Wednesday, 24 December 2025

பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

 *பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு*







*கென் கருணாஸ் இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு*


தேசிய விருதினை வென்ற 'அசுரன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்த கென் கருணாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.


நடிகர் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனீஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி  யாதவ், நளினி ஆகியோருடன் டிஜிட்டல் திரை பிரபலங்களான சின்ன தமிழா-  தாஜ்மோலா - கெட்டவன் மணிகண்டன்- கேரன் வின்சென்ட் - உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ .வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் மற்றும் சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

 

''இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் பாரம்பரியமான முறையில் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இடைவிடாமல் அறுபது நாட்கள் வரை நடைபெற்றது. மாணவ மாணவியர்களின் பள்ளிக்கூட வாழ்க்கையை திரையில் நேர்த்தியாக காட்சிப்படுத்துவதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தினமும் குறைந்த பட்சம் நூறு துணை நடிகர்கள் கலந்து கொண்டனர். முக்கிய காட்சிகளை படமாக்கும் போது 300 முதல் 450 துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர். மேலும் படத்தின் முக்கிய பகுதியை படமாக்குவதற்காக படக் குழுவினர் கேரளாவில் உள்ள ஆலப்புழாவிற்கும் ஒரு வாரம் பயணம் மேற்கொண்டனர்.  


ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையில் உருவான பாடல் காட்சிக்கு நடன இயக்குநர் ஷோபி மாஸ்டரின் நடன அசைவில் பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.  


மூத்த நடிகை நளினி இப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்திருக்கிறார். 


இப்படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே வியாபார ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. அறிமுக கதாநாயகன் - அறிமுக இயக்குநர் - அறிமுக தயாரிப்பு நிறுவனம் - எனும் இந்த கூட்டணிக்கு இது அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. 


இத்திரைப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. 

அத்துடன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று வெளியாகும் '' என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment