Featured post

Triple M Production Expands in Tamil Cinema*

 Triple M Production Expands in Tamil Cinema* *UAE: Triple M Production LLC is steadily expanding its presence in the Tamil film industry th...

Monday, 21 September 2026

அவள் சொன்னது ’பிரேக்’...அவனுக்கு கேட்டது ’பிரேக் அப்’!*

 *அவள் சொன்னது ’பிரேக்’...அவனுக்கு கேட்டது ’பிரேக் அப்’!*



*’விட்ரா மச்சா...’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!*


தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நிகராக, சுயாதீன பாடல்களையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.  அந்த வகையில் காதல், காதல் தோல்வி, நகைச்சுவை மற்றும் அதிரடியான குத்து இசை ஆகியவற்றை வித்தியாசமான முறையில் இணைக்கும் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது


ஆஷிக் மற்றும் ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு, ரூபேஷ் திவாரி இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். ஆட்டம் போட வைக்கும் துள்ளலான இசையும், நகைச்சுவை கலந்த இசை அணுகுமுறையும் கொண்ட இந்தப் பாடல், வழக்கமான காதல் தோல்விப் பாடல்களில் இருந்து வேறுபட்ட ஒன்றாக உள்ளது. 


ஒரு இளம் காதல் ஜோடிக்கு இடையேயான தொலைபேசி உரையாடலுடன் பாடல் தொடங்குகிறது. அப்போது அந்தப் பெண் ’பிரேக்’ என்ற ஒரு வார்த்தை சொல்கிறார். அவர் தனது வார்த்தையை முழுமையாகச் சொல்லும் முன்பே தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால், கதாநாயகனோ உடனடியாக ஒரு முடிவுக்கு வந்து, அவர் ‘பிரேக் அப்’ என்று கூறியதாக நினைத்துக்கொள்கிறார். இதையடுத்து, தனது காதல் தோல்வியடைந்து விட்டதாக எண்ணி அவர் சோகத்தில் மூழ்க, இதனால் உருவாகும் குழப்பமும் நகைச்சுவையுமே பாடலின் கரு.


இதற்கிடையே, கதாநாயகனின் நண்பர் இந்தப் பிரிவை நல்ல விஷயமாகப் பார்க்கிறார். காதல் உறவிலிருந்து கிடைத்த புதிய சுதந்திரத்தை கொண்டாடும் அவர், கதாநாயகனின் சோகத்துக்கு முற்றிலும் மாறாக உற்சாகமாக இருக்கிறார். அங்கிருந்து பாடல் அதிரடியான குத்து இசைத் தாளங்களுடன் வேகமெடுக்கிறது. சோகத்தை வெளிப்படுத்தும் வரிகளுடன், வித்தியாசமான மற்றும் நகைச்சுவை கலந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் இணைகின்றன. கதாநாயகனின் சோகமான மனநிலைக்கும், பாடலின் உற்சாகமான இசைத் தாளங்களுக்கும் இடையேயான முரண்பாடே இந்தப் பாடலின் தனித்துவம். 


ஆனால், பாடலின் இறுதியில் எதிர்பாராத திருப்பம் காத்திருக்கிறது. கதாநாயகன் உண்மையிலேயே காதல் தோல்வியில் இருக்கிறார் என ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அவர் காதலிக்கும் அந்தப் பெண் நேரில் வந்து அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிறார். தவறான புரிதலே பாடலின் மிகப்பெரிய நகைச்சுவை திருப்பமாக மாறுகிறது. இதன் மூலம் இசை, காதல், வலி, நகைச்சுவை மற்றும் எதிர்பாராத திருப்பம் ஆகிய அனைத்தையும் ஒரே பாடலில் ரசிக்கக்கூடிய வகையில் ’விட்ரா மச்சா’ உருவாகியுள்ளது.


கிக்கர்ஸ் டான்ஸ் க்ரூ ஸ்டுடியோவில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு இசை பிரதீப் நடன அமைப்பு செய்துள்ளார். மஹபூப் தயாரிப்பாளராகவும், முகின் ஜெயராஜ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். கேமரா பிரிவில் பாஸ்கர் யூனிட்ஸ் மற்றும் முவி மீடியா இடம்பெற்றுள்ளன. ஹரிஷ் ராம் மற்றும் அவினாஷ் இயக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆர்.ஜி. கிருஷ்ணா கலை இயக்குநராகவும், உதய் கிருஷ்ணமூர்த்தி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். கிருபாராஜ் டிஐ பணிகளை கவனித்துள்ளார்.


கேட்டவுடன் பிடிக்கும் மியூசிக்கல் எனர்ஜி, வித்தியாசமான கதைக்களம் மற்றும் வழக்கமான காதல் தோல்விப் பாடல் பாணியை நகைச்சுவையுடன் அணுகும் விதம் என, இந்த சுயாதீன பாடல் தமிழின் வேகமாக வளர்ந்து வரும் சுயாதீன இசை கலாச்சாரத்தில் மேலும் ஒரு வண்ணமயமான படைப்பு. ஏற்கனவே தெலுங்கு இசைச் சந்தையில் பிரபலமான கே மியூசிக் தமிழ் இசை லேபிள் சார்பில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment