Featured post

A LEGEND RETURNS TO THE SILVER SCREEN

 *A LEGEND RETURNS TO THE SILVER SCREEN* *M.S. Subbulakshmi Amma’s Extraordinary Life to be Immortalised in Cinema* Some voices are heard. S...

Showing posts with label Lyricist vairamuthu. Show all posts
Showing posts with label Lyricist vairamuthu. Show all posts

Friday, 20 November 2020

வெற்றிமாறன் வெளியிட்டுள்ள 'என்றாவது ஒரு நாள்

 வெற்றிமாறன் வெளியிட்டுள்ள 'என்றாவது ஒரு நாள்' ஃபர்ஸ்ட் லுக்: உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது

சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி.

பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம்பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்களை எல்லாம் காட்சியாக அமைத்து மக்களை யோசிக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.






இந்தியாவின் கிராமப்புற மக்களின் எளிய வாழ்வு கால்நடைகளுடன் அவர்களது அழகான உறவைப் பற்றிய இந்தப் படத்துக்கு 'என்றாவது ஒரு நாள்' எனத் தலைப்பிட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள எதார்த்தமான வாழ்வியலை அப்படியே இந்தப் படத்தில் காணவுள்ளோம். அங்குள்ள வட்டார மொழியை பேசி அனைத்து நடிகர்களும் நடித்துள்ளது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.

எதார்த்தமான படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள விதார்த் இதில் நடித்துள்ளார். வித்தியாசமான தனக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் ரம்யா நம்பீசன் நாயகியாக புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் 'சேதுபதி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நம்மை கொள்ளைக் கொண்ட ராகவன் நடித்துள்ளார்.

'தி தியேட்டர் பீப்பிள்' என்ற நிறுவனம் இந்தப் படத்தின் மூலம் படங்கள் தயாரிப்பில் இறங்குகிறது. வித்தியாசமான அதே சமயத்தில் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களைத் தயாரிப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். அதில் 'என்றாவது ஒரு நாள்' திரைப்படம் தங்களுடைய முதல்படி என்று நம்புகிறார்கள். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக என்.சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டராக மு.காசி விஸ்வநாதன் பணிபுரிந்துள்ளனர். அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள 'என்றாவது ஒரு நாள்' ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் ஒரு எதார்த்த வாழ்க்கையை நம் கண்முன் காணவிருக்கிறோம். இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Thursday, 27 February 2020

Here is the Song written by kaviperarasu vairamuthu for an upcoming movie

Here is the Song written by kaviperarasu vairamuthu, coming in the movie "ORANGUTAN" Music: Marisakthi, Direction: Mahimaidoss Singer: Yathu, Jahanvi

ஒரு புதுப்படம்; எல்லோரும் இளைஞர்கள். பெரியவர் சிறியவர் பார்த்துத் தமிழ் வினைப்படுவதில்லை. எந்தச் சிப்பியில் எந்த முத்தோ? பெரும்படம் போலவே இந்தச் சிறுபடத்திற்கும் ஒரு காதல் பாடல்.  இசை – மாரிசக்தி, இயக்கம் – மகிமைதாஸ், பாடகர்கள் – யது – ஜாஹ்நவி , படம் - ஒராங்குட்டான்.


             பாடல்
நண்பா!
எப்போது காதல் வாய்த்தது?
அப்போது என்ன நேர்ந்தது?
ஒரு சூறாவளி              
இதயச் சிறுகூட்டில் சுழன்றதா?
ஒரு கோதாவிரி
முதுகின் நடுக்கோட்டில் நகர்ந்ததா?
இலவம்பஞ்சு போலே
உடல் மிதந்து போகாதோ
உன்னை நினைத்தால்
வார்த்தை மொழியிழந்து போகும்
சொல் தீர்ந்து போனாலும்
உரையாடல் தீராது
கண்ணா! வினோத வேதனை
கண்தூங்கும் போதும்
காதல் சிந்தனை

Monday, 22 April 2019

சென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு



தலைமை நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையே!
பாமரன் என்னாவான்?
கவிஞர் வைரமுத்து கேள்வி

அமுத சுரபி அறக்கட்டளையின் சார்பில் சென்னை முத்தமிழ்ச் சங்கம் நடத்திய ஐம் பெருவிழாவில் கவிஞர் வைரமுத்து நேற்று கலைந்துகொண்டு 100 கவிஞர்களுக்குப் பரிசு வழங்கினார். விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :

100 கவிஞர்களுக்குப் பரிசு தருவதைக் காலம் எனக்கிட்ட கட்டளையாகக் கருதுகிறேன். முத்தமிழ்ச் சங்கத்தை வாழ்த்துகிறேன். கவிஞர்களைக் கொண்டாடுகிற வரைக்கும் ஒரு தேசம் அறத்தை நம்புகிறது என்று அர்த்தம். ஆனால் கவிஞர்களையும் கவிதைகளையும் இந்த தேசம் இடது கையால்தான் ஆசீர்வதிக்கிறது. ஆரவாரமாக வாசிக்கப்படும் அரசியல் வாத்தியங்களின் இரைச்சலில் இலக்கியப் புல்லாங்குழல் எடுபடவே இல்லை. ஆனாலும் இலக்கியம் தன் இறுதி மூச்சை விடுவதாக வில்லை. யார் கேட்கிறார்களோ இல்லையோ அன்பின் வழிப்பட்ட அறத்தை இலக்கியம் தன் சன்னமான குரலில் இசைத்துக்கொண்டே இருக்கிறது. நிகழ்காலம் எதிர்காலம் குறித்துக் கவிதை காரணத்தோடு கவலைப்படுகிறது.

ஒரு வாக்காளன் விரலில் தேர்தல் ஆணையம் கரும்புள்ளி வைக்கலாம். ஆனால் வெற்றிபெற்ற வேட்பாளர் வாக்காளர் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி வைத்துவிடக்கூடாது என்று அது இதயம் வலிக்க எச்சரிக்கிறது.

இலக்கியமும் அறம் பற்றிப் பேசாவிட்டால் அதை உயர்த்திப் பிடிக்க நீதிமன்றத்தைத் தவிர வேறு எந்த நிறுவனம் இருக்கிறது? ஆனால் நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலைதான் இன்று நிலவுகிறது.

முன்பெல்லாம் ஒரு ஆளுமையைச் சிறுமைப்படுத்த வேண்டுமென்றால் கண்ணுக்குத் தெரியாமல் கஞ்சாவும் மதுவும் வைத்துக் கைது செய்வார்கள். இப்போதெல்லாம் மாதுவை வைத்தே பிம்பத்தை உடைக்கப் பார்க்கிறார்கள். நீதிபதியின் மூளையை முடக்குவதும், அவரது நேரத்தைத் திருடுவதும், அவரது தூக்கத்தைக் கொள்ளையடிப்பதும், அவரது தொழிலைத் தொலைப்பதும்தான் இந்தச் சதியின் நோக்கம். இந்தியத் திருநாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிக்கே சதிவலை பின்னப்படும் என்றால் பாமரனுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இதைத்தான் “தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” என்றார் மகாகவி பாரதி. “‘தீ’யில் ஈ ஒட்டாது” என்றார் சுரதா. “தண்ணீரில் விழுந்தாலும் நிழல் நனைந்து போகாது” என்றேன் நான்.

நாட்டின் விழுமியங்கள் வீழும்போதெல்லாம் இலக்கியம் செத்துக்கொண்டே அழுகிறது. ஒருகாலத்தில் வழிமுறையாய் இருந்த லஞ்சம் இன்று வாழ்க்கைமுறையாகிவிட்டதே என்று வருந்துகிறது.

ஓட்டுக்குக் கையூட்டு உப்புமாவும் காப்பியும் என்று இருந்த நிலைமாறி 200 முதல் 4000 ரூபாய் வரையில் ஓட்டுக்குப் பணம்தரும் கலாசார வீழ்ச்சிக்குக் காரணம் வாக்காளரா? வேட்பாளரா? நெஞ்சுக்கு நேர்மையாக வாக்களிப்பவன் ஆளுங்கட்சியைத் தோற்கடிக்கிறான் அல்லது எதிர்க்கட்சியைத் தோற்கடிக்கிறான். ஆனால் பணம் பெற்று வாக்களிக்கும் வாக்காளன் தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்கிறான்.

ஆனாலும் நமது கடைசி நம்பிக்கை ஜனநாயகம்தான். விரலில் வைத்த மை நகத்தைவிட்டு வெளியேறுவதற்குள் நாட்டை விட்டுத் தீமை வெளியேறிவிட வேண்டும் என்றுதான் எல்லா மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளைக் கண்டுதான் ‘போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்றார் பாவேந்தர் பாரதிதாசன். போரைச் சாய்க்கவே ஒரு போர் தேவைப்படுகிறது. அந்தப் போருக்கு இளைஞர்களும் கவிஞர்களும் தயாராக வேண்டும். இந்த தேசத்தில் நெருப்புக்கூடச் சுடவில்லை என்றால் குப்பைகளை எதைவைத்து எரிப்பது?

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக வி.ஜி.சந்தோஷம் கலந்துகொண்டார். பாவலர் ஞானி, கவிஞர் சு.சே.சாமி விழாவை முன்னின்று நடத்தினார்கள். கவிஞர்களும் தமிழறிஞர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

Saturday, 23 February 2019

10 லட்சம் வாங்கித் தருகிறேன் இந்தப் பாடலை எனக்குக் கொடுங்கள் சீனுராமசாமி கோரிக்கை

10 லட்சம் வாங்கித் தருகிறேன் இந்தப் பாடலை எனக்குக் கொடுங்கள் கவிஞர் வைரமுத்துவிடம் சீனுராமசாமி கோரிக்கை

சீமானின் தம்பி திரைக்களமும், ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9-ம் இணைந்து தயாரிக்க, இரா.சுப்ரமணியன் இயக்கும் படம் அமீரா. ஒரு திருடனின் வாழ்க்கையில் ஓர் அழகான பெண் குறுக்கிடுகிறாள். அவள் அழகு அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. அந்த அழகின் வழியே வந்த அன்பு அவனது திருட்டுத் தொழிலையே மாற்றுகிறது; அவன் திருந்துகிறான். அவள் எப்படிப்பட்ட அழகி, அந்த அழகு அவனை என்னவெல்லாம் செய்தது என்பதுதான் பாட்டு. 15 நிமிடங்களில் பாடல் எழுதி முடித்தாராம் கவிஞர் வைரமுத்து. அந்த நேரத்தில் தொலைபேசியில் வந்த இயக்குநர் சீனுராமசாமியிடம் பேச்சோடு பேச்சாக அந்தப் பாடலைப் படித்துக் காட்டியிருக்கிறார். உணர்ச்சிவசப்பட்டு ஆஹா என்ற சீனுராமசாமி, இது என் கதைக்குத்தான் பொருந்தும். என் கதாநாயகிக்குத்தான் பொருந்தும். இதை எனக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று குழந்தைபோல் அடம்பிடித்தாராம். இது சீமானுக்கு என்று எழுதப்பட்ட பாட்டு; கொடுத்த வாக்கு மாறக்கூடாது என்றாராம் வைரமுத்து. இந்தப் பாட்டுக்கு மட்டும் 10 லட்சம் வாங்கித் தருகிறேன் கொடுங்கள் என்றாராம் சீனுராமசாமி. 10 ரூபாய் கொடுத்தாலும் சீமானுக்குத்தான் இந்தப் பாட்டு என்றாராம் கவிஞர் சிரித்துக்கொண்டே.

இதோ அந்த அழகான பாட்டு :

ஆதார் அட்டையிலும்
அழகானவள் 
அழுகின்ற வேளையிலும் 
அழகானவள்

ஆடை சூடியும்
அழகானவள்
அதனைத் தாண்டியும்
அழகானவள்

பேசும்போதும் அழகானவள்  - நீ
பேசாத போது பேரழகானவள்

நெற்றி சரியும்
கற்றை முடியைச்
சுட்டு விரலால்
சுற்றும் போது
சுழற்றியடிக்கும் புயலானவள்

*

பத்துகிராம் புன்னகையில்
பைத்தியமாய் ஆனேன்
பூப்பறிக்கும் உயரம் கண்டு
புத்திமாறிப் போனேன்

ஓடைப்பார்வை தீண்டிச் செல்ல
அரசனாகிப் போனேன் 
ஆடை ஓரம் உரசும் போது
அடிமையாகிப் போனேன்

சாயம்போன  வாழ்வோடு
நிறமூட்டினாய்
ஈயம்போன பாத்திரத்தில்
ஒளியேற்றினாய்

அழகென்ற பொருள்கொண்டு
அன்பென்ற வழிகண்டு
திருடுகின்ற என்வாழ்வைத்
திருவாக்கினாய்

Thursday, 14 February 2019

காதலர் தினத்தில் ஒரு காதல் பாடல்

காதலன் காதலியைக் கைவிடுவதுண்டு; காதலி காதலனைக் கைவிடுவதுண்டு. ஆனால், ஒரு காதல் படமே கைவிடப்பட்ட வருத்தத்திலிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கைவிடப்பட்டதாகக் கருதப்படும் ‘வர்மா’ படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். இளமையான காதல் கதை என்பதாலும், காதலர் தினத்தில் வெளியிடப்படவிருக்கிறது என்பதாலும் கூடுதல் ஆர்வத்தோடு எல்லாம் வரிகளையும் இளமை பொங்க எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து. பாலாவும் ரசித்து ரசித்து, வரிகளைச் சொல்லிச் சொல்லி உருகிப்போனார். இது மெட்டுக்குள் எழுதப்பட்ட கவிதையென்று இசையமைப்பாளர் ரதனும் பூரித்துப்போனார். நடிகர் விக்ரமுக்கு அறிமுகப் பாடல் எழுதிய கவிஞர் வைரமுத்து, அவரது மகன் துருவுக்கும் அறிமுகப் பாடல் எழுதியிருந்தார். இளம் காதலர்கள் முதல்முறையாக உணர்ச்சிவசப்பட்டு எல்லை தாண்டுகிற சூழலுக்குப் பாட்டு கேட்டபோது வைரமுத்து கொஞ்சம் யோசித்தாராம். கட்டிலில்கூடக் கலை இருக்கவேண்டுமே தவிர ஆபாசம் வந்துவிடக்கூடாது என்று கவனமாக வார்த்தைகளைக் கையாண்டாராம். ஆண் – பெண் நாடகத்தைப் பூடகமாகச் சொல்ல வந்த இந்தப் பாட்டு படப்பிடிப்புத் தளத்தில் பரபரப்பாகிவிட்டதாம். காதலும் படமும் கைவிடப்பட்டாலும், காதல் பாடல் கைவிடப்படுவதில்லை.
இதோ அந்தக் காதல் பாட்டு :
மழையில்லை மேகமில்லை – ஆயினும்
மலர்வனம் நனைகின்றதே                                                                                 திரியில்லை தீயுமில்லை – ஆயினும்                                                     திருவுடல் எரியுண்டதே
ஒருவரின் சுவாசத்திலே
இருவரும் வாழுகின்றோம்
உடல் என்ற பாத்திரத்தில்
உயிர்ப்பொருள் தேடுகின்றோம்
காற்றில் ஒலிபோலே
கடலில் மழைபோலே
இருவரும் ஒருவரில் ஒன்றினோம்
*
பூக்கள் ஒன்றுதிரண்டு                                      படைகூட்டி வருவதுபோல்                                        இன்பம் ஒன்றுதிரண்டு
என்மீது பாய்கிறதே
என் ஆவி பாதி குறைந்தால்
என் மேனி என்னாகும்?ஆகாயம் அசைகிறபோது
விண்மீன்கள் என்னாகும்?
தரையில் கிடந்தேனே
தழுவி எடுத்தாயே
தலைமுதல் அடிவரை நிம்மதி
*
பண்ணும் தொல்லைகளெல்லாம்                                                                                       துன்ப வாதை செய்கிறதே                             இன்னும் தொல்லைகள் செய்ய   பெண்ணின் உள்ளம் கெஞ்சியதே
திறக்காத ஜன்னல்கள் எல்லாம்
திடுக்கிட்டுத் திறக்கிறதே
எனக்குள்ளும் இத்தனை அறையா
எனக்கின்று புரிகிறதே
மழையில் தலைசாயும்
இலையின் நிலைபோல
எனதுயிர் உன்வசம் ஆனதே