Featured post

Director Vijay Sri G expresses gratitude to Karnataka government for granting paid menstrual leave to women

 Director Vijay Sri G expresses gratitude to Karnataka government for granting paid menstrual leave to women* *Director Vijay Sri G requests...

Sunday, 19 December 2021

முழு நீள படங்களை விட குறும்படங்களை

முழு நீள படங்களை விட குறும்படங்களை இயக்குவது சவாலானது


இயக்குநர் பேரரசு


‘முழு நீள படங்களை விட குறும்படங்களை இயக்குவது சவாலானது’ என இயக்குநர் பேரரசு தெரிவித்தார் 







குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் சென்னை மண்டல கூட்டம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிகரம் ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இயக்குநர் பேரரசு, நடிகர் ஸ்ரீராம், நடிகை 'கம்பம்' மீனா,  ஊடகவியலாளர் மணவை பொன். மாணிக்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவுக்கு வருகை தந்த பார்வையாளர்களையும், குறும்பட படைப்பாளிகளையும் குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் மாநில செயலாளரான பென்னெட் ஜே ராக்லாண்ட் வரவேற்று, சிறப்புரையாற்றினார்.


இந்த கூட்டத்தில் சென்னை மண்டல குழு படைப்பாளிகள் சங்க தலைவராக கணேஷ் ராஜ், துணை தலைவராக திருக்குமரன், செயலாளராக கே. வி. ஆர். கோபி, துணை செயலாளராக சிவராம், பொருளாளராக ஜெயசூர்யா ஒருங்கிணைப்பாளராக செந்தில் குமரன் நிஷாந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.


விழாவில் குறும்பட படைப்பாளிகள் சங்க செயலாளர் பென்னட் ஜே ராக்லாண்ட் பேசுகையில்,'' குறும்பட படைப்பாளிகள் சங்கம் குறும்பட படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் பணியை முதன்மையாக கருதுகிறது. விரைவில் குறும்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்கி, அதன் மூலம் குறும்பட படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். குறும்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் குறும்பட படைப்பாளிகள் சங்கம் இணைந்து உருவாக்கிய படைப்புகளை வெளியிடுவதற்காக எதிர் வரும் தமிழ் புத்தாண்டு முதல் புதிய டிஜிட்டல் தளம் தொடங்கப்படும் .


குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் ஒரு அங்கமான பி ஜே ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் 'சுவை ஆறு' என்ற பெயரில் குறும்பட தொடர் ஒன்று தயாரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. உலகிலேயே முதன் முதலாக தயாராகும் குறும்பட தொடர் இது . தமிழில் தயாராவது நம் அனைவருக்கும் பெருமை. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.'' என்றார்.


இதனைத் தொடர்ந்து 'சுவை ஆறு' என்ற குறும்பட தொடரை இயக்கும் ஆறு இயக்குநர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.


விழாவில் இயக்குநர் பேரரசு பேசுகையில்,'' முழுநீள திரைப்படங்களை இயக்குவதை விட குறும்படங்களை இயக்குவது சவாலானது. குறும்படங்கள் என்பது சூரிய ஒளியை, ஒரு குவி ஆடியில் செலுத்தி, அதனூடாக ஒரு தாளை எரிய விடுவதற்கு சமமானது. வீரியமான படைப்புகள் தான் குறும்படங்கள். அறிஞர் ஒருவர் ஒரு பக்கத்திற்கும் மேலாக கடிதம் ஒன்றை எழுதி விட்டு, அடிக்குறிப்பாக எனக்கு சிந்திக்க நேரமில்லை. அதனால் சுருக்கமாக எழுத முடியவில்லை என்று எழுதினார். அதைப் போன்றதுதான் குறும்படங்கள். கால அவகாசத்தில் குறைவாக இருந்தாலும் படைப்பாளி பார்வையாளனுக்கு கடத்த வேண்டிய விசயத்தை துல்லியமாக சொல்வதுதான் குறும்படம். குறும்பட படைப்பாளிகள் சங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்.'' என்றார்.


நடிகர் ஸ்ரீராம் பேசுகையில்,'' குறும்பட படைப்பாளிகள் சங்கம் போன்ற புதிய முயற்சிகளுக்கு என்னுடைய ஆதரவு என்றும் இருக்கும். சின்னத்திரை தொடர், வலைதள தொடர், இணையத் தொடர் என்பதைப்போல் புதிதாக அறிமுகமாகவிருக்கும் குறும்பட தொடருக்கும் விரைவில் மக்களின் ஆதரவு கிடைக்கும். 'சுவை ஆறு' என்ற குறும்பட தொடரை இயக்கும் இயக்குநர்கள் உள்ளிட்ட படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.


நடிகை கம்பம் மீனா பேசுகையில், ''குறும்பட படைப்பாளிகள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இயக்குநர்கள் தங்களது குறும்படங்களில் எமக்கு வாய்ப்பளித்தால், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக நடிக்க தயாராக இருக்கிறேன். திரு பென்னட் அவர்களின் சீரிய முயற்சியில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்த குறும்பட படைப்பாளிகள் சங்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.'' என்றார்.


இதனைத் தொடர்ந்து குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் மாநில செயலாளர் விழாவிற்கு வருகை தந்திருந்த குறும்பட இயக்குநர்கள், நடிகர்கள், கலை இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், குறும்பட ஆர்வலர்கள்... ஆகியோரிடம் சங்கத்தின் செயல்பாடு குறித்தும், சங்கத்தின் எதிர்கால திட்டம் குறித்தும் விளக்க உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment