*உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள **‘மிஷன் சாண்டா’** திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது*
தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் சர்வதேச திரைப்படங்களுடன் ஒப்பிடும் வகையிலான அனிமேஷன் காட்சிகளுடன் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள **‘மிஷன் சாண்டா’** திரைப்படம், உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகிறது.
வண்ணமிகு, மாயாஜாலம் நிறைந்த பெரிய திரை அனுபவமாக, விடுமுறை காலத்தில் குடும்பத்துடன் கண்டு களிப்பதற்கான திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள **‘மிஷன் சாண்டா’**, பிரம்மாண்ட காட்சிகள், வேகமான திரைக்கதை மற்றும் கவர்ந்திழுக்கும் அனிமேஷன் மூலம் நம்பிக்கை, தைரியம் மற்றும் ஒற்றுமை போன்ற மதிப்புகளை கொண்டாடுகிறது. குடும்பத் திரைப்படங்கள் அரிதாக வெளியாகும் காலகட்டத்தில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சரியான நேரத்தில் இப்படம் திரையரங்குகளை அலங்கரிக்கிறது.
இந்திய அனிமேஷன் துறையின் முக்கிய மைல்கல்லாக திகழவுள்ள **‘மிஷன் சாண்டா’** திரைப்படத்தின் முழு அனிமேஷனும் இந்திய கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்புகளை லாஸ் ஏஞ்சல்ஸை தலைமையிடமாகக் கொண்ட கியூரியாசிட்டி இங்க் மீடியா உருவாக்கியிருந்த நிலையில், அனிமேஷன் தயாரிப்புப் பொறுப்பை பெங்களூரைச் சேர்ந்த **ஸ்டுடியோ56 அனிமேஷன்** தலைமை ஏற்றது. ஜெர்மனியைச் சேர்ந்த டூன்2டாங்கோ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்தப் படம், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகளாவிய நிபுணர்களின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
**ஸ்டுடியோ56**-ஐ சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட திறமைமிக்க அனிமேஷன் கலைஞர்கள், கிட்டத்தட்ட 20 மாதங்கள் இப்படத்தில் பணியாற்றினர். உலகளாவிய நிபுணர்களுடன் இணைந்து செயல்பட்டு, அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பிற்கான உலகளாவிய மையமாக **இந்தியா** வளர்ந்து வரும் பயணத்தில் இவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
இதிலும் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்துவது, இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தஞ்சாவூரில் பிறந்து, திருச்சிராப்பள்ளியில் வளர்ந்த தொழில்முனைவோர் **ஸ்ரீராம் சந்திரசேகரன்** என்பதுதான்.
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஊக்கத்தால் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில், ஸ்ரீராம் 2008ஆம் ஆண்டு **Broadvision Kids & Family** நிறுவனத்தை நிறுவினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
“கடந்த 17 ஆண்டுகளில், அனிமேஷன் துறையில் நாம் படிப்படியாக வளர்ந்துள்ளோம். உள்ளூர் விளம்பரங்களிலிருந்து தொடங்கி, இன்று உலகத் தரத்தில் அனிமேஷன் முழுநீள திரைப்படங்களை உருவாக்கும் முன்னணி ஸ்டூடியோக்களில் ஒன்றாக உயர்ந்துள்ளோம். உண்மையில், தமிழ்நாடு உலகின் சிறந்த அனிமேஷன் திறமைகளை உருவாக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. எங்களுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வரும் எங்கள் அனிமேஷன் இயக்குநர் ஹரிஷ், லேஅவுட் இயக்குநர் அஷ்வின், காம்போசிட்டிங் இயக்குநர் கார்த்திகேயன், அனிமேஷன் மேற்பார்வையாளர் பாலாஜி ஆகியோர் பெங்களூரு, சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழர்கள்,” என்றார்.
இந்தப் படம் குறித்துப் பேசிய Broadvision நிறுவனத்தின் தயாரிப்பாளரும் நிர்வாக இயக்குநருமான திருமதி கௌரி ஸ்ரீராம்,
“**‘மிஷன் சாண்டா’** இந்திய அனிமேஷன் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவும், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் இருக்கும். 44-க்கும் மேற்பட்ட உலகளாவிய தயாரிப்புகள் மற்றும் பல சர்வதேச விருதுகளுடன் வெற்றி பயணம் மேற்கொண்டு வரும் Broadvision Kids & Family, இப்போது டிஸ்னி தரத்திலான கதை சொல்லும் பாணியை இந்த கிறிஸ்துமஸ் அன்று இந்தியக் குடும்பங்களுக்கு பெரிய திரையில் கொண்டு வருகிறது,” என்றார்.
அதிரடி காட்சிகள், நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பிரம்மாண்ட அனிமேஷன் ஆகியவற்றுடன், **‘மிஷன் சாண்டா’** ஒரு மகிழ்ச்சியான சினிமா விடுமுறை அனுபவத்தை வழங்குவதோடு, இந்திய அனிமேஷன் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் அமைந்துள்ளது.
---

No comments:
Post a Comment