Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Thursday, 19 December 2019

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி , இயக்குநர் மணிகண்டன்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி , இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில்  உருவாகும் 'கடைசி விவசாயி'

நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என 'காக்கா முட்டை' படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதனைத் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, 'ஆண்டவன் கட்டளை' என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். 'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு, நீண்ட மாதங்களாகவே தன் அடுத்தப் படத்தில் பணிபுரிந்து வந்தார். 'கடைசி விவசாயி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பல்வேறு திரையுலகினரும் இந்தப் படத்துக்காக காத்திருக்கிறேன் எனக் கூறியிருப்பதே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மணிகண்டன்,





"விவசாயத்தை ஒரு தொழிலாக பார்க்காமல், ஒரு வாழ்வியலாக பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது தான் கதையின் கரு. ஒரு கிராமத்தில் நல்ல விஷயங்களே நடக்காமல் இருக்கிறது. குலதெய்வம் கும்பிடாமல் இருக்கிறது என்று அதை கும்பிட ஊர் தயாராகும். அதை கும்பிடும் வழிமுறைக்கு அனைவரும் ஒரு மரக்கா நெல் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தெரியவரும், அந்த ஊரில் யாரும் விவசாயம் செய்யவில்லை என்று. 20 வருடமாக குலதெய்வத்தை கும்பிடவில்லை என்பதால் யாருக்குமே இந்த நெல் விஷயம் ஞாபகத்தில் இருக்காது. அப்போது அந்த ஊரில் வயதான பெரியவர் ஒருவர், சின்ன நிலத்தில் தனக்கான விவசாயத்தை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 85 வயது மதிக்கத்தக்க பெரியவர், அவருக்கு காதும் அவ்வளவாக கேட்காது. அவர் உண்டு, தோட்டமுண்டு என்று இருப்பார். அந்த ஊரே அவரிடம் போய் நெல் கேட்கும்.

அவர் என்ன செய்கிறார், குலதெய்வக் கோயில் கும்பிடுவது எப்படி மாறியுள்ளது, வழிபாட்டு முறையில் நமக்கு இருக்கும் நம்பிக்கை என அனைத்தும் திரைக்கதையாக இருக்கும்.கிராமத்தில் ஒரு துக்கத்தைச் சொன்னால் கூட நையாண்டியாக சொல்வார்கள். ஆகையால் படத்தில் காமெடியை தவிர்க்கவே முடியாது. படம் முழுக்க காமெடி இருந்துக் கொண்டே இருக்கும். நாகரீகம் வளர்வதற்கு முன்னாள் இருந்த மனிதர்களும், நாகரீகத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதர்களும் வரும் போது எப்படி காமெடி இல்லாமல் இருக்கும். அதே போல், அந்த உரையாடல் நம்மை யோசிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும்.

உசிலம்பட்டியைச் சுற்றி சுமார் 16 கிராமங்களில் படமாக்கியிருக்கேன். அங்கிருக்கும் விவசாய முறை ரொம்ப பழசு. நம்ம தமிழர்களோட விவசாய முறையை இன்னும் கையில் வைத்திருப்பது கரிசல்காட்டு விவசாயிகள் தான்.  அவர்களை கடைசி விவசாயிகளாகத் தான் பார்க்கிறேன். இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்து விவசாயம் முடிந்துவிடப் போகிறதோ என்று நினைத்துவிடாதீர்கள்.
கிராமத்தில் இருப்பவர்களையே நடிக்க வைத்துள்ளேன். நேரடி ஒலிப்பதிவு என்பதால் அவர்களுடைய குரலிலேயே முழுப்படமும் இருக்கும். விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் சின்ன கேரக்டர் பண்ணியிருக்காங்க. இருவரது கேரக்டருமே ரொம்ப அருமையாக வந்துருக்கு. ஏன் அவர்களை நடிக்க வைத்தேன் என்று படம் பார்த்தால் தெரியும்” என்று தெரிவித்தார்.

2020-ம் ஆண்டு ஜனவரி மாத வெளியீட்டுக்கு தயாராகி வரும் இந்தப் படத்துக்கு தன் இசையால் உயிரூட்டியிருக்கிறார் இளையராஜா. கலை இயக்குநராக தோட்டாதரணி பணிபுரிந்துள்ளார். படத்தின் களம் கிராமம் என்றாலும் அதில் நீதிமன்றம், கோவில் திருவிழா போன்ற பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கியுள்ளனர். மேலும், இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான அரங்குகளில் கூட நேரடி ஒலிப்பதிவிலேயே இந்தப் படம் உருவாகியுள்ளது.சினிமா ரசிகர்களுக்கு இந்த 'கடைசி விவசாயி' ஒரு விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

No comments:

Post a Comment