Featured post

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!* ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அத...

Monday 21 October 2019

மகத்தான தமிழர்களுக்கு மகுடம் சூட்டிய திருவிழா நியூஸ் 18 தமிழ்நாடு

மகத்தான தமிழர்களுக்கு மகுடம் சூட்டிய திருவிழா
நியூஸ் 18 தமிழ்நாடு - மகுடம் விருதுகள்’ 2019

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த தமிழர்களை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் மகுடம் விருதுகள் விழாவை நடத்தி சாதனைத் தமிழர்களை கொண்டாடி வருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி.

கடந்த இரு ஆண்டுகளாக கலை, இலக்கியம், சினிமா, விளையாட்டு, சமூக சேவை என பல்துறை சாதனையாளர்களை அலசி ஆராய்ந்து அவர்களில் ஒருவரை நடுவர்கள் குழு மூலம் தேர்வு செய்து, சாதனையாளார்களையும், தமிழருக்கு பெருமை சேர்த்தவர்களையும் கெளரவித்து வருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு.

அந்த வகையில், மூன்றாம் ஆண்டாக 2019ம் ஆண்டுக்கான மகுடம் விருதுகள் விழா சென்னை ஐடிசி க்ராண்ட் சோழா ஹோட்டலில் இன்று (அக்டோபர் 18) நடந்தது.

தமிழகத்தில் தனி முத்திரைப்பதித்த திறமையாளர்களை அங்கீகரித்து கொண்டாடிய மகுடம் விருதுகள் விழாவில், சிறந்த அரசுப்பள்ளி, சிறந்த அரசு மருத்துவர், சிறந்த சமூக சேவகர், சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த எழுத்தாளர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த தொழில் முனைவோர், சிறந்த தொழில் ஆளுமை என 10 பிரிவுகளில் 13 பேருக்கும், தமிழருக்கு பெருமை சேர்த்த தமிழர் பெருமிதம் என்ற சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

சிறந்த அரசுப்பள்ளிக்கான விருது திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள கல்லாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும், மடிவாளம் ஊராட்சி ஓன்றிய துவக்கப்பள்ளிக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த அரசு மருத்துவருக்கான விருது கீழ்பாக்கம் அரசு மனநல காப்பக மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாருக்கும், சிறந்த சமூக சேவைக்கான விருது, பழங்குடி கிராமங்களில் தொடர்ந்து  கல்விப் பணியை செய்து வரும் கிராம பார்வை குழுவினருக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தங்க மங்கை அனுராதா பெற்றுக்கொண்டார்.

சிறந்த எழுத்தாளருக்கான விருதுகள், ’வீரயுக நாயகன் வேள்பாரி’ எனும் நாவலுக்காக சு.வெங்கடேசனுக்கும், சுளுந்தீ நாவலுக்காக முத்துநாகுவுக்கும் வழங்கப்பட்டது.


சிறந்த நடிகருக்கான விருதை பேரன்பு படத்துக்காக நடிகர் மம்முட்டியும், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் படங்களுக்காக நடிகர் விஜய் சேதுபதியும் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த நடிகைக்கான விருது கனா படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது, பேரன்பு படத்திற்காக இயக்குநர் ராமுக்கு வழங்கப்பட்டது. சிறந்த தொழில்முனைவோருக்கான விருதை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் கே.ஆர்.நாகராஜ் பெற்றுக்கொண்டார். சிறந்த தொழில் ஆளுமைக்கான விருது பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது.

தமிழருக்கு பெருமை சேர்த்த ’தமிழர் பெருமிதம்’ என்ற சிறப்பு விருது, கீழடி அகழாய்வுக்கு காரணமாக இருந்த கீழடி நாயகர்களுக்கு வழங்கப்பட்டது. கீழடி அகழாய்வுக்கு நிலத்தை இலவசமாக வழங்கிய நில உரிமையாளர்கள் துவங்கி அகழாய்வை அடுத்த கட்டத்து எடுத்துச் சென்ற ஆய்வுக்குழுவினர் வரை அனைவரும் மேடையேற்றி கெளரவிக்கப்பட்டனர்.

தமிழகத்தின் மரியாதைக்குரிய மனிதர்களை கெளரவிக்கும் வகையில் நடந்த இந்த விழாவில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைந்வரும், நடிகருமான கமல்ஹாசன், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கிருபாகரன், மகாதேவன், சுப்பிரமணியம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், கல்வியாளார்கள், தொழிலதிபர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





  

No comments:

Post a Comment