*சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!*
தரமான கதைகளை தேர்ந்தெடுத்து, திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
படம் குறித்து அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் பகிர்ந்து கொண்டதாவது, "நான் இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். சிவகார்த்திகேயன் சார் இந்தப் படத்தின் கதையை கேட்டுவிட்டு நான் எதிர்பார்த்த நடிகர்கள், எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாகவே கொடுத்து கதையில் எந்தவிதமான காம்ப்ரமைஸூம் செய்யாமல் நினைத்தபடியே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படியே படமும் நன்றாக வந்திருக்கிறது.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை பற்றிய கதையாகவும், அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுநடை, அவர்களின் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள், சடங்குகள் ஆகியவற்றை பேசும் படமாக இது இருக்கும். இந்த விஷயங்களை சீரியஸ் டோனில் இல்லாமல் நகைச்சுவை கலந்து பொழுதுபோக்காக திரையரங்குகளில் மக்கள் ரசிக்கும்படி கமர்ஷியலாக எடுத்திருக்கிறோம்" என்றார்.
படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பற்றி அவர் கூறியதாவது, "இந்தப் படத்தில், 75 வயது மூதாட்டி பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா மேடம் நடித்திருக்கிறார். அவருடைய மூன்று மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். அந்த ஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த் ராமதாஸ் அண்ணனும் நடித்திருக்கிறார். இதுதவிர மற்ற முக்கிய இரண்டு கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும், உசிலம்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள நடிகர்கள் அல்லாத கிராமத்து மக்கள் பலரும் இதில் நடித்திருக்கின்றனர்" என்றார்.
தொழில்நுட்பக்குழு பற்றி கேட்டபோது, "என்னைப் போலவே மணிகண்டன் சாரிடம் பணிபுரிந்த விவேக் விஜயராஜ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சான் லோகேஷ் எடிட்டராகவும், ராமு தங்கராஜ் கலை இயக்குநராகவும், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். கிராமத்தில் உள்ள மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறை மூலமும் பெண்கள் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தின் மதிப்பை கலகலப்பாக பேசியிருக்கிறோம். திரையரங்குகளில் இந்தப் படம் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

No comments:
Post a Comment