Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Tuesday, 23 April 2024

*'சூது கவ்வும் 2' படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் 'சூரு' பாடல் வெளியீடு


*'சூது கவ்வும் 2' படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் 'சூரு' பாடல் வெளியீடு* 


*ஏ ஆர் ரஹ்மான் இசைக் கல்லூரி முன்னாள் மாணவரான எட்வின் இசையமைத்துள்ள பாடலை கண்ணன் கணபதி, ஸ்டீபன் ஜக்கரியா, பிரேம்ஜி அமரன் பாடியுள்ளனர்*


தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி வி குமார் தயாரிப்பில் எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'சூது கவ்வும் 2' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. 


இந்நிலையில் இப்படத்தில் இருந்து 'மண்டைக்கு சூரு ஏறுதே' எனும் உற்சாகமிக்க பாடல் திங்கட்கிழமை மாலை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  


ஏ ஆர் ரஹ்மான் நடத்தும் இசைக் கல்லூரியிலும், லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் பயின்ற எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ள இப்பாடலை, பிரபல மலேசிய கலைஞர் கண்ணன் கணபதி, முன்னணி சிங்கப்பூர் கலைஞர் ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். 


பாடலைப் பற்றி பேசிய இசையமைப்பாளர் எட்வின், "திரைப்படத்தின் பின்னணியில் வரும் பாடலான இதில், இதுவரை திரையுலகில் பயன்படுத்தப்படாத 'சூரு' எனும் தமிழ் வார்த்தையை உபயோகித்துள்ளோம். சூரு என்றால் கிராமத்து வழக்கில் அதீத உற்சாகத்தில் இருப்பது என்று பொருள். மலேசியாவிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த பாடலுக்கு இது மிகவும் பொருத்தமாக இருந்ததால் இதை உபயோகப்படுத்தி உள்ளோம்," என்றார். 


பாடல் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக கூறிய இசையமைப்பாளர் எட்வின், மலேசியாவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்டுள்ள கண்ணன் கணபதி, சிங்கப்பூரில் சாதனை படைத்துள்ள ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகராக மட்டும் இல்லாமல் இசையமைப்பாளராகவும் உள்ள பிரேம்ஜி அமரன் ஆகியோர் இப்பாடலுக்காக மிகச் சிறப்பான ஒத்துழைப்பு தந்துள்ளதற்கு நன்றி தெரிவித்தார். 'சூது கவ்வும் 2' திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கு தனக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் சி வி குமாருக்கும் அவர் நன்றி கூறினார். 


'சூது கவ்வும்' வெளியாகி 11 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகமான 'சூது கவ்வும் 2' தயாராகி உள்ளது. 'சூது கவ்வும்' திரைப்படத்தின் முறையான இரண்டாம் பாகமாகவும் நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் சரிவிகிதத்தில் கலந்த பரபரப்பு திரைப்படமாகவும் 'சூது கவ்வும் 2' இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். 


'சூது கவ்வும் 2' திரைப்படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி வி குமார் தயாரிப்பில் எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூது கவ்வும் 2', விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. 


***



No comments:

Post a Comment