Featured post

Think Studios' next to be a fantasy romcom featuring actors Kavin, Priyanka Mohan

 *Think Studios' next to be a fantasy romcom featuring actors Kavin, Priyanka Mohan in the lead* Chennai, July 16 : The inaugural functi...

Tuesday, 5 February 2019

பல வருடங்களுக்குப் பின் ஹவுஸ்ஃபுல் ஆன கேரள தியேட்டர்.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி இயக்குநர் ராம் இயக்கத்தில், "மெகா ஸ்டார்" மம்முட்டி நடிப்பில் உலகமெங்கும் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வரும் "பேரன்பு" படக்குழுவினருக்கு கூகை திரைப்பட இயக்கம் சார்பில் "பேரன்பு-க்கு பிரியங்களைப் பகிர்தல்" பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இயக்குநர்கள் ராம், பா.இரஞ்சித், லெனின் பாரதி, மீரா கதிரவன், ஸ்ரீ கணேஷ், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், திரைக்கலைஞர் அஞ்சலி அமீர், “தங்கமீன்கள்” சாதனா, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், எழுத்தாளர்கள் ஷாலின் மரியா லாரன்ஸ், ஜா.தீபா, பத்திரிக்கையாளர் அ.குமரேசன், சமூக செயற்பாட்டாளர்கள் மாலினி ஜீவரத்தினம், கிரேஸ் பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் ராம் பேசுகையில்,

பேரன்பு திரைப்படத்தை ஒரு மாற்று சினிமாவாக நினைத்து நான் எடுக்கவில்லை. அதனை ஒரு "மெயின்ஸ்ட்ரீம்" சினிமாவாகத் தான் எடுத்தேன். நான் மட்டுமல்ல, இப்படத்தின் தயாரிப்பாளரும் அப்படி நினைத்துத் தான் தயாரித்தார். நல்ல படங்களை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிருபணமாகி இருக்கிறது. பேரன்பு திரைப்படத்தை கொண்டாடுவதற்காக என்னுடைய மற்ற மூன்று படங்களுடன் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. கற்றது தமிழ், தங்க மீன்கள் , தரமணி ஆகிய மூன்றும் ஒன்றிற்கொன்று தொடர்பில்லாதவை. கேரளாவில் கொச்சி நகரில்  1200 சீட்டுகள் வசதி கொண்ட ஈவிஎம் கவிதா திரையரங்கில் பல வருடங்களுக்குப்பின் பேரன்பு மூலம் "ஹவுஸ் ஃபுல்" போர்டு வைத்திருக்கிறார்கள். 
அதே போல கோயம்புத்தூரில் நான் சென்ற இடங்களில் எல்லாம் படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள். கற்றது தமிழ் படம் முதலாகவே விமர்சகர்கள் என் படங்களை புரிந்து கொள்வதை விட, மக்கள் நன்றாகவே புரிந்து கொள்கிறார்கள். எல்லோரும் ராம் பத்து வருடத்தில் நான்கு படங்களை மட்டுமே எடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக பேசுகிறார்கள், உண்மையில் நான் கஷ்டப்படவே இல்லை. நான் பிறக்கும் போது எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன். 

இந்த சினிமாவிற்காக நான் எதையுமே இழக்கவில்லை. என் மகிழ்ச்சியை, என் கொண்டாட்டத்தை இழக்காமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கேரளாவில் "பேரன்பு" திரைப்படத்தைப் பற்றி பெரிதாக பேசுகிறார்கள் என்றால், அங்கு மெகா ஸ்டார் மம்முட்டி இருக்கிறார். அவரால் படம் குறித்த தகவல் வேகமாக பரவுகிறது, மக்கள் வருகிறார்கள். கற்றது தமிழ் இப்போது வரை மக்களை சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. அதைப் போல பேரன்பு திரைப்படமும் மக்களை சென்று சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போதே பார்த்தால், என் தயாரிப்பாளர் மகிழ்வார். 

ஆனால் எப்போது பார்த்தாலும் நான் மகிழ்வேன். என் படத்தை எப்போதாவது, எப்படியாவது நீங்கள் பார்த்து தான் ஆக வேண்டும், உங்களுக்கு வேறு வழியில்லை. என் கயமைகள் மறந்து என்னையும், என் திரைப்படங்களையும் கொண்டாடக் கூடிய ரசிகர்களும் மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எப்படியும் பேரன்பு திரைப்படத்தை பார்த்து விடுவார்கள். நீங்கள் படம் குறித்து  கூறும் விமர்சனங்களை உண்மையானவையாக இருக்கும் பட்சத்தில், இன்னும் கற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். இங்கு வந்தது உங்களுடைய பாராட்டுக்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இல்லை, படம் குறித்த தகவல் பத்து பேருக்கு கூடுதலாக சென்று சேரும், அவர்கள் திரையரங்கிற்கு வந்து பேரன்பு பார்த்துவிட்டு பேசுவார்கள் என்பதற்காக மட்டும் தான். நிகழ்வினை ஏற்பாடு செய்த கூகை திரைப்பட இயக்கத்தினருக்கு நன்றி" என்றார்.

இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்,

ஒரு திரைப்படம் வெளியான மூன்றாவது நாளில் இயக்குநரும், தயாரிப்பாளரும் ஒரே மேடையில் இருப்பது செம்ம சூப்பரான ஒரு விசயம். அதுவும் பி.எல்.தேனப்பன் மாதிரியான கமெர்ஷியலாக யோசிக்கக் கூடிய ஒரு தயாரிப்பாளர் பேரன்பு திரைப்படத்தை தயாரித்தது உண்மையிலேயே பெரிய விசயம். ராம் சார், பி.எல்.தேனப்பன் இந்த காம்பினேசன் எப்படி அமைந்தது? என்றே யோசித்துக் கொண்டருந்தேன். எனக்கு ராம் சார் கமெர்ஷியலாக பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை தரமணி திரைப்படம் நிறைவேற்றியது. இப்போது பேரன்பு திரைப்படமும் கமெர்ஷியலாக பெரும் வரவேற்பை பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 

பேரன்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெளியே வந்து ராம் சாரை கட்டிப் பிடித்துக் கொண்டேன். உண்மையிலேயே பேரன்பு திரைப்படம் சரியாக திட்டமிடப்பட்டு, சரியாக எடுக்கப்பட்டு, சரியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். இந்தப் படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சாதனாவின் நடிப்பு மிக அற்புதமாக இருந்தது. எந்த இடத்திலுமே நடிப்பு என்பது அல்லாமல் மிக இயல்பாக இருந்தது அவருடைய நடிப்பு. மம்முட்டி சாரும் மிக இயல்பாக நடித்து, அசத்தி இருக்கிறார். பேரன்பு திரைப்படத்தின் முக்கியமான பலமாக நான் பார்ப்பது ஒளிப்பதிவைத் தான்.
 நம் வாழ்வின் மிக அற்புதமான தருணங்கள் எந்த பூச்சும் இல்லாமல் மிக எளிமையானவையாகத் தான் கடந்து போயிருக்கும். இதுவரையில் அப்படியான தருணங்களை யாரும் படம்பிடித்து நான் பார்த்ததே இல்லை. ஆனால் அந்த அற்புமான தருணங்களை அதன் எளிமையான தன்மையோடு படம் பிடித்து காட்சிப் படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். அவருக்கு மிகப்பெரிய பாராட்டுகளும், வாழ்த்துகளும். அடுத்தது யுவன் சங்கர் ராஜா. பேரன்புவின் பாடல்களும், பின்னணி இசையும் மிக அற்புதமாக வந்திருக்கிறது. ராம் சாருக்கும், யுவனுக்கும் நிறைய சண்டைகள் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் இவ்வளவு அற்புதமான ஒரு இசை முழுமையாக வெளிவந்திருக்க முடியுமா? என்று  யோசிக்கிறேன். 
எடிட்டிங் மற்றும் கலை இயக்கம் இரண்டுமே மிக அருமையாக இருக்கிறது. எந்த இடத்திலும் எந்த காட்சியிலும் உறுத்தலே இல்லாமல் இரண்டு பேரும் உழைத்திருக்கிறார்கள். 
படத்தில் எனக்கு பிடித்த முக்கியமான கேரக்டர் மீரா பாத்திரம் தான். பொதுவாக தமிழ் சூழலில் திருநங்கைகள் மீது இருக்கக் கூடிய பார்வையை முற்றிலுமாக உடைத்திருக்கிறது அஞ்சலி அமீருடைய நடிப்பு. அவருக்கு எனது வாழ்த்துகள். மொத்தத்தில் பேரன்பு திரைப்படத்தை கூகையின் மூலமாக வாழ்த்துவதில் நான் பெரிதும் மகிழ்கிறேன். இப்போது சமூக பிரச்சினை பற்றி பேசாமல் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது, அதை  பேரன்பும் உறுதி செய்திருக்கிறது, என்றார்.

நிகழ்வில், சமூக வலைதளங்களின் மூலமாக பெறப்பட்ட ரசிகர்களின் கருத்துக்களும் வாசிக்கப்பட்டது.




No comments:

Post a Comment