*பூவை செங்குட்டுவன்: பெருங்கவிஞர், பேராசான், என் பெரியப்பா - நடிகர் உதயா நினைவஞ்சலி*
கடந்த சில தினங்களுக்கு முன் காலமான புலவர் பூவை செங்குட்டுவனை ஒரு கவிஞராக, எழுத்தாளராக தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அவரது மறைவு கலை உலகத்திற்கு ஒரு பேரிழப்பு என்றால் எங்கள் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு.
எனக்கு அவர் பெரியப்பா, எனக்கு பெரிய தந்தையாக மட்டுமில்லாமல் ஒரு தோழனாகவும், வழிகாட்டியாகவும் ஆசானாகவும் திகழ்ந்தவர். 90 வயது வரை பெரும் புகழோடும், பேரன் பேத்திகளோடும் பெருவாழ்வு வாழ்ந்து அவர், அவரது மறைவிலும் பல செய்திகளை நமக்கு விட்டு சென்றுள்ளார்.
சிறு வயதில் பெரியப்பாவின் வீட்டில் பல நாட்கள் வளர்ந்தவன் என்ற முறையில் பெரியப்பாவை நான் நன்கு அறிவேன். அவரது வயது, அனுபவம், அறிவு என அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு எங்களுடன் ஒரு குழந்தையாகவும் நண்பனாகவும் பழகுவார். அவரது நகைச்சுவை உணர்வுக்கு நாங்கள் மிகப் பெரிய ரசிகர்கள். அவர் வீட்டில் இருக்கிறார் என்றால் அந்த இடமே கலகலவென்று இருக்கும்.
ஒரு நடிகனாக நான் வெற்றி பெற வேண்டும் என்று மிகவும் விரும்பியவர் அவர். என் நடிப்பு பயணத்தின் தொடக்கமாக அவரது மகனும் எனது அண்ணனுமான பூவை தயாநிதியின் நாடகம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனது சமீபத்திய படமான அக்யூஸ்ட் வெற்றி பெற்றதற்கு மிகவும் மகிழ்ந்த என் பெரியப்பா, இன்னும் பல சிகரங்களை நீ எட்ட வேண்டும் வேண்டும் என்று வாழ்த்தினார். எனது தந்தை ஏ. எல். அழகப்பன் அவர்கள் மீது மிகுந்த பாசத்தையும் மரியாதையையும் அவர் வைத்திருந்தார். எனது சகோதரர் இயக்குநர் ஏ.எல். விஜய்யின் வெற்றியிலும், அவரது பேரன்கள் அனைவரும் கலைத்துறையில் இருப்பதிலும் அவருக்கு அவ்வளவு பெருமிதம்.
காலத்தால் அழியாத திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்; நான் உங்கள் வீட்டுப் பிள்ளை; தாயிற் சிறந்த கோயிலுமில்லை உள்ளிட்ட பாடல்களும் இன்றைக்கும் திமுக மேடைகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதி உள்ளிட்ட பாடல்களையும் எழுதிய அவர் அவரது வாழ்நாளில் புகழ் சேர்த்த அளவுக்கு பொருள் சேர்க்கவில்லை. இருந்தாலும் அது குறித்து அவர் என்றைக்கும் கவலைப்பட்டதில்லை. இறுதிவரை மகிழ்ச்சியுடன் வாழ்ந்தவர் அவர்.
படப்பிடிப்புகளுக்கு நாங்கள் வெளியூர் செல்லும் போது பூவை செங்குட்டுவன் எனது பெரியப்பா என்று சொன்னாலே அங்குள்ளவர்கள் அத்தனை அன்பையும் மரியாதையும் எங்களுக்கு வழங்குவார்கள். அதுதான் பெரியப்பாவின் வெற்றி. அவரது முகம் பலருக்கு பரிச்சயம் இல்லை என்றாலும் அவரது பெயரும் அவரது எழுத்துகளும் அத்தனை பேருக்கும் அவ்வளவு நெருக்கம்.
அவரது மறைவின்போது செலுத்தப்பட்ட அஞ்சலிகளும் இரங்கல்களுமே அதற்கு சாட்சி. இந்த துக்கத்தில் பங்கு கொண்டு எங்களுக்கு ஆறுதல் அளித்த அத்தனை பேருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி.
இந்த தருணத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எனக்காக ஒரு கதையை அவர் வைத்திருந்தார், அதை கண்டிப்பாக செய்வோம் என்று சொல்லி இருந்தேன். அதேபோன்று எனக்காக ஒரு ஊக்கம் அளிக்கும் பாடலையும் என் பெரியப்பா பூவை செங்குட்டுவன் எழுதியுள்ளார். அதுவே அவரது இறுதி திரைப்பாடல் ஆகும். *என்னடா மனிதா இன்னுமா தயக்கம் உன்னையே நீ உணர்ந்து முன்னேறத் தொடங்கு* எனக்கு துவங்கும் அந்தப் பாடலை இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் இசையமைக்க என்னுடைய அடுத்த படத்தில் இடம்பெறும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சமயத்தில் இன்னொரு கோரிக்கையை எனது சக கலையுலகினருக்கு வைக்கிறேன். சிறந்த பங்களிப்பை வழங்கிய மூத்த கலைஞர்களை அவர்கள் உயிருடன் இருக்கும் போதே கொண்டாடி உரிய அங்கீகாரத்தை அளிப்போம். எண்ணற்ற கலைஞர்கள் இன்னும் தங்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளனர். அவர்களை வாழ்த்துவோம், வணங்குவோம். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை. இந்த கோரிக்கையை எனது பெரியப்பா பூவை செங்குட்டுவன் நினைவாக தாழ்மையுடன் வைத்து அவரது புகழையும் நற்பண்புகளையும் போற்றி வணங்குகிறேன்.
அன்புடன்,
நடிகர் உதயா
No comments:
Post a Comment