*'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’, காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த ஆங்கிலப் படத்தின் டீசர் வெளியீடு, திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று வெளியாகிறது*
5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் (லண்டன், யுகே) நிறுவனம் தயாரித்து அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ள அமானுஷ்ய காதல் கதையான 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' திரைப்படத்திற்கு சிம்பொனி இசையை வழங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.
தக்ஷ் மற்றும் மாடில்டா பாஜர் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று இது வரை 1.7 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா, 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' படத்திற்கு தனது காலத்தால் அழியாத திறமையின் மூலம் சிம்பொனி இசையை வழங்கியுள்ளார். மாஸ்கோ போ டை ஆர்கெஸ்ட்ராவுடன் பதிவு செய்யப்பட்ட இந்த இசை, படத்திற்கு ஆழத்தையும் வலுவையும் சேர்த்துள்ளது.
இப்படத்தின் மூலம் லண்டனைச் சேர்ந்த திறமை வாய்ந்த கலைஞரான தக்ஷ் திரைத்துறையில் அறிமுகமாகிறார். போலந்து நாட்டின் வார்சாவைச் சேர்ந்த மாடில்டா பாஜர் நாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் மற்றும் ஜீவாவுடன் இணைந்து 'அகத்தியா' திரைப்படத்தில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் டீசர், உணர்ச்சிபூர்வமான சினிமா அனுபவத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பூட்டும் வகையில் டீசர் அமைந்துள்ளது.
உண்மை சம்பவங்களால் உத்வேகம் பெற்ற இயக்குநர் அஜித்வாசன் உக்கினா, இதுவரை சொல்லப்படாத கதையை மர்ம முடிச்சுகளைக் கொண்டு காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் உதவியோடு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைத்துள்ளார். தாங்கள் காதலை நேர்மறையான வகையில் முறித்துக் கொள்ள தனிமையான எஸ்டேட்டுக்கு செல்லும் ஒரு ஜோடி அங்கு நடைபெறும் சம்பவங்களால் எத்தகைய மாற்றங்களை சந்திக்கிறார்கள் என்பதை 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' ரசிகர்களுக்கு சொல்லும்.
"பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக இணைக்கும் கதையை யதார்த்தமாக வழங்கி இருக்கிறோம். இப்படம் காதலின் சக்தியை ரசிகர்களுக்கு எடுத்துரைக்கும்," என்று 5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
இப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவின் ஒலிப்பதிவுகளின் படம்பிடித்துள்ள படக்குழுவினர், மனதை மயக்கும் அழகான இசை உருவாகும் செயல்முறையைப் பற்றிய ஒரு சிறப்பு காணொலியை வெளியிடத் தயாராகி வருகின்றனர்.
டீசரைக் காண: https://youtu.be/ojcsPleHlzo
5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கிரிஷ் தயாரிப்பில், அஜித் வாசன் உக்கினா இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் இசையில்.உருவாகியுள்ள 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ 2026 காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
டீசரைக் காண: https://youtu.be/ojcsPleHlzo
***




No comments:
Post a Comment