Featured post

Vikkals Vikram and Arathy Krishna's Lightweight, Baby! unveils a fun and quirky first look

 *Vikkals Vikram and Arathy Krishna's Lightweight, Baby! unveils a fun and quirky first look*   *Hitha Studios, the production house beh...

Thursday, 6 August 2026

மிஷன்: பாசிபிள்' மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் 'மூடர் கூடம் 2'!

 *'மிஷன்: பாசிபிள்' மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் 'மூடர் கூடம் 2'!*




*டார்க் ஹியூமர், அதிரடி, கற்பனை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் சர்வதேச அளவிலான கதைக்களத்தில் விரியும் 'மூடர் கூடம் 2'*


கல்ட் கிளாசிக் அந்தஸ்து கிடைக்கும் சில திரைப்படங்கள் ஒரே இரவில் உருவாகிவிடுவதில்லை. காலப்போக்கில், புதிய ரசிகர்களை ஈர்த்து, வெளியான பல ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் 'மூடர் கூடம்'. 13 ஆண்டுகளுக்கு முன்பு, வித்தியாசமான நகைச்சுவை, வினோதமான கதாபாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த 'மூடர் கூடம்', தற்போது புதிய பரிமாணத்துடன் மீண்டும் திரும்பி வருகிறது. படத்தின் தலைப்பும், முதல் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.


முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத் இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இது வெறுமனே சீக்வல் படமாக இல்லாமல், முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் தனித்துவமான டார்க் காமெடி மற்றும் கதை சொல்லலை தக்கவைத்துக்கொண்டு, அதிரடி, கற்பனை மற்றும் உலகளாவிய பின்னணியுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.


படத்தின் முதல் லுக் போஸ்டரில், பனியால் மூடப்பட்டுள்ள ஒரு பகுதியில் நான்கு ஆயுதம் ஏந்திய கதாபாத்திரங்கள், சாத்தியமற்ற ஒரு பணிக்குத் தயாராக நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் விரிவான களத்தையும், அதிக சவால்களையும் போஸ்டர் காட்டுகிறது. அதே நேரத்தில், கையில் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு, ’ஹேப்பி லைஃப்’ என்ற வாசகத்துடன் காட்சியளிக்கும் டெடி பேர், படத்தின் தனித்துவமான நகைச்சுவை உணர்வை காட்டுகிறது. அதோடு, 'மிஷன்: பாஸிபிள்’ என்ற சப்டைட்டில், படத்தின் நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இந்தப் படம், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, குரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் காட்சியமைப்பு மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளை ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அமெரிக்கக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம், படத்தின் கற்பனை உலகமும், அதிரடி காட்சிகளும் சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ளன. இதன் மூலம் பார்வையாளர்களுக்கும் சிறந்த திரையங்க அனுபவம் கிடைக்கும். 


இதுகுறித்து இயக்குநர் நவீன் ஹிதயத் பகிர்ந்து கொண்டதாவது, "’மூடர் கூடம்’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். பல ஆண்டுகளாக, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து என்னிடம் கேட்டு வந்தனர். வெறுமனே சீக்வலுக்காக நான் இந்தப் படத்தை உருவாக்க விரும்பவில்லை. ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தும் ஒரு கதையைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். 'மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்' அந்தக் கதையாக அமைந்தது. ரசிகர்கள் விரும்பிய நகைச்சுவையைத் தக்கவைத்துக்கொண்டு, கதாபாத்திரங்களையும், கதை சொல்லலையும் இன்னும் பெரிய அளவுக்குக் கொண்டு சென்றுள்ளோம். இந்தக் கதையை நம்பி, முழு சுதந்திரத்துடன் இப்படத்தை உருவாக்க உதவிய தயாரிப்பாளர்களான கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ராவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.


தயாரிப்பாளர்களான கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா பகிர்ந்து கொண்டதாவது, "ஒரு கல்ட் கிளாசிக் படத்தின் தொடர்ச்சியை உருவாக்குவது என்பது மிகப் பெரிய பொறுப்பு. நவீன் இந்தக் கதையை எங்களிடம் கூறியபோது, இது வெறும் இரண்டாம் பாகம் மட்டுமல்ல, ரசிகர்கள் விரும்பிய ஒரு திரைப்படத்தை இன்னும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு என்பதை நாங்கள் உணர்ந்தோம். இந்தக் கனவை நனவாக்குவதற்காக அனைத்துத் துறையினரும் கடுமையாக உழைத்துள்ளனர். இன்று முதல் தோற்றத்தை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். 'மூடர் கூடம் 2: மிஷன்: பாசிபிள்' திரைப்படம், பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பான, பொழுதுபோக்கு நிறைந்த மற்றும் முற்றிலும் புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றனர்.


இந்தப் படத்தில் நவீன் ஹிதயத், ஓவியா, சென்றாயன், ராஜாஜி, குபேரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி மேற்கொண்டுள்ளார். அம்ரீஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, நடராஜன் சங்கரன் பின்னணி இசையமைத்துள்ளார். அதியப்பன் சிவா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், விஜய் ரத்தினம் MPSE ஒலியமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கே.ஏ. பாட்சா தலைமையிலான சர்வதேசக் குழு, விஎஃப்எக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது. 


கிராண்டல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா தயாரித்துள்ள 'மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்', தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல உள்ளது. ஏற்கனவே முதல் தோற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் மேலும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment