Featured post

ஸ்பைடர்-மேன் 'Spider-Man: Brand New Day' உடன் ஒரு புதிய சகாப்தத்திற்குள்

 *ஸ்பைடர்-மேன் 'Spider-Man: Brand New Day' உடன் ஒரு புதிய சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார் – முன்னோட்டம் இப்போது வெளியானது!* ...

Wednesday, 18 March 2026

குறுக்கு வழியில் வந்த ஆதவ் அர்ஜூனா ரஜினிகாந்த்தைப் பற்றி பேச தகுதியில்லாதவர்

 *குறுக்கு வழியில் வந்த ஆதவ் அர்ஜூனா ரஜினிகாந்த்தைப் பற்றி பேச தகுதியில்லாதவர்*



*பி.டி.செல்வகுமார் பேட்டி*


குறுக்கு வழியில் வந்த ஆதவ் அர்ஜூனா ரஜினிகாந்த்தைப் பற்றி பேச தகுதியில்லாதவர் என திரைப்பட தயாரிப்பாளரும், மாநில திமுக வர்த்தகர் அணி துணை செயலாளருமான பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; எப்போதுமே அடிக்காத குழந்தையும், முறிக்காத முருங்கையும் உதவாமல் தான் போகும். அதுபோலத்தான் ஆதவ் அர்ஜூனா விஜய்யுடன் வந்து சேரும் போதே எனக்கு தெரியும் விஜய்யும், தவெகவும் உருப்படாது என்பது. படையப்பா, முத்து உள்ளிட்ட படத்தில் நான் கே.எஸ்.ரவிகுமாருடன் இணைந்து பணியாற்றும் போதே ரஜினிகாந்த் அவர்களின் மனிதநேயம் குறித்து தெளிவாக தெரிந்து கொண்டேன். 

ரஜினி அவர்களுடன் பணிபுரிந்த பண்டரிபாய், ஹேமநாத் பாபு, வி.கே.ராமசாமி, கலைஞானம், சத்யா ஸ்டுடியோ பத்மநாபன், ஏ.வி.எம். ராஜா ஆகியோருக்கு அருணாச்சலம் படத்தை தயாரித்து பெரும் தொகை உதவியாக வழங்கினார். அப்போது இது பரபரப்பாக பேசப்பட்டது. 

காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்தார். ஜெயலலிதாவை மேடையில் வைத்துக் கொண்டே அவருக்கு எதிராக பேசினார். இனி ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என கர்ஜித்தவர். கலைஞருக்கு மெரினாவில்  இடம் கிடைக்க ஆளும் கட்சி மறுத்த போது எதிர்த்து நின்றவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டுமென அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தைச் சேர்ந்த லதா என்ற பெண்ணை திருமணம் செய்து இன்று வரை அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். 

சினிமாத்துறையில் தன்னுடன் இருந்த விட்டல் கிருஷ்ண ராவ் முரளி ஆகியோருக்கு அப்பார்ட்மென்ட் வழங்கினார். மேலும் தனக்காக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கேளம்பாக்கத்தில் 1 கிரவுண்ட் நிலம் வழங்கினார். இத்தனை பண்பாடு மிகுந்தவர். 

இலங்கை பிரச்சினையின் போது என்னுடைய ரசிகர்கள் படையுடன் இலங்கைக்கு செல்வேன் என துணிச்சலாக பேசியவர். 

இப்படி பல்வேறு பிரச்சினைகளை ஆளுமையுடன் எதிர்த்து நின்ற ரஜினிகாந்த் அவர்களை பொதுவெளியில் பயந்தார் என்று பேசுவதற்கு குறுக்கு வழியில் வந்த ஆதவ் அர்ஜூனா ரஜினிகாந்த்தைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. திரைப்படத் துறையைச் சார்ந்தவன் என்ற வகையில் எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment