சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் !
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“புருஷன்” திரைப்படத்தை Benzz Media Pvt Ltd சார்பில் A.C.S.அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படத்தை சுந்தர் சி இயக்க, விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, திரைப்பட வர்த்தக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த படம், சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சுந்தர் சி – விஷால் – ஹிப்ஹாப் தமிழா கூட்டணி, முன்னதாக வெளியான “ஆம்பள” திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைவது, ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரைக்கதை மற்றும் வசனம் - வெங்கட் ராகவன்.
சமீபத்தில் வெளியான “புருஷன்” படத்தின் அறிவிப்பு வீடியோ, அதிரடி மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் ரசிகர்களை கவர்ந்து, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. குறுகிய நேர வீடியோவிலேயே, சுந்தர் சி-யின் தனித்துவமான கமர்ஷியல் பாணி வெளிப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க, பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். “கமர்ஷியல் கிங்” சுந்தர் சி-யின் முத்திரையுடன், குடும்பத்தோடு ரசித்து கொண்டாடும் ஒரு முழுமையான கமர்ஷியல் எண்டர்டெயினராக புருஷன் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், நடிகர்–நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.











































