Featured post

Wonderla Chennai to Open on December 2: A New Era of Entertainment for Tamil Nadu

 Wonderla Chennai to Open on December 2: A New Era of Entertainment for Tamil Nadu India’s first Bolliger & Mabillard (B&M) Inverted...

Monday, 25 April 2022

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில்

 யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஆர் கே சுரேஷ் வெளியிடவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது


சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிடவுள்ள 'மாமனிதன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடக நண்பர்கள் மற்றும் திரையுலக ஆளுமைகள் முன்னிலையில் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது.




 
விழாவில் பேசிய விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன், அவருடைய இசையில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இயக்குநர் சீனு ராமசாமி மனிதாபிமானத்தை மையப்படுத்தி படம் எடுக்க கூடியவர். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்," என்றார்.

உங்களின் அன்பு, விமர்சனங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள மனம் திறந்து காத்திருக்கிறேன் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

"நல்ல விஷயங்கள் நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். படத்தின் OTT உரிமையை வாங்கிய அல்லு அரவிந்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டினார். யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்தப் படம் குழந்தை போல. யுவன், விஜய் சேதுபதி இல்லாமல் இந்தப் படம் நடந்திருக்காது. முழு ஈடுபாட்டுடன் இப்படத்தை தொடங்கினேன். இளையராஜாவுக்கு அர்ப்பணிக்கும் விதமாக இப்படம் இளையராஜா பிறந்த ஊரான பண்ணையபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

படத்தை பற்றி யுவன் ஷங்கர் ராஜா கூறும்போது, ​​"படம் வெளியாவதில் பல சிக்கல்களும் சந்தேகங்களும் இருந்தன. ஆர்.கே. சுரேஷ் படத்தை பார்த்து மிகவும் பிடித்ததாக கூறினார் என்று சீனு ராமசாமி என்னிடம் தெரிவித்தார். குழப்பமான ஒரு சூழ்நிலையில் இருந்த போது, இது ஒரு நேர்மறையான உணர்வைக் கொடுத்தது. நானும் சீனு ராமசாமியும் ஒன்றாக பலமுறை பணியாற்றியுள்ளோம். அவர் ஒரு அருமையான இயக்குநர். நான் விஜய் சேதுபதியை அணுகியபோது அவர் டேட் இல்லை என்று கூறினார். நானும் என் அப்பாவும் படத்திற்கு ஒன்றாக இசையமைப்போம் என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன். இந்தப் படத்தில் என் தந்தையுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன், படத்தை நான் தயாரிப்பதால்தான் இது சாத்தியமானது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

விஜய் சேதுபதியை பாராட்டிய ஆர் கே சுரேஷ், நடிப்பில் அவர் ஒரு அசுரன் என்று கூறியுள்ளார்.

"இயக்குநர் பாலுமகேந்திராவுக்குப் பிறகு மனித உணர்வுகளை படம்பிடிக்கும் சமகால இயக்குநர்களில் சீனு ராமசாமி முக்கியமானவர். எங்கள் இருவரின் நட்பு தான் 'தர்மதுரை' வெற்றிக்கு வழிவகுத்தது. மக்கள் மனதில் ரஜினிகாந்த் மட்டுமே அடைந்துள்ள இடத்தை விஜய் சேதுபதி கூடிய விரைவில் பிடிப்பார். சீனு ராமசாமி எப்போதும் விஜய் சேதுபதியிடம் இருந்து சிறந்ததையே பெறுவார். இந்த திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்", என்று அவர் மேலும் கூறினார்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உடன் இருந்தனர்.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிடவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பாண்டிச்சேரியில் நடைபெற்றது.

No comments:

Post a Comment