’ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ திரைப்பட விமர்சனம்
கிராமத்தில் சலவை தொழில் செய்யும் ஆட்டுக்குட்டி புரூஸ்லியின் மகளான நாயகி பிரின்ஸி ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நன்றாக படிக்கும் பிரின்ஸிக்கு ஊர் பெரிய மனிதரான தா.ராஜசோழன் பல்வேறு உதவிகள் செய்வதன் மூலம், பிரின்ஸி பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு என்று அடுத்தடுத்த கட்டத்திற்கு பயணிக்கிறார். இருப்பினும், அவரது ஏழ்மையின் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த சிக்கல்களில் இருந்து மீண்டு அவர் நினைத்தது போல் ஐ.ஏ.எஸ் ஆனாரா ? இல்லையா ? என்பதை, ஊக்கமளிக்கும் வகையில் சொல்வதே ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’.
கதையின் நாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரின்ஸி, கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற சரியான தேர்வு. தனது ஏழ்மை நிலையிலும் நன்றாக படிக்கும் அவர், ஒவ்வொரு தடையையும் தாண்டி முன்னேறும் போது, உணர்வுப்பூர்வமான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தி கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், தங்களது அடையாளத்தை மாற்றிக் கொள்வதற்கும் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தா.ராஜசோழன், ஒருவருக்கு திறமை இருந்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிட ஒருவர் நிச்சயம் தேவை, என்ற உண்மையை தனது வசனங்கள் மற்றும் நடிப்பு மூலம் மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார். நல்லபடி அறிவுரை சொல்லி திருத்துவதோடு மட்டும் அல்லாமல் அதிரடியாகவும் சிலரை திருத்தும் அவரது ஆக்ஷன் அவதாரமும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ஆட்டுக்குட்டி புரூஸ்லி, அழுத்தமான கதாபாத்திரத்தில் அசால்டாக நடித்து பாராட்டு பெறுகிறார். காவல்துறை அதிகாரி, நாயகியின் பள்ளி தோழி, நாயகியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த சிறுமி, கல்லூரி மாணவர்களாக நடித்திருப்பவர்கள், ஊர் மக்கள் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதியவர்கள் என்றாலும், மண்ணின் மைந்தர்களாக கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அரவிந்த் பாபு இசையில், தா.ராஜசோழன் வரிகளில் பாடல்கள் அனைத்தும் வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு நம்பிக்கையும், ஊக்கமும் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை அளவாக பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கேசவன், எளிமையான லொக்கேஷன்களை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தில் நடித்தவர்கள் அனைவரும் புதியவர்கள் என்றாலும், அந்த அடையாளமே தெரியாத வகையில் அவர்களை காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு.
படத்தொகுப்பாளர் ராம்நாத், கலை இயக்குநர் பழனிவேல், சண்டைப்பயிற்சி இயக்குநர் கபிலன், நடன இயக்குநர் நிரோஷான் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
துரை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தா.ராஜசேழன், எழுதி இயக்கியிருப்பதோடு படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். முதல் படத்திலேயே மக்களுக்கு நல்ல விசயத்தை சொல்லியிருக்கும் அவரது முயற்சியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
கண்ணம்மாவின் முன்னேற்றத்திற்கு உதவி செய்த துரை கதாபாத்திரத்தை நிகழ்கால காமராஜராக வடிவமைத்து அவர் மூலம் பெண்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மட்டும் இன்றி, தங்களின் அடையாளத்தை மாற்றி சமூகத்தில் முன்னேற துடிக்கும் எளிய மக்கள் எதிர்கொள்ளும் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான ஒரே ஆயுதம் படிப்பு மட்டுமே, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் தா.ராஜசோழன், ஒரு படைப்பாளியாக வெற்றி பெற்றிருக்கிறார்.
பட்ஜெட் காரணமாக படத்தின் மேக்கிங்கில் சில குறைகள் இருந்தாலும், மக்களுக்கு கருத்து சொல்லும் படமாக இருந்தாலும், கதை சொல்லல், திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் ஆகியவற்றை கமர்ஷியலாக கையாண்டு, அனைத்து தரப்பு மக்களுக்கான படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் தா.ராஜசோழனின் இந்த ‘கண்ணம்மா’ மூலம் சொல்லியிருக்கும் விசயம் மிகப்பெரியது.
ஒரு திரைப்படமாக மட்டுமே ’கண்ணம்மா’-வை கடந்து செல்லாமல், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்கமளிக்கும் ஒரு புத்தமாக நினைத்து, இப்படத்தை பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசு திரையிட்டால் நிச்சயம் இந்த கண்ணம்மாவை போல் பலர் உருவாகலாம்.

No comments:
Post a Comment