Featured post

ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு

 *”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு!!* ES Production & Macha Swag Dance  தயாரிப்பில், தீபன் மற்றும் வைபவ்  இசையில...

Monday 25 March 2019

நயன்தாரா வெளியிட்ட பகிரங்கமான கடிதம்


நான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நான் பேச வேண்டிய கட்டாயம் அமைந்து விடுகிறது. இன்று, என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலியல் தொல்லைகளை தாங்கிக் கொள்ளும் பெண்களின் போராட்டத்திற்காகவும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.

முதலில், திரு.ராதாரவியின் தவறான பேச்சை கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனப்பூர்வமான நன்றிகள் சார்.

திரு.ராதாரவி மற்றும் அவரைப் போன்று பெண்களை இழிவாக பேசும் சிலருக்கும், உங்களையும் ஒரு பெண்மணி தான் பெற்றெடுத்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். பெண்களை தரக்குறைவாக பேசுவதன் மூலமும், அவர்கள் மீது எளிதாக பாலியல் கருத்துகளை சொல்வதன் மூலமும், இந்த மாதிரியான ஆண்கள் தங்களின் ஆண்மையை காட்டிக் கொள்கிறார்கள். பெண்களை இப்படி நடத்தும் இந்த மாதிரியான ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் வாழும் அனைத்து பெண்களை நினைத்தும் நான் மிகவும் வருந்துகிறேன். ஒரு மூத்த நடிகர் என்ற முறையிலும், கணிசமான அனுபவம் உடைய நடிகர் என்ற வகையிலும் திரு. ராதாரவி, இளைய தலைமுறைக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவர் ஒரு தவறான வழிகாட்டியாக நடந்து கொள்கிறார். பெண்களுக்கு இது மிகவும் கஷ்டமான காலம், பெண்கள் பொது வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் தங்களை தாங்களே நிலைநிறுத்தி கொண்டு, தகுதியின் அடிப்படையில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தி கொள்கின்றனர். திரு. ராதாரவி போன்ற நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இல்லாத காரணத்தால், மலிவாக பேசி விளம்பரம் தேடிக் கொள்ளும் தந்திரங்களை நம்பியிருக்கிறார்கள்.

இந்த ஆணாதிக்க பேச்சுக்களில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் அவரது இந்த மாதிரியான மலிவான பேச்சுக்களை மேடையின் கீழ் இருக்கும் பார்வையாளர்கள் சிலர் கைதட்டி, சிரித்து ரசிப்பது தான். இந்த மாதிரியான ஆபாசமான கருத்துக்களை பார்வையாளர்கள் ஊக்குவிப்பது தான் திரு. ராதாரவி போன்ற பேச்சாளர்கள் பெண்களுக்கு எதிரான நகைச்சுவையை தொடர்ந்து பேச தூண்டுகிறது. திரு. ராதாரவி போன்றோரின் நடத்தையை தயவு செய்து ஊக்கப்படுத்த வேண்டாம் என நல்ல நோக்கம் உடைய குடிமக்கள் மற்றும் என் அன்பான ரசிகர்களை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். என்றாலும் இந்த அறிவுறையோடு நிற்காமல், திரு. ராதாரவி பெண்கள், குழந்தைகள் மற்றும் குறிப்பாக என்னை பற்றி பேசிய தவறான பேச்சுகளுக்கு எதிரான எனது கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை நான் கடுமையாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடவுள் மிகவும் கருணையோடு எனக்கு அருமையான தொழில் வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் என்னை மற்றும் என் நடிப்பை விரும்பும் ரசிகர்களை எனக்கு கொடுத்திருக்கிறார். எல்லா எதிர்மறையான கருத்துகளையும், அவதூறுகளையும் தாண்டி, சீதா, பேய், கடவுள், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன். அதன் மூலம் என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கை வழங்குவதே என் தலையாய நோக்கம்.

இறுதியாக, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு என் தாழ்மையான ஒரு கேள்வி: - சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி உள் புகார் குழுவை நீங்கள் நிறுவுவீர்களா? விஷாகா வழிகாட்டுதலின் படி உள் விசாரணையை ஆரம்பிப்பீர்களா??

மீண்டும் ஒருமுறை, இந்த எதிர்மறையான கட்டத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும், எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி.

இப்போது, வேலைக்கு திரும்புகிறேன்!
எப்போதும் கடவுளின் கருணை மற்றும் உங்கள் நிபந்தனையற்ற அன்புடன்!

1 comment:

  1. What Mr.Radha told it is absolutely wrong and condemnable.I have a strong feeling that he will apologize. My and all women respecting &responsible society citizens are with you Mam

    ReplyDelete