Featured post

Amoham Studios White Lamp Pictures Subhashini K presents

 *Amoham Studios White Lamp Pictures Subhashini K presents* *Filmmaker B. Manivarman Directorial* *Taman Akshan-Malvi Malhotra starrer “Jenm...

Tuesday, 16 March 2021

மக்களை ஆள நினைப்பவர்களுக்கு

 *மக்களை ஆள நினைப்பவர்களுக்கு மனமிருக்கின்றதா?*

தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் சட்ட மன்றத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு விட்டன. போட்டிப்போட்டுக்கொண்டு ஏலம் விடுவதுபோல் இலவசங்களை அள்ளி இறை த்துக்கொண்டுப்போகும் ஒரே ஒரு கட்சி கூட அடிப்படைதேவையான இவைகள் இரண்டைப்பற்றியும் கண்டுகொள்ளவேயில்லை.

மாதம் ஒன்றுக்கு பத்தாயிரத்துக்கும் குறைவாக வருமானம் உள்ள 70  விழுக்காடு மக்கள்  கல்விக்காகவும், மருத்துவச் செலவுக்காக மட்டுமே இரவு, பகலாக உழைத்து வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களுக்கு, எதிர்காலத் தலைமுறைக்கு கல்வியையும், மருத்துவத்தையும் தரவேண்டியதுதான் முதல் கடமையென உணர்ந்தால் இப்பொழுது கூட விட்டுபோனவைகளாக கருதப்பட்ட திட்டங்களை அறிவித்ததுபோல் இதற்கான சட்டங்களையும் கொண்டு வருவோம் என மக்களை ஆள நினைக்கும் கட்சிகள் அறிவித்து  உறுதியளிக்கலாம்.


அரசின் மொத்த செலவில் 40 விழுக்காடுத்தொகை அரசு ஊழியர்களுக்கே மாத ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும் செலவிடப்படுகின்றன. மக்களின் வரிப் பணத்தில் 40 விழுக்காட்டை எடுத்துக்கொள்கின்ற இவர்கள்தானே அரசுப் பள்ளிகளையும் மருத்துவ மனைகளையும் சீர் செய்ய வேண்டும்.


அரசாங்கத்தின் ஊதியமாக ஒரு ரூபாய் வாங்கும் ஊழியரிலிருந்து மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் வரை மக்களின் அங்கத்தினராக இருக்கும் எவராக இருந்தாலும் அரசுப் பள்ளிகளில்தான் தங்களின் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். அரசு மருத்துவ மனைகளில்தான் குடும்பத்தினர் அனைவருக்கும் மருத்துவம் செய்துகொள்ள வேண்டும் எனும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். அப்பொழுதுதான் எக்கேடு கெட்டால் என்ன என கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசுப் பள்ளிகள் மாணவர்கள் பயிலும் தகுதி யுடைய இடமாக மாறும். மாட்டுக்கொட்டகைகள் போல் மாறிக்கொண்டிருக்கும் அரசு மருத்துவ மனைகளும் தரமுள்ளவைகளாக மாறும்.

ஏற்கெனவே கடனில் சிக்கித்தவிக்கும் தமிழக அரசின் நிதி நிலையில்தான் ஒவ்வொரு கட்சியும் எண்ணற்ற இலவசங்களையும், நூற்றுக்கணக்கான திட்ட உறுதிமொழிகளை தந்துள்ளன! இந்த இரண்டு திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்துவோம் எனக்கூறுவதற்கு பணம் தேவையில்லை! மனம்தான் தேவை!

மக்களை ஆள நினைப்பவர்களுக்கு மனமிருக்கின்றதா?

-    தங்கர் பச்சான், 16.03.2021

No comments:

Post a Comment