தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா
6 மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் - நடிகர் சௌந்தரராஜா சொன்ன அசத்தல் திட்டம்
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜா, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார்.
சமூகம் சார்ந்து செயல்பட ஏதுவாக மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற சமூகநல அறக்கட்டளையை தொடங்கி, நடத்தி வருகிறார். அதன்படி நடிகர் சௌந்தரராஜா தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளை மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க திட்டமிட்டுள்ளார்.
சென்னை ஆவடியில் உள்ள காவல் துறை கன்வென்ஷன் சென்டரில் நடந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளையின் ஒன்பதாவது ஆண்டு விழாவில் இதற்கான அறிவிப்பை நடிகர் சௌந்தரராஜா வெளியிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் 45,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.
நேற்று நடந்த விழாவில் அடுத்த ஆறு மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க திட்டமிட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ம் தேதி தொடங்கி ஆறு மாதங்களுக்கு மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்த உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நட்டு, பாதுகாத்து வளர்த்தும் வருகின்றனர்.
தமிழ்நாடு முழுக்க கண்மாய்கள், நீர்நிலைகளை சுற்றி பனை மரங்களை நடுவது, நாட்டு மரங்களை நடுவதும் அதை பாதுகாத்து வளர்த்தும் வருகின்றனர். மேலும், இயற்கை மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிக முக்கிய சேவைகளை செய்து வரும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இயற்கை விவசாயத்தை போற்றும் வகையிலும், ஒவ்வொரு வருடமும் இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், ரூ. 5000 ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறது.
இதுபோக தனி நபர்களுக்கு மரக்கன்று நடவும், விசேஷ நாட்களில் மரக்கன்று நட விரும்புபவர்கள் மரக்கன்றுகளை வாங்கிக் கொடுக்கும் பட்சத்தில் அவற்றை சரியான இடத்தில் நட்டு, அதனை பராமரிக்கும் பணிகளை மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை செய்து வருகிறார்கள். இதற்கான பணிகளில் 250 தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் தொடக்கமாக சென்னை ஆவடியில் உள்ள போலீஸ் கன்வெஷன் சென்டரில் நடிகர் சௌந்தரராஜா தலைமையில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் நட்டு முடித்த ஒரு மணி நேரத்தில் அங்கு திடீரென கனமழை பெய்தது. 100 மரக்கன்றுகள் நட்டதும் மழை பெய்தது அங்கு இருப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது நல்ல தொடக்கத்தின் முன்னெடுப்பு என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment