Featured post

கன்னடத்து பைங்கிளி' படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

 *'கன்னடத்து பைங்கிளி' படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா* *கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமான...

Showing posts with label film maker sargunam. Show all posts
Showing posts with label film maker sargunam. Show all posts

Thursday, 4 July 2019

ஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும் கொண்டாடப்படுகிறது



ஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும் கொண்டாடப்படுகிறது என்றால், அந்த படத்தின் வீச்சு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி ஒரு படம் மீண்டும் வராதா? என ரசிகர்களை ஏங்க வைத்த, களவாணி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி, வெளியாக இருக்கிறது. வர்மன்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்,  இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'களவாணி 2' படத்தில், முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா உட்பட பெரும்பாலான நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்க்ரீன்சீன் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

பாடலாசிரியராக இருந்த என்னை இசையமைப்பாளராக்கியவர் சற்குணம் சார். 3 பாடல்களை எழுதி, அதற்கு நானே இசையமைத்திருக்கிறேன். மேலும் பல படங்கள், பாடல்களுக்கும் இசையமைத்து வெற்றி பெற்று, அதை சற்குணம் சாருக்கு சமர்ப்பணம் செய்ய விரும்புகிறேன் என்றார் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் மணி அமுதவன். 

விமல், ஓவியா ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தபோது ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. அந்த தயக்கத்தை போக்கி, இருவரும் என்னை மிகவும் சகஜமாக்கினர். இந்த படத்தின் மூலம் விமல் என்ற நல்ல நண்பர் எனக்கு கிடைத்திருக்கிறார். சரண்யா மேடம், இளவரசு சார் போன்ற மிகச்சிறந்த நடிகர்களுடன் ஒரு நாள் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. நிறைய கற்றுக் கொண்டேன். இது உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட படம், அடிமட்ட அரசியலை பேசும் படம். நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றார் நடிகர் துரை சுதாகர். 

களவாணி 2 எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்வியல் சார்ந்த படங்களை கொடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். அதை சற்குணம் சார் மிக எளிதாக செய்கிறார். இந்த படத்துக்கு பின்னணி இசை அமைக்கும்போது படத்தை பார்த்தேன், மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன்.

10 வருடங்கள் கழித்தும் என்னை பார்ப்பவர்கள் அறிக்கி அப்பா, களவாணி அப்பா என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் களவாணி. எனக்கும் சரண்யா அவர்களுக்கும் பெயர் சொல்லும் படங்களில் ஒன்று. துரை சுதாகர் நடிக்க வரும் முன்பே அவருக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தனர். அவர் நடிப்பில் அந்த பயிற்சி தெரிந்தது. ஓவியா மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறார், இது அப்படியே தொடர வேண்டும். களவாணி 3, 4, 5 என அடுத்தடுத்த பாகங்கள் வர வேண்டும் என விரும்புகிறேன் என்றார் நடிகர் இளரவசு.

களவாணி எனக்கு கிடைத்த ஒரு வாழ்நாள் சாதனை திரைப்படம். அந்த படத்தில் வந்த 'ஆடி போயி, ஆவணி போயி' வசனம் எனக்கு உலகப் புகழை பெற்று தந்தது. முதல் பாகத்தில் இருந்து இந்த படம் வித்தியாசமாக இருக்கும். புது களத்தில் இந்த கதை நிகழும். படத்தில் நடிக்கும்போது முழுக்க சிரித்துக் கொண்டே இருந்தேன். முதல் இரண்டு நாள் படப்பிடிப்பிலேயே படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை உருவானது. நான் இணைந்து நடித்த நடிகர்களிலேயே இளவரசு சாருடன் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஓவியா ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை ஆகிட்டாங்க, அவருடைய வளர்ச்சியை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

களவாணி எனக்கு மிகவும் நெருக்கமான படம். சற்குணம் சார் தான் எனக்கு ஓவியா என்ற பெயரை வைத்தார். அந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களையும் இங்கு பார்ப்பது மகிழ்ச்சி. எனக்கும் விமலுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை விட, இளவரசு சார், சரண்யா அம்மாவுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி தான் சிறப்பாக இருக்கும். விமல் என் நெருங்கிய நண்பர், அவர் தான் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர். இந்த படமும் களவாணி அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்றார் நடிகை ஓவியா.

களவாணி படத்தை விட, இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள். இது களவாணி படத்தின் முழு தொடர்ச்சி இல்லை. வேறு ஒரு புது களத்தில் கதை இருக்கும். விமலின் களவாணி தோற்றத்தை முதல் நாள் படப்பிடிப்பில் பார்த்தபோதே அந்த நம்பிக்கை வந்தது. ஓவியா மகளிர் குழு தலைவியாக நடித்திருக்கிறார். களவாணி 2 படம் பற்றி சொன்னபோதே எந்த கேள்வியும் கேட்காமல் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார் ஓவியா. பயங்கர காய்ச்சல், ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்து கொடுத்தார். சரண்யா மேடம் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். இளவரசு சார் படப்பிடிப்பை தாண்டி, என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை அழைத்து பேசுவார். ஆலோசனை வழங்குவார். வில்லன் கதாபாத்திரத்தில் துரை சுதாகர், ஓவியாவின் அப்பாவாக வில்லன் ராஜ், சூரிக்கு பதில் ஆர்ஜே விக்னேஷ்காந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். நடராஜன் சங்கரன், மணி அமுதவன், ரொனால்ட் ரீகன், வி2 என 4 இசையமைப்பாளர்கள் இந்த படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். நிச்சயம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றார் இயக்குனர் சற்குணம்.


இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் குமார், ரோபோ சங்கர், வில்லன் ராஜ், படத்தொகுப்பு ராஜா முகம்மது, ஒளிப்பதிவாளர் மாசாணி, இசையமைப்பாளர் ரொனால்ட் ரீகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Saturday, 11 May 2019

Actor Vimal had received a discussed amount from Marina Pictures



Actor Vimal had received a discussed amount from Marina Pictures Singaravelan on 13.10.2017 after signing on copyrights agreement to produce Kalavani 2 for his own production studio. However, he had created an impression by displaying to everyone that the film is being produced by director Sargunam. Marina Pictures Singaravelan who has acquired the Copyrights had given the Tamil Nadu theatrical rights to Dhanalakshmi Pictures. However, the latter opted for the legal proceedings as the Tamil Nadu rights were not given to them as promised and got the verdict of partial ban on film’s release for 6 weeks.  Actor Vimal, director Sargunam and producer Singaravelan had been listed as defendants in this case. 

At this situation, director Sargunam has approached the court saying that he has nothing to do with the agreements signed between both the parties and has requested the judiciary to remove his name from the defendants’ list. 

Based on the documents he has submitted, the court has passed the verdict that Sargunam has no objection for film’s release, but others haven’t compromised on this and that the case can be carried forward with the submission of additional documents. 

Consequently, Dhanalakshmi Pictures has now decided to appeal against this verdict at Court. It has claimed that the movie shouldn’t be released until the legal proceedings are over. In case of not going by this, the production house has decided to send notice to Screen Scene Media Entertainment, Kasthuri Films, leading satellite channel and overseas distributors that they would be held responsible for the financial compensation. 

Although, the partial ban of ‘Kalavani 2’ has been lifted, there still exists a problem over releasing the film.

Wednesday, 24 April 2019

“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன் விளக்கம்..!


“களவாணி-2வை தயாரித்ததாக சற்குணம் பொய் சொல்கிறார்” ;  தயாரிப்பாளர் சிங்காரவேலன் பரபரப்பு..!





'களவாணி-2' உரிமை யாருக்கு..? ;  தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்..!

விமல், ஓவியா நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. இந்த நிலையில் தற்போது அதே கூட்டணியில் 'களவாணி-2' படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் மூலம் ஆறு வார இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இந்த படத்தை தான் தயாரித்துள்ளதாகவும், இயக்குனர் விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே உள்ள பணப்பிரச்சினை தொடர்பாக, 'களவாணி-2' படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சிங்கார வேலன் இடைக்கால தடை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் உண்மை நிலை என்னவென்று மிக விரிவாக தனது பக்க நியாயத்தை வெளிப்படுத்தி உள்ளார் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன்.

விமல் தனது A3V சினிமாஸ் சார்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் சொந்தமாக தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ என்கிற படத்திற்கு என்னிடம் மூன்று கோடி ரூபாய் பைனான்ஸ் பெற்றிருந்தார். ஆனால் அவரது அனுபவமின்மை காரணமாக நான் கொடுத்த 3 கோடியில் அவரால் படத்தை முடிக்க முடியவில்லை.. இன்னும் 2 கோடி ரூபாய் கொடுத்தால் தான் இந்த படத்தை முடித்து வெளியிட முடியும் என்றும் இல்லை என்றால் இந்தப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுவேன் என்கிற ரீதியில் ஒரு மறைமுகமான மிரட்டல் விடுத்தார் நடிகர் விமல்.. ஆனாலும் நான் மேற்கொண்டு பணம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் கடந்த 3௦.8.2௦17 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விமல் எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அந்த விழாவில் இயக்குனர் சற்குணம் உட்பட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த விழாவின்போது அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாகவும் அதில் ஒன்றை வெற்றிவேல் பட இயக்குனர் வசந்தமணி இயக்க உள்ளார் என்றும் இன்னொரு படமான களவாணி-2வை இயக்குனர் சற்குணம் இயக்க உள்ளார் என்றும் அனைவரின் முன்னிலையில் அறிவித்தார் விமல்.

பின்னர் சில நாட்கள் கழித்து என்னை அழைத்து பேசிய விமல், இந்த களவாணி-2 படத்தை தயாரிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை பைனான்ஸ் செய்து உதவுமாறும் அந்த தொகையை வைத்து  ஏற்கனவே நின்று கொண்டிருக்கும் மன்னர் வகையறா படத்தை முடித்து வெளியிட்டு விடுவோம் என்றும் களவாணி-2 படத்தையும் தொடங்கி விடுவோம் என்றும் மன்னர் வகையறா படத்துக்காக நீங்கள் கொடுத்த பணம் உங்களைத் தேடி வந்துவிடும் என்றும் கேட்டுக்கொண்டார். 

மேலும் நீங்கள் தற்போது ஒரு படத்திற்கே தொடர்ந்து பைனான்ஸ் செய்வதாக பணம் கொடுக்க வேண்டாம். 2 படத்திற்கு பைனான்ஸ் செய்கிறீர்கள் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார். 

நானும் அதற்கு ஒப்புக்கொண்டு மேலும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து என்னிடம் வாங்கிய பணத்தின் மதிப்பிற்கு களவாணி 2 படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என விமலிடம் கூறி அதை அக்டோபர்-17ஆம் தேதி ஒப்பந்தமாகவும் பதிவு செய்து கொண்டேன்.

ஆனால் அதன்பின் மன்னர் வகையறா படம் வெளியான பின்பு விமலுக்கு ஏற்கனவே கடன் கொடுத்திருந்தவர்கள் அவர்களுக்குச் சேர வேண்டிய கடன் தொகையை அவருக்கு நெருக்கடி கொடுத்து வாங்கிச் சென்றனர்.. திரையுலகில் மிகப் பெரிய பொறுப்புகளில் இருக்கும் அவர்களுடன் போட்டியிட்டு விமலுக்கு நான் கொடுத்த பணத்தை கைப்பற்ற என்னால் முடியாமல் போனது.

இன்றைய தேதி வரையில் விமல் எனக்கு 4.32 கோடி  ரூபாய் தரவேண்டி இருக்கிறது. ஆறு மாதத்திற்குள் அந்த தொகையை தந்து விடுவதாக விமல் கூறினார். ஆனால் கூறியபடி பணத்தை அவர் தரவில்லை. இந்தநிலையில் தான் களவாணி-2 படம் 'வர்மன்ஸ்  புரொடக்சன்ஸ்' சார்பில் தயாராகி வருவதாக அறிவிப்பு வெளியானது. நான் இயக்குனர் சற்குணத்திடமும் விமலிடமும் ஏற்கனவே காப்பிரைட் அடிப்படையில் இந்த படத்தை எடுத்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள் என்றும் அதை மீறி இவ்வாறு விளம்பரப்படுத்துவது முறை அல்ல என்றும் பல முறை கூறியும் அவர்கள் இருவரும் அதை காதில் போட்டு கொள்ளவே மறுத்துவிட்டார்கள்.

பட வேலைகள் முடிந்து படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன்பு எனக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பி தரும்படியும் அப்படி இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டியிருக்கும் என்றும் கூறி விமலுக்கு மீண்டும் மார்ச்-17ஆம் தேதி கடிதம் அனுப்பினேன். அதை பெற்றுக்கொண்ட அவரிடமிருந்து அப்போதும் எந்த பதிலும் வரவில்லை.

அதனால் அவர்மீது வழக்கு தொடரப் போகிறேன் என கூறி அதை அவருக்கு தெரிவிக்கும் விதமாக ஏப்ரல் 8ஆம் தேதி விமல் மட்டுமல்லாது இயக்குனர் சற்குணம் உள்ளிட்டோருக்கும் ஒரு கடிதம் அனுப்பினேன்.

ஆனால் அதற்கும் அவர்களிடமிருந்து பதில் இல்லாததால் நீதிமன்றத்தை அணுகினேன். அங்கேயும் அவர்கள் ஆஜராகவில்லை.. எங்கள் தரப்பு வாதங்களையும் ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் 'களவாணி-2' படத்திற்கான காப்பிரைட் உரிமை எங்களுக்குத்தான் என்று கூறி தீர்ப்பு வழங்கியதுடன், களவாணி-2 படத்தை வேறு யாரும் வெளியிட கூடாது என 6 வார கால  இடைக்கால தடையும் விதித்துள்ளது.

இந்த படத்தின் உரிமை எங்களிடம் தான் இருக்கிறது.. இயக்குனர் சற்குணம் இந்த படத்தை அவர் தயாரித்ததாக சொல்வது சுத்தமான பொய். என் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குனர் சற்குணமும் நடிகர் விமலும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய நாடகம் என்று தான் நான் இதைக் கருதுகிறேன்.

நீதிமன்றம் நல்ல தீர்ப்பை தரும் என இயக்குனர் சற்குணம் கூறியிருக்கிறார்.. உண்மையிலேயே நீதிமன்றம் எங்களுக்கு நல்ல தீர்ப்பைத்தான் கொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆகவே பத்திரிக்கை, ஊடகங்கள் களவாணி-2 படம் பற்றி வேறு நபர்கள் சொல்லும் உண்மைக்கு மாறான தகவல்களை  வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு கூறியுள்ளார்  தயாரிப்பாளர் சிங்காரவேலன் .

--