Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Monday, 22 April 2019

சென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு



தலைமை நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையே!
பாமரன் என்னாவான்?
கவிஞர் வைரமுத்து கேள்வி

அமுத சுரபி அறக்கட்டளையின் சார்பில் சென்னை முத்தமிழ்ச் சங்கம் நடத்திய ஐம் பெருவிழாவில் கவிஞர் வைரமுத்து நேற்று கலைந்துகொண்டு 100 கவிஞர்களுக்குப் பரிசு வழங்கினார். விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :

100 கவிஞர்களுக்குப் பரிசு தருவதைக் காலம் எனக்கிட்ட கட்டளையாகக் கருதுகிறேன். முத்தமிழ்ச் சங்கத்தை வாழ்த்துகிறேன். கவிஞர்களைக் கொண்டாடுகிற வரைக்கும் ஒரு தேசம் அறத்தை நம்புகிறது என்று அர்த்தம். ஆனால் கவிஞர்களையும் கவிதைகளையும் இந்த தேசம் இடது கையால்தான் ஆசீர்வதிக்கிறது. ஆரவாரமாக வாசிக்கப்படும் அரசியல் வாத்தியங்களின் இரைச்சலில் இலக்கியப் புல்லாங்குழல் எடுபடவே இல்லை. ஆனாலும் இலக்கியம் தன் இறுதி மூச்சை விடுவதாக வில்லை. யார் கேட்கிறார்களோ இல்லையோ அன்பின் வழிப்பட்ட அறத்தை இலக்கியம் தன் சன்னமான குரலில் இசைத்துக்கொண்டே இருக்கிறது. நிகழ்காலம் எதிர்காலம் குறித்துக் கவிதை காரணத்தோடு கவலைப்படுகிறது.

ஒரு வாக்காளன் விரலில் தேர்தல் ஆணையம் கரும்புள்ளி வைக்கலாம். ஆனால் வெற்றிபெற்ற வேட்பாளர் வாக்காளர் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி வைத்துவிடக்கூடாது என்று அது இதயம் வலிக்க எச்சரிக்கிறது.

இலக்கியமும் அறம் பற்றிப் பேசாவிட்டால் அதை உயர்த்திப் பிடிக்க நீதிமன்றத்தைத் தவிர வேறு எந்த நிறுவனம் இருக்கிறது? ஆனால் நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலைதான் இன்று நிலவுகிறது.

முன்பெல்லாம் ஒரு ஆளுமையைச் சிறுமைப்படுத்த வேண்டுமென்றால் கண்ணுக்குத் தெரியாமல் கஞ்சாவும் மதுவும் வைத்துக் கைது செய்வார்கள். இப்போதெல்லாம் மாதுவை வைத்தே பிம்பத்தை உடைக்கப் பார்க்கிறார்கள். நீதிபதியின் மூளையை முடக்குவதும், அவரது நேரத்தைத் திருடுவதும், அவரது தூக்கத்தைக் கொள்ளையடிப்பதும், அவரது தொழிலைத் தொலைப்பதும்தான் இந்தச் சதியின் நோக்கம். இந்தியத் திருநாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிக்கே சதிவலை பின்னப்படும் என்றால் பாமரனுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இதைத்தான் “தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” என்றார் மகாகவி பாரதி. “‘தீ’யில் ஈ ஒட்டாது” என்றார் சுரதா. “தண்ணீரில் விழுந்தாலும் நிழல் நனைந்து போகாது” என்றேன் நான்.

நாட்டின் விழுமியங்கள் வீழும்போதெல்லாம் இலக்கியம் செத்துக்கொண்டே அழுகிறது. ஒருகாலத்தில் வழிமுறையாய் இருந்த லஞ்சம் இன்று வாழ்க்கைமுறையாகிவிட்டதே என்று வருந்துகிறது.

ஓட்டுக்குக் கையூட்டு உப்புமாவும் காப்பியும் என்று இருந்த நிலைமாறி 200 முதல் 4000 ரூபாய் வரையில் ஓட்டுக்குப் பணம்தரும் கலாசார வீழ்ச்சிக்குக் காரணம் வாக்காளரா? வேட்பாளரா? நெஞ்சுக்கு நேர்மையாக வாக்களிப்பவன் ஆளுங்கட்சியைத் தோற்கடிக்கிறான் அல்லது எதிர்க்கட்சியைத் தோற்கடிக்கிறான். ஆனால் பணம் பெற்று வாக்களிக்கும் வாக்காளன் தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்கிறான்.

ஆனாலும் நமது கடைசி நம்பிக்கை ஜனநாயகம்தான். விரலில் வைத்த மை நகத்தைவிட்டு வெளியேறுவதற்குள் நாட்டை விட்டுத் தீமை வெளியேறிவிட வேண்டும் என்றுதான் எல்லா மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளைக் கண்டுதான் ‘போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்றார் பாவேந்தர் பாரதிதாசன். போரைச் சாய்க்கவே ஒரு போர் தேவைப்படுகிறது. அந்தப் போருக்கு இளைஞர்களும் கவிஞர்களும் தயாராக வேண்டும். இந்த தேசத்தில் நெருப்புக்கூடச் சுடவில்லை என்றால் குப்பைகளை எதைவைத்து எரிப்பது?

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக வி.ஜி.சந்தோஷம் கலந்துகொண்டார். பாவலர் ஞானி, கவிஞர் சு.சே.சாமி விழாவை முன்னின்று நடத்தினார்கள். கவிஞர்களும் தமிழறிஞர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment