் சிவக்குமார் முருகேசனுடன் இப்படத்தின் வெற்றியை பகிர்ந்து கொள்கிறேன். அவருடைய எழுத்தை நான் படமாக்கினேன். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தை பார்த்து விமர்சனம் செய்த விமர்சகர்கள், திரையுலக பிரபலங்கள், டிஜிட்டல் திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


எனக்கு இந்த படத்தில் தயாரிப்பாளர்கள் எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது பற்றி மூன்று நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 


இந்தப் படத்தில் எங்கும் விலங்குகள் தொடர்பான காட்சிகள் இல்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆடு கத்தும் காட்சி இடம் பிடித்திருக்கும். ஆடு கத்தும் குரல் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். ஆனால் இதற்கான பணிகள் அதிகம். செலவும் அதிகம். இருந்தாலும் என்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து விலங்குகள் நல வாரியத்திடம் முறையாக அனுமதி பெற்று அந்த காட்சிக்கு ஆதரவளித்தார்கள்.


பத்திரிகையாளர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பித்த பிறகு ஒரு சிறிய மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அந்த தருணத்தில் இந்தப்படம் கியூப் எனும் திரையிடும் தொழில்நுட்பம் மூலம் தமிழகம் முழுவதும் 180 திரையரங்குகளுக்கும் சென்று விட்டது. இதற்குப் பிறகு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால் .. ஒரு பிரதிக்கு குறைந்தபட்சம் 15,000 செலவாகும். நான் இது தொடர்பாக கேட்டபோது என்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நெருக்கடியான தருணத்திலும் எனக்கு ஆதரவளித்து திருத்தத்தை மேற்கொண்டார்கள்.


என் சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் சிறிய நகரம் என்றால் அது ஒட்டன்சத்திரம் தான். அங்கு இந்தப் படம் வெளியானால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்து எங்கள் ஊர் திரையரங்கில் இந்தப் படம் வெளியானது. 


தயாரிப்பாளர்கள் சினிமாவை வணிகமாக கருதாமல்.. நேசத்திற்குரிய படைப்பாக கருதியதால் தான் இது நடைபெற்றது. 


ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதற்காக சம்மதம் தெரிவித்தவுடன் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. 


இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இதுவரை தொடர்ந்து ஆதரவு தரும் ஊடகங்களுக்கு நன்றி. பத்திரிகையாளர் காட்சி திரையிட்ட பிறகு உங்களின் பாராட்டும், வாழ்த்தும் எங்களை உற்சாகமாக்கியது. அன்று இரவு நாங்கள் உறங்கவே இல்லை.  மகிழ்ச்சியில் திளைத்தோம். இத்திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு நீங்கள் கொடுத்த முதல் பாராட்டு தான் காரணம். உங்களுடைய பாராட்டுகள் தான் தமிழக முழுவதும் பரவி இப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டது. படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து கொண்டாடி வரும் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார். 



நடிகை மாளவிகா மனோஜ் பேசுகையில், 


''ஜோ படத்திற்குப் பிறகு நான் தமிழில் நடிக்கவில்லை. என்னிடம் பலரும் ஏன் அதற்குப் பிறகு தமிழில் நடிக்கவில்லை? என கேட்டார்கள். அதற்கு பதில் தான் இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன்.  இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய சிறந்த சக நடிகராக ரியோ ராஜை பார்க்கிறேன்.‌ படத்திற்கு பேராதரவு அளித்த தயாரிப்பாளருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. ஜோ படத்திற்கும் சித்து குமார் தான் இசை. இந்தப் படத்திற்கும் அவர்தான் இசை. என்னுடைய கலைப் பயணத்தில் எனக்காக சிறந்த இசையை வழங்கியவர் அவர். அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 



தயாரிப்பாளர்கள் வெடிகாரன்பட்டி எஸ். சக்திவேல் மற்றும் விஜயன் பேசுகையில், 


'' எங்கள் நிறுவனத்தில் இருந்து தயாரித்து வெளியான அனைத்து படங்களுக்கும் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த படத்திற்காக உழைத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றினார்கள். அவர்களுக்குள் ஒரு இணைப்பு இருந்தது.‌ அவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து வளர்ந்தவர்கள் போல் தான் எங்களுக்கு தோன்றியது. இது போன்றதொரு குழுவினை நாங்கள் இதுவரை கண்டதில்லை. குழுவாக தொடரும் வரை இவர்கள் வெற்றி கூட்டணியாக வலம் வருவார்கள். 


படத்தை தயாரித்து சம்பாதிப்பது என்பது வேறு. சில படங்கள் எதிர்மறையான அல்லது கலவையான விமர்சனங்களை எதிர் கொண்டாலும் எங்களுடைய முதலீடு கிடைத்து விடுகிறது. ஆனால் அந்தப் படத்தை பற்றி எங்களால் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள இயலாது. ஆனால் ஆண்பாவம் பொல்லாதது எனும் இந்த திரைப்படத்தை பொறுத்தவரை என்னை சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் நல்லதொரு படத்தை தயாரித்திருக்கிறீர்கள் என வாழ்த்தும்போது பெருமிதமாக இருக்கிறது. இந்தப் படம் ஒரு வணிக ரீதியான வெற்றியை விட எங்களுக்கு மரியாதையை சம்பாதித்துக் கொடுத்த படம் என்று குறிப்பிடலாம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. 


இந்தப் படத்தை பார்த்தவர்கள் நிறைய பேர் எங்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக எங்களிடமும் சொன்னார்கள். இதை கேட்கும்போது பெருமையாக இருந்தது. இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய பிளாக் ஷீப் குழுவிற்கும் நன்றி. தொடர்ந்து இவர்களுடன் பயணிக்கவும் விரும்புகிறோம். 


இந்தப் படத்தை வெளியிடுவதில் பங்களிப்பு செய்த ஏஜிஎஸ் சினிமாஸ்- ஏபி இன்டர்நேஷனல் மற்றும் உலகம் முழுவதும் இப்படத்தை திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி. 


வெளிநாடுகளில் ஒரு வாரம் கழித்து இப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் குறிப்பிடப்படும் கணவன்- மனைவி பிரச்சினை இங்கு மட்டுமல்ல நாடு கடந்து உலகம் முழுவதும் உள்ளது. அவர்களுக்கும் நாங்கள் ஒரு மெசேஜ் சொல்லி இருக்கிறோம் என்பதில் சந்தோஷமாக இருந்தது. இதற்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார். 



நாயகன் ரியோ ராஜ் பேசுகையில்,


 '' பத்திரிகையாளர்களுக்கு என் மனதின் அடியாழத்திலிருந்து மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன் சில படங்களில் நடித்திருக்கிறேன் அதற்கும் என என்னை பாராட்டி இருக்கிறீர்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு பிறகு அனைவரும் ஒருமித்த குரலில் பாராட்டை தெரிவித்தீர்கள். இதிலிருந்து எம்மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சம் உள்ள படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தால் கலவையான விமர்சனங்கள் காணாமல் போய்விடும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன். ஊடகங்களின் பாராட்டும், ரசிகர்களின் பாராட்டுகளும் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறோம். 


இந்தப் படம் ஆண்களுக்கானது என்று தான் நாங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆண்களுக்கு என்ன தேவை? என்பதை சொல்வதற்கு தான் நாங்கள் முயற்சி செய்தோம். ஒரு குடும்பத்தில் குடும்பஸ்தனாக இருக்கும் ஆண்களுக்கு என்ன தேவை என்றால் ... ஒரு ஃபர்பெக்ட்டான பார்ட்னர் தேவை என்பதைத்தான் நாங்கள் இந்த படத்தில் சொல்ல முயற்சித்தோம். எல்லா குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்தில் உள்ள கணவனும் மனைவியும் தங்களை ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டு, உச்சகட்ட காட்சியில் வக்கீல் நாராயணன் சொல்வது போல் 50 :50 என்பது கிடையவே கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும் என நினைத்தோம். இது நிறைய பேருக்கு சென்றடைந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. குடும்பத்தில் ஒரு சமயத்தில் கணவன் எழுபது என்றால் மனைவி முப்பதாகவும் ...சில தருணங்களில் மனைவி எழுபது என்றால்... கணவன் முப்பதாகவும் இருப்பது தான் யதார்த்தமான நடைமுறை.  இதுதான் 50 :50 என்பதை ஏராளமானவர்களுக்கு புரிய வைத்தது இந்த திரைப்படம்.  இதை நேரில் ரசிகர்கள் எங்களுடன் கலந்துரையாடும் போது தெரிவித்த போது மகிழ்ச்சியாக இருந்தது. 


ரசிகர்கள் என்னை தொடர்பு கொண்டு பாராட்டும் போது படம் நன்றாக இருந்தது என்பதை கடந்து நான் இந்த படத்தை என் மனைவியுடன் பார்த்தேன். இருவரும் படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். திரையில் எங்களைப் பார்ப்பது போல் இருந்தது என பாராட்டினார்கள்.‌ இதுவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இதை தெரிந்து கொண்டு திரையரங்கத்திற்கு வந்து இப்படத்தினை கொண்டாடிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் திரையரங்கத்திற்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்த அனைவருக்கும் சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌


ஒவ்வொரு படத்தின் வெளியீட்டிற்கு பிறகும் ரசிகர்களின் எதிர்வினையை காண்பதற்காக திரையரங்கத்திற்கு செல்வதுண்டு. அதேபோல் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு திரையரங்கத்திற்கு செல்லும் போது அங்கு அழகான - அப்பாவித்தனமான- மகிழ்ச்சியான- ஏராளமான முகங்களை காண முடிந்தது. நாங்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவது ஜாலியாக இருப்பதற்காகவும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் வருகிறோம் என்பதை சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. ஒவ்வொரு திரையரங்கத்திற்கு செல்லும் போதும் எங்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். இதற்காக இந்தத் தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌


இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌


இந்த படத்தின் மூலமாக ஆர் ஜே விக்னேஷ் காந்தை ரசிகர்கள் அனைவரும் நடிகராக அதிலும் சிறந்த குணசித்திர நடிகராக ஏற்றுக் கொண்டதை தான் நான் அளவற்ற மகிழ்ச்சியாக கருதுகிறேன்.‌ அவர் வழக்கமான காமெடியை தவிர்த்து இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக ஜெயித்திருக்கிறார். தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். அவருடைய ஆசையும் அதுவாகத்தான் இருந்தது. அவர் ஒரு சிறந்த நடிகர். அதனை இந்தப் படத்தில் நிரூபித்திருந்தார். அதற்காக அவரையும் வாழ்த்துகிறேன்'' என்றார்.

No comments:

Post a Comment