Featured post

இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’”

 *“இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’” -நடிகர் சிவகார்த்திகேயன்...

Friday, 9 January 2026

தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026)

 *தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026) போட்டியில் அதிகாரப்பூர்வ நுழைவு!*




இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026) நாமினேஷன் புராசெஸில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருக்கும் ‘கெவி’ இனி வெளியாக இருக்கும் பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் முன்மாதிரியாக மாறியுள்ளது. 


தமிழ் தயாளன் இயக்கத்தில், ஆர்ட்அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவான ’கெவி’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் கடினமான இயற்கை சூழலை பின்னணியாகக் கொண்டு, கொடைக்கானல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் தம்பதியின் வாழ்க்கை, அவர்களின் போராட்டம் மற்றும் நீதிக்கான போராட்டத்தை இந்த படம் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியது.


படத்தில் ஆதவன் மற்றும் ஷீலா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜாக்குலின் லிடியா, ஜீவா சுப்ரமணியன், பி. கணேஷ், விவேக் மோகன், உமர் ஃபரூக் உள்ளிட்டோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். கிராமப்புற இந்தியாவின் பண்பாடு, சமூக மற்றும் சுற்றுச்சூழல் உண்மைகளை பிரதிபலிக்கும் இந்த திரைப்படம், உலகளாவிய பார்வையாளர்களும் தங்களுடன் இணைத்து கொள்ளும் வகையிலான உணர்வுப்பூர்வமான சினிமா அனுபவத்தைக் கொடுத்தது.


ஆஸ்கார் விருதுகள் பரிசீலனைக்காக, அகாடமி ஸ்கிரீனிங் ரூம் (ASR) எனப்படும் பாதுகாப்பான டிஜிட்டல் தளத்தில் ‘கெவி’ திரைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அகாடமி உறுப்பினர்கள் படத்தை பார்வையிட்டு வாக்குப்பதிவு செய்ய முடியும்.


படத்தின் ஆஸ்கார் பயணம் குறித்து தயாரிப்பாளர் ஜெகன் ஜெயசூர்யா கூறியதாவது, “அகாடமியின் சிறந்த திரைப்படம் (Best Picture) பிரிவிற்குத் தேவையான கலைநயம் மற்றும் உணர்வுப்பூர்வமான தாக்கம் ’கெவி’ திரைப்படத்தில் இருப்பதாக நான் நம்புகிறேன். ‘கெவி’ திரைப்படத்திற்கு இதுவரை கிடைத்த வரவேற்பு உலகின் உயரிய விருது மேடைகளில் இந்த படம் போட்டியிடும் தகுதி கொண்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. இதற்காக திட்டமிட்ட மற்றும் வலுவான விருது பிரச்சாரத்தை (awards campaign) மேற்கொள்ள தயாராக உள்ளோம்” என்றார்.


இந்த வருடத்தின் அகாடமி விருதுகளுக்கான அதிகாரப்பூர்வ போட்டி திரைப்படமாக நுழைந்த ‘கெவி’ திரைப்படம், ‘ஹோம்பவுண்ட்’ உள்ளிட்ட பிற முக்கிய இந்திய படங்களுடன் இணைகிறது. அகாடமி உறுப்பினர்கள் ஜனவரி 12 முதல் 16, 2026 வரை இறுதி நாமினேஷன்களுக்கான வாக்குப்பதிவை மேற்கொள்ள உள்ளனர். அதிகாரப்பூர்வ நாமினேஷன் பட்டியல் ஜனவரி 22, 2026 அன்று அறிவிக்கப்பட உள்ளது.


*’கெவி’ திரைப்படம் பற்றி:*

ஆர்ட்அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், தமிழ் தயாளன் இயக்கத்தில் தமிழ் சர்வைவல் திரைப்படமாக ‘கெவி’ உருவாகியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம், இயற்கையின் கொடூர சக்திகளுக்கு எதிராக மனிதனின் தைரியம், நீதி மற்றும் சகிப்புத்தன்மையை பற்றி பேசுகிறது.

No comments:

Post a Comment