Featured post

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!* ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அத...

Saturday 19 September 2020

இனி 'தக்கென பிழைக்கும்'

இனி 'தக்கென பிழைக்கும்'

அன்பார்ந்த திரைப்பட பத்திரிகை தோழர்களுக்கு வணக்கம். இது நான் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எழுதும் கடிதம்.

கொரோனா தொற்று பரவல் தொடங்கிய காலகட்டத்தில் அதாவது ஏப்ரல் மாதம் நான் ஒரு கடிதம் எழுதினேன். அதன் முக்கிய சாராம்சம் "சினிமா பல மாற்றங்களை சந்திக்க இருக்கிறது, அதன் எதிரொலியாக சினிமா பத்திரிகையாளர்களின் தொழில்முறை, வருமானம் இவற்றில் ஒரு பெரிய மாறுதல் வரப்போகிறது. அதனால் குடும்பத்தை நடத்த ஒரு மாற்று வழியை தேடிக் கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்த கடிதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சிலர்தான். விமர்சித்தவர்கள் அதிகம். "அப்படியெல்லாம் நடக்காது", "இது அதீத கற்பனை" என்றே விமர்சித்தார்கள். இப்போதுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அந்த கடிதத்தை படித்துப் பார்த்தால் நான் அன்று சொன்னது சரியென்று நியாவான்களுக்குப் புரியும். அதே கருத்தைத்தான் இந்த கடிதத்திலும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

திரையரங்குகள் திறக்கப்பட்டால் மட்டுமே சினிமா மீண்டு விட்டதாக கருத முடியும். ஓடிடி தளங்கள் ஒரு தற்காலிக மாற்று வழிதானே தவிர, நிரந்தரம் அல்ல. தியேட்டர்கள் திறக்காத வரை உற்சாகமான சினிமாவையும், சினிமா கலைஞர்களையும் பார்க்க முடியாது. தியேட்டர் திறப்பதற்கான அறிகுறிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. அப்படியே ஒரு சில மாதங்களில் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டருக்கு வருவார்களா என்பது சந்தேகமே? ஊரடங்கு தளர்வுக்குப்-பிறகு விடப்பட்ட பஸ்களில் கூட்டம் இல்லை என்பதை கவனித்திருக்கலாம். இதே நிலைதான் தியேட்டர்களுக்கு உருவாகும்.

தியேட்டர்களுக்கு வருகிறவர்கள் இளைஞர்கள்தான். மக்கள் குடும்பம் குடும்பமாக படம் பார்க்க செல்வது முன்னணியில் உள்ள நான்கைந்து நடிகர்களின் படங்களுக்குத்தான். இனி குடும்பங்கள் தியேட்டருக்கு வரவேண்டுமானால் 'கொரோனா முற்றாக ஒழிந்தது' என்ற நிலைக்கு பிறகு மட்டுமே சாத்தியம்.

அதுவரை இளைஞர்கள் ஓடிடி தளங்களுக்கு எளிதாக மாறிவிடுவார்கள். செல்போனில் படம் பார்க்க பழகிக் கொள்வார்கள். குடும்பங்கள் சின்னத்திரையில் திருப்திபட்டுக் கொள்ளும். இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்த மாதிரி சினிமா திரும்ப அடுத்த ஆண்டு இறுதி வரை ஆகலாம். அதற்கு கூடுதலாகவும் ஆகலாம்.

சினிமா முடங்கிக் கிடந்தாலும் சினிமா செய்திகள் மக்கள் தொடர்பாளர்களால் தொடர்ந்து தரப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சிலர் இந்தி, தெலுங்கு, மலையாள சினிமாக்கள் என்று தங்களின் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் தனிப்பட்ட கலைஞர்களை புரமோட் செய்யும் பணிகளில் கவனம் செலுத்துகிறார்கள். இன்னும் சிலர் வணிக நிறுவனங்கள், விளையாட்டு போட்டிகள் பக்கம் கவனம் செலுத்துகிறார்கள். எப்போதும் பிசியாக இருக்கும் பி.ஆர்.ஓக்கள் இப்போதும் பிசியாகத்தான் இருக்கிறார்கள்.

இனி மீடியாக்களில் பிரஸ் ஷோ இல்லாமல் விமர்சனம் வரும், பிரஸ்மீட் இல்லாமல் செய்திகள் வரும், விழா நடத்தாமல் பாடல்கள் வெளியாகும். கலைஞர்களை நேரில் சந்திக்காமல் (ஜூம் மூலம்) நேர்காணல் நடக்கும். இதனை தயாரிப்பாளர்கள், மக்கள் தொடர்பாளர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையையே தொடரவும் விரும்புவார்கள். ஒருவேளை சினிமா பழைய நிலைக்கு திரும்பினாலும், 'கலைஞர்கள்-பி.ஆர்.ஓக்கள்-செய்தியாளர்களுக்கு' இடையிலான சங்கிலி பிணைப்பு முன்புபோல இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

யு டியூப் சேனல்கள், தனி வெப்சைட்டுகள் நடத்தி செய்திகளை வெளியிட்டு வரும் பத்திரிகை தோழர்கள் இனி சினிமாவில் நேரடியாக வருமானம் பெற இயலாது. தங்களின் சைட்டுகள், யூ டியூப்புகளை பெரிதாக வளர்தெடுப்பதன் மூலமே சினிமாவில் வருமானத்தை பெற முடியும். அதுதான் சுதந்திர பத்திரிகையாளர்களின் நிலை.

அச்சு ஊடகவியலாளர்கள் பாதுகாப்பான நிலையில் இருக்கிறார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. பல தினசரி, வாராந்திரி, மாத இதழ்கள் மூடப்பட்டு விட்டது. பல ஆன்லைனுக்கு மாறி வருகிறது. தினசரி பத்திரிகைகளில் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. ஒரு முன்னணி ஆங்கில பத்திரிகையின் முன்னணி நிருபருக்கு 6 மாதமாக சம்பளம் வரவில்லை என்றால் யாராவது நம்புவீர்களா? அதுதான் உண்மை. என்றாலும் அவர் என்றாவது ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். காட்சி ஊடகங்களிலும் இதுதான் நிலை.

அச்சு ஊடகங்கள் ஆன்லைன் வழி செய்திகளைத் தர முக்கியத்துவம் தரும். அதனால் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே அவற்றுக்கு தேவைப்படும். இதனால் அச்சு ஊடகவியலாளர்களின் பணி பாதுகாப்பு என்பது இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் பெரிய கேள்விக்குறியாகும்.

ஆகவேதான் நண்பர்களே நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். பத்திரிகை பணியை, சினிமாவை ஆத்மார்த்தமாக நேசியுங்கள், தொடர்ந்து எழுதுங்கள். ஆனால் குடும்பத்தை காப்பாற்ற, பிள்ளைகளை படிக்க வைக்க, அவர்களின் எதிர்காலத்துக்கு திட்டமிட இன்னொரு வருமான வழியை தேடிக் கொள்ளுங்கள். அப்போதுதான் சினிமா பத்திரிகை துறையிலும் நீங்கள் சாதிக்க முடியும், குடும்ப வாழ்க்கையையும் திறம்பட நடத்த முடியும்.

இனி திறமை, தகுதி, அனுபவம் எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் 'தக்கன பிழைக்கும்'.

தங்கள் அன்புள்ள
கே.எம்.மீரான்

No comments:

Post a Comment