Featured post

பிளாக் கோல்டு படத்தில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அஜித் விக்னேஷ் – ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் புதிய பயணம்!

 பிளாக் கோல்டு படத்தில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அஜித் விக்னேஷ் – ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் புதிய பயணம்! தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அ...

Saturday, 28 November 2026

Decoding of Thiruvalluvar’ — ஆர். பாலகிருஷ்ணனின் சிந்தனையின் தொடர்ச்சியாக ‘இன்பத்து-POP’ ஆல்பம் வெளியீடு*

 *‘Decoding of Thiruvalluvar’ — ஆர். பாலகிருஷ்ணனின் சிந்தனையின் தொடர்ச்சியாக ‘இன்பத்து-POP’ ஆல்பம் வெளியீடு*







சென்னை, நவம்பர் 27: திருக்குறளையும் திருவள்ளுவரையும் காலம் கடந்து கொண்டாடி, அவர்களின் சிந்தனைகளைப் புதிய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘இன்பத்து-POP’ இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளத்தில் நேற்று நடைபெற்றது. ஆல்பத்தின் ஆறு பாடல்களும் அவற்றுக்கான காணொளிகளும் வெளியிடப்பட்டன.


“திருவள்ளுவரை டிகோடிங் செய்வது” என்ற சிந்தனையைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கவிஞர் ஆர். பாலகிருஷ்ணன், திருக்குறளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடைத்துப் பார்க்காமல், இன்றைய வாழ்வோடு தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். காதல், அறம், உழைப்பு, மனிதநேயம் எனக் குறளில் இடம்பெறும் வாழ்வியல் கருத்துகளைப் பல்வேறு கலை வடிவங்களில் மக்களிடம் கொண்டு செல்வதே அவரது படைப்புப் பயணத்தின் மைய நோக்கமாக உள்ளது.


‘நாட்டுக்குறள்’, ‘உழவர் கீதம்’, ‘பன்மாயக் கள்வன்’, ‘களம் செய் கோவே’ எனத் தொடரும் அந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக ‘இன்பத்து-POP’ உருவாகியுள்ளது. திருக்குறளின் இன்பத்துப்பால் உணர்வுகளை நாட்டுப்புறப் பாடல் வடிவில் அறிமுகப்படுத்திய ‘நாட்டுக்குறள்’ முயற்சியில் தாஜ் நூர் இசையமைத்திருந்தார். உழவர் வாழ்வை மையமாகக் கொண்ட பாடல் முயற்சியிலும் பாலகிருஷ்ணனின் வரிகளுக்கு தாஜ் நூர் இசையமைத்து இயக்கியுள்ளார்.


இம்முறை இன்பத்துப்பாலின் காதல், ஏக்கம், ஊடல், உறவுகளின் நுட்பம் ஆகியவற்றை நவீன POP இசை மற்றும் காணொளி வடிவில் இளம் தலைமுறையிடம் கொண்டு செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் திருக்குறள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் வாழ்வியல் இலக்கியம் என்பதைப் புதிய கலை வடிவில் உணர்த்துவதே ஆல்பத்தின் நோக்கமாகும். அடுத்ததாகத் திருக்குறளை கானா இசை வடிவில் அறிமுகப்படுத்தும் புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்த ஆல்பம் விரைவில் வெளிவரவுள்ளதாகவும் ஆர். பாலகிருஷ்ணன் நிகழ்வில் அறிவித்தார்.


தாஜ் நூர் ஆல்பத்தின் பாடல்களுக்கு இசையமைத்ததுடன், அவற்றின் காணொளி உருவாக்கத்திலும் முக்கியப் பங்காற்றினார். பாடல்களின் கருத்துகளையும் திருக்குறளின் உணர்வுகளையும் இன்றைய காட்சிமொழியில் வெளிப்படுத்தும் வகையில் அவரது பங்களிப்பு அமைந்தது.


நிகழ்வின் சிறப்பம்சமாக, தாஜ் நூரின் மகன் என். எம். அக்தர், ‘வசியக்காரி’ பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார். விழாவில் நேரடி இசைக்குழுவுடன் அந்தப் பாடலை மேடையில் பாடி அறிமுகப்படுத்தினார். இசையமைப்பாளராகவும் பாடகராகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ள அவருக்கு, இந்தப் பாடல் ஒரு முக்கியமான தொடக்கமாக அமைந்தது.


இந்த ஆல்பத்தில் ‘பொய்ச் சண்டை’ பாடலை ஜித்தின் ராஜ், ‘வசியக்காரா’ பாடலை கவிதா கோபி, ‘வா நண்பா’ பாடலை திவாகர் மற்றும் அரவிந்த் சீனிவாஸ், ‘இப்படி ஒரு தீயா’ பாடலை திப்பு, ‘யாராலே’ பாடலை ஜித்தின் ராஜ், சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் சக்தி அமரன், ‘வசியக்காரி’ பாடலை என். எம். அக்தர் ஆகியோர் பாடியுள்ளனர்.


நிகழ்ச்சியுடன் கவிஞர் ஆர். பாலகிருஷ்ணனின் ‘இயல்–இசை’ நூலும் வெளியிடப்பட்டது. திருக்குறளை நாட்டுப்புற இசை வடிவில் மக்களிடம் கொண்டு சென்ற ‘நாட்டுக்குறள்’ ஆல்பத்தின் பத்தாம் ஆண்டு சிறப்புப் பதிப்பும் வெளியிடப்பட்டது. திருக்குறளின் கருத்துகளைப் புதிய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கிராமப்புறப் பள்ளி மாணவ, மாணவியரிடம் ஆல்பம் வெளியிடப்பட்டது நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது.


‘இன்பத்து-POP’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் கவிஞர்கள் சினேகன், இளைய கம்பன், தமிழமுதன், திரு. கருப்புசாமி உள்ளிட்ட பல கவிஞர்களும், வளர்ந்து வரும் புதிய கவிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பில் சுந்தர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஓவியர் டாஸ்கி மருது வரைந்த திருவள்ளுவர் ஓவியங்களும் நிகழ்வில் வழங்கப்பட்டன. திருக்குறளை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், இசை, பாடல், ஓவியம் மற்றும் காணொளி வழியாகவும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக ‘இன்பத்து-POP’ ஆல்பம் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment