Featured post

Biker Movie Review

Biker Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம biker padathoda review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது abhilash redd...

Wednesday, 11 February 2026

தாய்நிலம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயம் மேலே’ பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த

 *‘தாய்நிலம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயம் மேலே’ பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர்  விருதுபெற்ற கவிஞர் தாமரை* 






*‘தாய்நிலம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயம் மேலே’ பாடலுக்கு தமிழக அரசின் 2 விருதுகள்” ; உற்சாகத்தில் படக்குழுவினர்*


*தமிழக அரசின் 2 விருதுகளைப் பெற்ற ‘தாய்நிலம்’ படம் கோடை வெளியீட்டிற்குத்  தயாராகிறது* 


நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய்நிலம்’. இப்படத்தை அபிலாஷ் ஜி.தேவன் இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இசையமைப்பாளர் திரு அவுசப்பச்சன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் இவர் இசையமைக்கும் முதல் படம் இது.


அப்பா, மகள் பாசப் பின்னணியில் இலங்கைப் போரின் கோர தாண்டவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் கவிஞர் தாமரை எழுதி, வர்ஷா ரஞ்சித் பாடியுள்ள ‘ஆகாயம் மேலே’ என்கிற பாடல் ஈழத் தமிழ் மக்களின் இழப்புகளையும் வலியையும் அனாதையாகத் தவிக்கும் மக்களின் வாழ்க்கையையும் பற்றி கூறும் விதத்தில் அமைந்திருக்கிறது.


‘தாய்நிலம் திரைப்படம்’ மாஸ்கோ, டோராண்டோ, ஸ்வீடன், பெங்களூரு இன்டர்நேஷனல், உட்பட 12 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டது. அதில் சிறந்த திரைப்படம், சிறந்த புதுமுக இயக்குநர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு உட்பட ஒன்பது விருதுகளை பெற்றது. 

 

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திரைப்பட விருதுகளில் 2020 ஆம் ஆண்டிற்கான விருதுகள் பட்டியலில் இந்த ‘ஆகாயம் மேலே’ என்கிற பாடலை எழுதியதற்காக கவிஞர் தாமரைக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும், இந்தப் பாடலை பாடிய வர்ஷா ரஞ்சித்துக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது ‘தாய்நிலம்’ படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


இந்தப் பாடலுக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது குறித்து 'தாய் நிலம்' படத்தின் இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் கூறும்போது, 


“அகதிகளாகப் புலம்பெயரும் ஈழத் தமிழர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த ‘தாய்நிலம்’ படம் உருவாகியுள்ளது. அப்பாவுக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், கிளைமாக்ஸுக்கு முன்னதாக ஒரு அழுத்தமான பாடல் மூலம் காட்சிகளை நகர்த்த வேண்டிய தேவை இருந்தது.


இதற்காக கவிஞர் தாமரை அவர்களிடம் பாடல் எழுதித்தருமாறு கேட்டுக் கொண்டபோது முதலில் சிறிய படம் என்று அவர் தயங்கினார். பின்னர் கதையை கேட்டதுமே ‘ஆகாயம் மேலே’ என்கிற இந்த அருமையான பாடலை எழுதிக் கொடுத்தார். இந்தப் பாடலை பாடியதன் மூலம் தான் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் மலையாள திரை உலகத்தைச் சேர்ந்த வர்ஷா ரஞ்சித். அவர் அறிமுகமான இந்த முதல் படத்திலேயே அவருக்கும் சிறந்த பாடகிக்கான விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


‘தாய்நிலம்’ படத்தின் பாடல்களை சரிகம நிறுவனம் வெளியிட்டிருந்தது. தற்போது இந்த பாடலுக்கு விருதுகள் கிடைத்துள்ளதைத்  தொடர்ந்து யூட்யூப் தளத்தில் பாடலைப் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


அது மட்டுமல்ல, இந்த விருதுகள் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து சில விநியோகஸ்தர்கள் ‘தாய்நிலம்’ படத்தை வெளியிடும் எண்ணத்துடன் எங்களை அணுகி பேசி வருகிறார்கள். கோடை விடுமுறையில் வெளியிடும் விதமாக விரைவில் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று கூறினார்.


திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்.13-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கவுரவிக்கிறார்.

No comments:

Post a Comment