காற்றின் மொழி’ படத்தின் இசையமைப்பாளர் A.H.காஷிஃப் பேசியது:-
‘காற்றின் மொழி’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். சிறு வயதிலேயே இசைப் பயில ஆரம்பித்தேன். எனது மாமாவிடம் ( A.R.ரகுமானிடம் ) ‘Internship’ செய்தேன். பல படங்களில் அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் பாடல்களை ‘Youtube’ பதிவேற்றினேன். அப்போதுதான் தனஞ்செயன் சினிமாவில் இசையமைக்க ஆர்வம் இருக்கிறதா? என்று கேட்டார். அப்படிதான் இந்த பயணம் தொடங்கியது. ஹிந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ தான் ‘காற்றின் மொழி’. இப்படம் தொடங்கும் போதே எல்லோரும் தங்களுடன் தொடர்பு கொள்வார்கள். வெற்றிப் பெற்ற பாடல்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு முறை தான் பாடல்களைக் கேட்டேன். ஆனால், அதன்பிறகு பெரிதாக அதைப்பற்றி சிந்திக்கவில்லை. ராதாமோகனுடன் இணைந்து இசையமைக்க ஆரம்பித்துவிட்டேன். பின்னணி இசையைப் பொறுத்தவரையில் படத்தின் முதல்பாதி மிகவும் சுலபமாக முடிந்துவிட்டது. இரண்டாம் பாதியில் பல காட்சிகள் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால், தரமான இசையைத் தரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். ஆகையால், அதன் பணி நடந்து வருகிறது.
இப்படம் எளிமையான வாழ்க்கை, அதில் இருக்கும் உணர்ச்சிகரமான சம்பங்கள் போன்ற கதைக்கருக்கேற்ப இசை அமைந்திருக்கும். இப்படத்தின் சிறப்பைப் பற்றிக் கூறவேண்டுமானால், கதைக்கு என்ன தேவையோ, மேலும் ராதாமோகன் என்ன எதிர்பார்த்தாரோ அதை அப்படியே கொடுத்திருக்கிறேன்.
முதல் பாடல் மதன் கார்க்கி இணைந்து பணியாற்றியது, ‘டர்ட்டி பொண்டாட்டி’ (Dirty Pondatti) பாடலைத் தான் இசையமைத்து முடித்தோம். இப்பாடல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
அடுத்த பாடல் ‘கௌம்பிட்டாளே விஜயலட்சுமி’, இந்தப் பாடல் ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையில் எவற்றையெல்லாம் பார்த்து ரசிப்பாள் என்பதை பற்றி சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாக அமைந்திருக்கும். இயக்குநர் ராதாமோகன் முதலிலேயே கூறிவிட்டார், அப்பாடல் தான் இப்படத்தின் அடித்தளம் என்று. ஆகையால், அதை மனதில் வைத்து அந்தப் பாடலின் இசையாகட்டும், வரிகள் ஆகட்டும் இயக்குநர் கூறியபடிதான் இருக்கும்.
இன்னொரு சிறப்பு பாடல்‘றெக்கைத் துளிர்த்த பச்சைக்கிளி, இனிமேல் நான் தான் காற்றின் மொழி’. தலைப்புப் பாடலாக அமைந்திருக்கும் இப்பாட்டின் உள்ளே படத்தின் மையக்கருவைக் கொண்டிருக்கும். பாடலைப் பார்க்கும்போது அதை நன்றாக உணரலாம்.
அடுத்ததாக இந்த படத்தின் க்ளைமாக்ஸ் மட்டுமல்லாமல் முழுப் படத்தின் கதையையுமே அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வது ‘போ உறவே’ பாடல் தான். இருப்பினும், ‘கௌம்பிட்டாளே விஜயலட்சுமி’ இந்தப் பாடல் தான் படத்தின் அடையாளமாக இருக்கும்.
பாடல்களை இசையமைத்து முடித்ததும் முதலில் எனது பாட்டியிடம் கொடுத்தேன், அடுத்து A.R.ரகுமானிடம் தான் கொடுத்தேன். மாமா என்ற உறவைத் தாண்டி அவர் பள்ளியில் பயின்றதால் அவர் எனக்கு குரு. ஆனால், பாடல்களை அவர் கேட்டாரா? என்று தெரியவில்லை.
மேலும், இப்படத்திற்கு புதுமுகமான என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தனஞ்செயனுக்கும், ராதாமோகனுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜோதிகா பாடல்களைக் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்.
இதன்பிறகு மலையாளத்தில் அகஸ் சினிமாஸ் தயாரிப்பில் ‘பதினெட்டாம் படி’ என்ற படத்தில் இசையமைக்கவிருக்கிறேன்.
இதுவரை A.R.ரகுமானைத் தவிர யாரிடமும் பணியாற்றியதில்லை. யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை. அவருடைய வாழ்க்கையைப் பார்த்தாலே போதும். அவருடைய ஆன்மீகப் பாதையில் யாராலும் பயணிக்க இயலாது. அதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறேன். அவருடன் பணியாற்றி அனுபவம் மிகப் பெரியது. இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
‘காற்றின் மொழி’ படத்தின் இசை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். இளைஞர்கள், வயதானவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
நவம்பர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.
இவ்வாறு ‘காற்றின் மொழி’ படத்தின் இசையமைப்பாளர் A.H.காஷிஃப் கூறினார்.
No comments:
Post a Comment