Featured post

மே 23ல் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும் ‘வேம்பு’

 *மே 23ல் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும் ‘வேம்பு’* *மலையாளப் படங்களை கொண்டாடுகிறோம்...தமிழ்ப்படங்களை விட்டுவிடுகிறோம்*  *-இயக்குநர் ஜஸ...

Monday, 5 May 2025

மே 23ல் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும் ‘வேம்பு’

 *மே 23ல் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும் ‘வேம்பு’*


*மலையாளப் படங்களை கொண்டாடுகிறோம்...தமிழ்ப்படங்களை விட்டுவிடுகிறோம்* 

*-இயக்குநர் ஜஸ்டின் பிரபு வருத்தம்*. 


மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. 


அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா  கதாநாயகியாக நடித்திருக்கிறார். 


மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்து தற்போது ரிலீஸுக்குத்  தயாராக உள்ளது.


 நிறைய படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வந்து வெற்றி காணும் "உத்ரா புரொடக்சன்ஸ்-  (ஹரி உத்ரா ) 'வேம்பு' படத்தை மே-23ஆம் தேதி தமிழகமெங்கும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியிடுகிறது. 


இன்னொரு பக்கம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளவும் ‘வேம்பு’ படம் அனுப்பப்பட்டு வருகிறது. 


அந்தவகையில் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான வேம்பு, சிறந்த நடிகருக்கான விருதை ஹரிகிருஷ்ணனும், சிறந்த நடிகைக்கானை விருதை ஷீலாவும்  பெற்றனர். இவ்விரண்டு விருதுகளைப் பெற்றது இப்படத்திற்கான முதல் அங்கீகாரம் என்பதாகப் படக்குழு மகிழ்கிறது. 


இயக்குநர் ஜஸ்டின் பிரபு கூறும்போது, “படத்தின் நாயகன் ஹரிகிருஷ்ணன், நாயகி ஷீலா  இருவருமே வித்தியாசமான கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்கள். 


அந்த வகையில் ஹரி கிருஷ்ணன் இந்த வேம்பு படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரமும் கூட ரசிகர்களுக்கு ஆச்சரியம் தரக்கூடிய ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். அமதாபாத் திரைவிழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஹரிகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது அதை உறுதிசெய்துள்ளது. 


சமீபத்தில் நடிகர் விக்ரம்  ஹரியைப் பாராட்டி பேசியது மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.


நாயகி ஷீலா நடித்த ‘டூ லெட்’ திரைப்படம் 100 சர்வதேச விருதுகளுக்கு மேல் பெற்றுள்ளது. அவர் கதாநாயகியாக நடித்த மண்டேலா திரைப்படம் தேசிய விருது பெற்றது. தற்போது இந்த வேம்பு திரைப்படம் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறையாக கலந்து கொண்டுள்ளதுடன் சிறந்த நடிகைக்கான விருதையும் ஷீலாவுக்கு பெற்றுத் தந்துள்ளது. 


நம்மைப் பொறுத்தவரை வெளிநாட்டில் இருந்து பெறும் விருதுகளைத் தான் உயர்வாக நினைக்கிறோம். 


ஆனால் இங்கே நம் நாட்டிலேயே வழங்கப்படும் விருதுகளும் உயர்வானது என்று தான் நான் நினைக்கிறேன். 


மலையாளத் திரையுலகில் வெளியாகும் யதார்த்தப் படங்களை நாம் ஆஹா ஓஹோ எனக் கொண்டாடுகிறோம்.


 நம் தமிழ் சினிமாவிலும் சின்ன பட்ஜெட்டில் வெளியான அருவி, டாடா, குடும்பஸ்தன் போன்ற பல படங்கள் வந்திருக்கின்றன. 


இப்போது "டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய வெற்றி பெற்றுள்ளது. 


இந்த படங்கள் எல்லாமே ஒரு சமூகக் கருத்தை உள்ளடக்கி வெளியான படங்கள். கமர்சியலாகவும் பெரிய வெற்றியைப் பெற்றன. 


சிவகார்த்திகேயன் நடிப்பில்  கமர்சியலாக வெளியான "டான்" படம் கூட, தந்தையின் அன்பு என்கிற சென்டிமென்ட்டை மையப்படுத்தி தான் வெற்றி பெற்றது. 


இன்றைய தேதியில் சென்டிமென்ட்டுடன் பின்னிப் பிணைந்து தான் நம் தமிழ் சினிமா இருக்கிறது. அதுதான் பார்வையாளர்களின் மன நிலையாகவும் இருக்கிறது. அந்த வரிசையில் இந்த வேம்பு திரைப்படமும் சமூக கருத்து கொண்ட படமாக மட்டுமல்லாமல் சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படமாகவும் இருக்கும் என நான் உறுதியாகச் சொல்கிறேன். 


இது ஒரு பெண்களுக்கான படமாக மட்டுமல்லாமல், இப்போதைய தலைமுறைக்கான படமாகவும் இருக்கும். 


இன்றைய சூழலில் ஒரு தந்தை எப்படி பெண் குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும், அவர்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் சூழலை புரிந்து எப்படி ஆதரவாக இருக்க வேண்டும், குழந்தைகள் தங்களுக்கு என ஒரு கனவு இருந்தாலும் பெற்றோரை எப்படி மதித்து நடக்க வேண்டும் போன்ற பல சென்டிமென்ட்டான விஷயங்கள் இந்த படத்தில் இருக்கின்றன. 


ஹரிகிருஷ்ணனை வடசென்னை பையனாகவே தான் பார்த்து வருகிறோம். 


இப்படத்தில்  முழுக்க முழுக்க ஒரு கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் ஹரி. 


இதற்காக கிராமத்துப் பழக்க வழக்கங்களையெல்லாம் கற்றுக்கொண்டு ஒரு கிராமத்து மண் சார்ந்த மனிதனாகவே நடித்துள்ளார்.


 ஷீலாவின் தந்தையாக தியேட்டர் லேப் ஜெயராவ் ஒரு இயல்பான வாழ்வியல் தந்தையாக வாழ்ந்துள்ளார் என்று சொல்லலாம். 


பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த ஜானகி  கண்கலங்க வைக்கும் விதமாக மிகச் சிறந்த யதார்த்தமான நடிப்பை இதில் வெளிப்படுத்தி உள்ளார்.


தங்க மகன் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஏ.குமரனின் ஒளிப்பதிவு மிகச் சிறந்ததாக பேசப்படும். வேம்பு படத்தை அழகிய வாழ்வியலாக ஒளிப்பதிவு செய்துள்ளார். அதே முகம், ரபேல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய மணிகண்டன் முரளி  இசையமைத்துள்ளார். 


மிருதன் படத்தில் பணியாற்றிய கே.ஜே வெங்கட்ராமன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்குநர் கோபி கருணாநிதி படப்பிடிப்பு லொகேஷன்களில் என்ன கிடைக்கிறதோ அதை வைத்து காட்சிகள் இயல்பாக அமையும் விதமாக சுற்றுப்புற சூழலை உருவாக்கிக் கொடுத்தார். 


படம் யதார்த்தமாக வந்திருப்பதற்கு அவரது கலை இயக்கமும் ஒரு காரணம்.


படத்தின் தயாரிப்பாளர்கள் கோல்டன் சுரேஷ் மற்றும் எஸ்.விஜயலட்சுமி தம்பதியினர் படம் இந்த அளவுக்கு விருதுகளுக்கு அனுப்பப்படும் வகையில் தரமாக உருவாகி இருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் இவர்கள் கொடுத்த உற்சாகமும் ஒத்துழைப்பும் தான்..


 அறிமுக இயக்குநர் தானே என்று நினைக்காமல் ஷீலா , ஹரிகிருஷ்ணன் இருவருமே படம் முழுவதும் மிகப்பெரிய ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த அந்த ஒத்துழைப்பில் தான் படத்தைக் குறித்த நேரத்தில் முடிக்க முடிந்தது.   


அந்த வகையில் இந்த வேம்பு திரைப்படம் மே 23 இல் வெளியிடத் திட்டமிட்டு வேலைகள் நடந்து வருகின்றன. ஹரி உத்ரா பெரிய அளவில் வெளியிடுகிறார்.  மக்களுக்கு படம் பிடிக்கும்  என நான் நம்புகிறேன்” என்று கூறினார் .


*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்*


தயாரிப்பு ; கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி


இயக்கம் ; V.ஜஸ்டின் பிரபு


ஒளிப்பதிவு ; A.குமரன்


படத்தொகுப்பு ; KJ. வெங்கட்ரமணன்


இசை ; மணிகண்டன் முரளி


கலை ; கோபி கருணாநிதி


பாடகர்கள் ; அந்தோணி தாசன், தஞ்சை சின்ன பொண்ணு, 

சுந்தர அய்யர் மற்றும் கபில் கபிலன், மீனாட்சி இளையராஜா, மணிகண்டன் முரளி.


மக்கள் தொடர்பு ; A.ஜான்

No comments:

Post a Comment