Featured post

Noise and Grains in association with Sashtha Production to present double delight

Noise and Grains in association with Sashtha Production to present double delight to Coimbatore - Grand concerts featuring Vidyasagar and Vi...

Monday, 7 January 2019

எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வேண்டும் கவிஞர் கோரிக்கை

எல்லா அரசியல் கட்சிகளும்
தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வேண்டும்
கவிஞர் வைரமுத்து கோரிக்கை
‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 21ஆம் ஆளுமையாக அப்துல் ரகுமான் குறித்த கட்டுரையை நேற்று திருப்பூரில் அரங்கேற்றினார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் தொழில் அதிபர் நாகராஜன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :
தமிழாற்றுப்படை நிகழ்ச்சி திருப்பூரில் நிகழ்வது மகிழ்ச்சி. மற்ற ஊர்களையெல்லாம் நான் மூளையில் பதிவு செய்திருக்கிறேன்; திருப்பூரை மட்டும் நான் இதயத்தில் அணிந்திருக்கிறேன். பனியன் வடிவத்தில் திருப்பூர் என் இதயத்துக்கு நெருக்கமாக இருப்பதால் அப்படிச் சொல்லுகிறேன்.
சித்திரைத் திருவிழாவில் புல்லாங்குழல் வாசித்தவரைப்போல அப்துல்
ரகுமான் கவனம் பெறாமல் போய்விட்டார். அவர் கவிதைகளைத் தமிழர்கள் போற்ற வேண்டும்.
ஒரு மொழியின் உலக அடையாளமே அது எத்தனை ஆண்டு நீண்ட இலக்கியத்தைக் கொண்டிருக்கிறது என்பதுதான். ஆண்டு வளையங்களைக் கொண்டு மரங்களின் வயதறியலாம். பற்களைப் பார்த்து மாடுகளின் வயதறியலாம். ஒரு மலையின் வயதை அது வெளியிடும் கார்பன் அளவுகொண்டு கணக்கிடலாம். அதுபோல ஒரு மொழியின் வயதை அதன் இலக்கியத்தை வைத்தே அளவிட இயலும்.
பழந்தமிழர் வாழ்வில் இலக்கியம்தான் அறம்; இலக்கியம்தான் சட்டம். இலக்கியத்தின் வழிதான் ஆட்சி செலுத்தப்பட்டது; வாழ்வு இயக்கப்பட்டது. தவறுகளைத் தண்டிக்கப் பிறந்ததுதான் பிற்காலத்தில் சட்டம். ஆனால் தவறுகளே செய்துவிடக்கூடாது என்று தடுத்ததுதான் இலக்கியம். ஓர் இனத்தின் பண்பாடும் நாகரிகமும், வீரமும் காதலும் இலக்கியத்தில் மட்டும்தான் பாதுகாப்பாகப் பதிவுசெய்யப்பட முடியும். ஆனால் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்குப் பிறகு இந்தியக் கல்வியில் இலக்கியம் தன் இடத்தை இழந்துகொண்டிருக்கிறது என்பது கவலை தருகிறது.
மூன்று நிமிடங்களுக்குமேல் காற்று இல்லை என்றால் மூளை இறந்துபோகும். மூன்று ஆண்டுகளுக்குமேல் இடைவெளி விட்டால்கூட இலக்கியம் மறந்துபோகும். அதனால் தொழில்நுட்பக் கல்வியிலும்கூட இலக்கியத்தை ஒரு பாடமாகச் சேர்ப்பது பலன்தரும் என்று தோன்றுகிறது.
தமிழ் ஒரு கடல். எல்லா நதிகளையும் உள்ளிழுத்துக்கொண்டு அது தன்மயம் ஆக்கிவிடும். பெளத்தத்தை உள்ளிழுத்துக்கொண்டு அது மணிமேகலையாய் மாற்றிக்கொண்டது. சமணத்தை உள்ளிழுத்து அது பதினெண்கீழ்க்கணக்காய்ப் பரிணாமம் பெற்றது. இஸ்லாத்தை உள்ளிழுத்து அது சீறாப்புராணமாய்ச் சிறந்தோங்கியது. கிறித்துவத்தை உள்ளிழுத்து உலகைத் தனக்கும், தன்னை உலகத்துக்கும் அறிமுகம் செய்துகொண்டது. அப்படி வந்த மதங்களெல்லாம் தமிழ் வழியாகத்தான் வினைப்பட்டனவே தவிர, தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் தங்கள் மொழியை அமர்த்திவிடவில்லை.
ஆனால் இந்த நூற்றாண்டு அச்சம் தருகிறது. எப்போதும் நேராத ஓர் உலகப் படையெடுப்பு ஒவ்வொரு தாய்மொழியின் மீதும் இப்போது நிகழ்த்தப்படுவதாய் அறிவுலகம் பதறுகிறது.  இன்றைக்குப் பெருகிவரும் ஆங்கிலப் பள்ளிகளின் எண்ணிக்கை கிராமங்கள் வரைக்கும் தமிழைக்
கேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கின்றன. அதனால் முதலில் தமிழின் தரம் குறையும்; பிறகு புலமை குறையும்; பிறகு எண்ணிக்கை குறையும்; பிறகு பேச்சுமொழி ஆகிவிடும் பெருவிபத்தும் நேர்ந்துவிடும்.
சட்டத்தின் துணையின்றி இங்கு எதையும் சாதிக்க முடியாது. மக்களின் குரலின்றிச் சட்டம் ஏதும் இயற்ற முடியாது. எனவே தமிழர்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொழுது உங்கள் மொழிக்கொள்கையைத் தனித் தலைப்பிட்டு அறிவியுங்கள். பொருளாதாரத்தைக் காப்பது மட்டும் ஜனநாயகத்தின் கடமை அல்ல; கலாசாரத்தையும் காப்பதுதான்.



No comments:

Post a Comment