Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Wednesday, 24 March 2021

இதுதான் மக்களாட்சியா தங்கர் பச்சான்

 *இதுதான் மக்களாட்சியா*


*தங்கர் பச்சான்* 


ஏற்கெனவே தேர்தல் முறைகளில் செய்ய வேண்டிய சீர் திருத்தங்களைச்  செய்யாமல் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடித்துக்கொண்டேருக்கின்றது. கல்வி அறிவு இல்லாதவர்களுக்காகத்தான் சின்னங்களைப் பார்த்து வாக்களிக்கும் முறையைக்கொண்டு வந்தார்கள். இந்திய நாட்டில் 740 பல்கலைகழகங்கள் உருவானபின்னும் இன்னும் அதேமுறை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும்கூட படிக்கத்தெரியாமல் வாழும் மக்கள் சின்னங்களைப் பார்த்து வாக்களிக்கும் முறை வேண்டும் என்பதால் தான் இம்முறை தொடர்கின்றது.


ஆனால் ஒவ்வொருக் கட்சிக்கும் நிரந்தரச் சின்னங்கள் ஒதுக்கப்படுவதும் அதனால் உண்மையான மக்களாட்சி உருவாக ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் தேர்தல் ஆணையம்  சிந்திக்க வேண்டும். இனியாவது நிரந்தரச்சின்னங்களை ஒதுக்காமல் ஒவ்வொரு தேர்தலுக்கும் வேறு வேறு சின்னங்களை ஒதுக்க வேண்டும். இவ்வாறு செய்தாலே ஒவ்வொரு கட்சிகளின் நிரந்தரச்  சின்னங்களுக்குப் பின்னாலும் ஒளிந்துகொண்டு மக்களை ஏமாற்றி சட்டமன்றத்திற்குள்ளும் ,நாடாளுமன்றதிற்குள்ளும் புகுந்துவிட்ட கொள்ளைக்காரர்களையும்,திருடர்களையும்,குற்றவாளிகளையும் அரசியலில் நுழையாமல் தடுத்து விடலாம்.


அதன் பின் மக்கள் நலனை சேவையாகக்கொண்டு அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலை கையிலெடுப்பார்கள். இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் தேர்தல்கள் போல் மக்களிடமிருந்து கொள்ளையடித்தப் பணத்தையே மீண்டும் முதலீடு செய்து குற்றவாளிகளையும்,கொள்ளைக்காரர்களையும்,மக்கள் நலனுக்கு எதிரானவர்களையும், பணக்காரகளையும் மட்டுமே தேடிப்பிடித்து வேட்பாளர்களை நிறுத்தும் அரசியலைத் தொழிலாக நடத்தும் கட்சிகளிடமிருந்து மக்கள் தப்பிக்க முடியும். 


யார் யார் தேர்தல் முறைகளில் மாற்றத்தை விரும்பாதவர்களோ அவர்களிடம்தான் மக்களாட்சியின் திறவுகோல் தரப்படுகின்றது. அவர்கள் எப்படி எந்தக்கட்சிக்கும் நிரந்தரச் சின்னம் வேண்டாம் எனக்கூறி வாக்கெடுப்பு நடத்தி புதிய சட்டத்தை உருவாக்குவார்கள்? ஏறக்குறைய பாதி எண்ணிக்கைக்கும் கூடுதலான அளவில் குற்றவியல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்களைக் கொண்டுள்ள நாடாளுமன்றம்  இவ்வாறான மாற்றங்களை எக்காலத்திலும் செய்யப்போவதில்லை! மிகக்கவனமாக அரசியல்வாதிகள் தொடர்ந்து  மக்களை தங்களின் பிடிக்குள்  வைத்துகொள்ளும் அரசியலை கையாண்டு வருகின்றனர்.


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் தகுதி என்ன? அவர் எப்படிபட்டவர்? அவர் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து தேர்தலில் போட்டியிடுகின்றார்? அவரிடத்தில் குவிந்துள்ளப் பணம் எங்கிருந்து வந்தது? என்பனக் குறித்தெல்லாம் சிந்திக்காமல் காலங்காலமாக இந்த சின்னத்திற்குத்தான் வாக்களிப்போம், அதேபோல் இந்த முறையும் அப்படியேதான் செய்வோம், அவர் எவ்வளவு கேடுகேட்டவராகவும் இருந்தாலும் அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை என நினைப்பர்களாகவே பெரும்பாலான வாக்காளர்கள் இருக்கின்றார்கள். தங்களின் வாக்குரிமையை வீணாக்குவதன் மூலம் மக்களுக்கு எதிரான தகுதியற்ற ஒருவரை தேர்ந்தேடுக்கின்றோமே எனும் புரிதல் கூட இல்லாததுதான் இம்மக்களாட்சியின் பெரும் சோகம்!


எந்தக்கட்சிக்கும் நிரந்தரச்சின்னம் ஒதுக்கக்கூடாது. ஒவ்வொரு தேர்தலுக்கும் குலுக்கல் முறையிலேயே சின்னங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பன போன்ற இன்னும் சில சீர் திருத்தங்களைச் செய்யாமல் எத்தனைத் தேர்தல் நடத்தினாலும் உருவாக்கப்படும் ஆட்சி என்பது உண்மையான மக்களாட்சியாகாது! பயந்து பயந்து திருடும் திருடர்களிடமே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திறவுகோலைக்  [சாவியை] கொடுத்து விடும் செயலைப்போன்றதுதான் என்பதை எண்ணி ஒரு இந்தியக் குடிமகனாகக் குமைகின்றேன்!!

No comments:

Post a Comment