Featured post

மேடை நடன கலைஞர்கள் தமிழக முதல்வருக்கு 11' அம்ச கோரிக்கை!

 மேடை நடன கலைஞர்கள்  தமிழக முதல்வருக்கு 11' அம்ச கோரிக்கை! திரை நட்சத்திரங்களின் 'ஸ்டார் நைட் ஷோ' தலைமையேற்க முதல்வருக்கு அழைப்ப...

Tuesday 20 December 2022

லத்தி படத்தை போல் இன்னொரு படத்தில் நடிப்பேனா என்று தெரியவில்லை

 #லத்தி படத்தை போல் இன்னொரு படத்தில் நடிப்பேனா என்று தெரியவில்லை; 

விஜய்-ஐ வைத்து நிச்சயம் இயக்குவேன் - நடிகர் விஷால்


வருகிற 22ஆம் தேதி வெளியாகும் 

#லத்தி படத்தில் தன்னுடைய அனுபவம் குறித்து நடிகர் விஷால் கூறியதாவது :


நான் ஏற்கனவே காவல்துறை உயரதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் அதுபோன்ற கேரக்டர் இருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பேன். ஆனால், இது ஒரு கான்ஸ்டபிள் கதாபாத்திரம். உயர் அதிகாரிகள் கட்டளையிடுவதை செய்வதுதான் கான்ஸ்டபிள்-ன் வேலை. கதை கூறும் போது எனக்கும் இது புதிதாக இருந்தது. அதேபோல் டைரக்டர் வினோத்குமார் என்னிடம் கதை சொல்லும் போது, 










படத்தில் 7வயது பையனுக்கு அப்பாவாக நடிக்கிறீர்கள் என்று தயங்கி தயங்கி கூறினார். அதில் எனக்கு பிரச்சனை இல்லை நீங்கள் கதையைக் கூறுங்கள் என்றேன். படத்தில் நடித்த சிறுவன் இரண்டாவது கதாநாயகன் மாதிரிதான். கடைசி 45 நிமிடங்கள் ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதிலும் பூர்த்தியாகாத கட்டிடத்திற்குள் நடக்கும் காட்சிகள். 45 நிமிடம் ஒரே இடத்தில் நடக்கும் காட்சிகளை ஆர்வம் குறையாமல் எடுப்பது என்பது புதுமையாக இருந்தது. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. முதலில் நான் சாதாரணமாக தான் கதை கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அடுத்தடுத்து கேட்க கேட்க என்னுடைய உடல் மொழியே மாறி விட்டது. பொதுவாக ஒரு படத்திற்கு ஒரு கிளைமாக்ஸ் தான் இருக்கும். ஆனால், இந்த படத்தில் நான்கு கிளைமாக்ஸ் இருக்கும். இந்த காட்சிக்கு மேல் கதாநாயகனால் எதுவும் செய்ய முடியாது இதோடு படம் முடிந்தது என்று நினைக்கும் அந்த நிமிடத்தில் இருந்து திரைக்கதை யூடர்ன் எடுக்கும். அனைத்து கட்ட பணிகளும் முடிந்து இப்போதுதான் முழுதாக படத்தை பார்த்தேன். வினோத் கூறியதை விட மூன்று மடங்கு அதிகமாக தெரிந்தது. நான் நடித்த படம் என்பதற்காக இதைக் கூறவில்லை. அதேபோல், பின்னாடி இருந்து பீட்டர் ஹெயின் மற்றும் யுவன் சங்கர் ராஜா என்ற இரண்டு கதாநாயகர்கள் இப்படத்தை தூக்கி நிறுத்தி விட்டார்கள்.


#லத்தி என்பது கவர்ச்சிகரமான தலைப்பு என்பதால் அனைத்து மொழிகளிலுமே படத்தின் பெயரை லத்தி என்று வைத்து விட்டோம். அதேபோல லத்தி என்பது வெறும் பெயர் மட்டுமல்ல, படத்தில் அதுவும் ஒரு கதாபாத்திரம். அந்த லத்தி தான் ஒரு சூழ்நிலையில் கொண்டு வந்து நிறுத்தும். பின்பு அந்த லத்தி மூலமாக அவன் எப்படி அதிலிருந்து வெளியில் வருகிறான் என்பதுதான் கதை.


ஒரு உயர் அதிகாரியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, ஏன் எப்போதும் உயர் அதிகாரிகளைப் பற்றியே எடுக்கிறார்கள்? கான்ஸ்டபிளான எங்கள் வாழ்க்கையை எடுக்க மாட்டார்களா? என்று ஒரு கான்ஸ்டபிள் என்னிடம் கேட்டார் என்றார். அதற்கு நான் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறேன் என்று கூறியதும் மிகவும் சந்தோஷம் அடைந்தார். ஏனென்றால், சுமார் 2 லட்சம் பேர் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றுகிறார்கள். ஆனால், உயர் அதிகாரிகள் 250 பேர் தான் இருக்கிறார்கள்.


ஆகையால், கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கும் மகிழ்ச்சியே. கான்ஸ்டபிளுக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்பதை கிடையாது. அவர்கள் மொத்த வாழ்க்கையுமே அர்ப்பணித்து விடுகிறார்கள். அவர்கள் தூங்குவதே மூன்று மணி நேரம் மட்டும் தான் இருக்கும். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தால் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் என்று ஏதாவது ஒரு பிரச்சனை நிச்சயம் இருக்கும். இதை நான் கூறவில்லை ; காவல்துறையினரே கூறியது. இவர்கள் ஆறு மாத காலம் பணியிடை நீக்கத்தில் இருந்தால், சரியான நேரத்திற்கு சாப்பாடு தூக்கம் என்று உடல் நலம் தேறி விடுவார்கள். நான் அண்ணா நகரில் இருக்கிறேன். அங்குள்ள காவல் நிலையத்தில் உள்ள அனைவரையும் அவர்களது குடும்பத்தாருடன் இப்படத்தை காண்பிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். சேலம் கமிஷனரும் நான் அனைவரையும் அழைத்து செல்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதேபோல் ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருக்கும் அனைவரையும் குடும்பத்துடன் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


143 நாட்கள் படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் அடிபட்டு நடித்திருக்கிறேன். இதுபோன்று இன்னொரு படத்தில் பணியாற்றுவேனா என்று தெரியவில்லை. ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு இந்த படத்திலும் இறுதி காட்சியில் ஆறு நிமிடங்கள் சவாலாக இருந்தது. அந்த காட்சியை கூறிவிட்டு வசனத்திற்கான பேப்பரை டைரக்டர் கொடுத்தார். ஆனால் நான் மறுத்து விட்டேன். என்னை சுற்றிலும் 12 கேமராக்கள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்ப இந்த காட்சியை நான் நடிக்க மாட்டேன் என்று கூறினேன். தன் மகனுக்காக ஒரு அப்பா தன்னுடைய உணர்வை, உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துவார் என்று மனதில் நிறுத்திக் கொண்டு நடித்திருக்கிறேன். ஒரு சராசரி மனிதன் தன் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது, அதுவரை இருந்த பேச்சு நடை என்று எல்லாம் மாறி கதாநாயகனாகி எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் இத்திரைப்படம்.


 2012 இல் இருந்து சுனைனா வேறு, இப்போது இருக்கும் சுனேனா வேறு. அழகாக நடித்திருக்கிறார்.

பொதுவாக அம்மா பையன் சென்டிமென்ட் படங்கள் தான் அதிகம் இருக்கும். இந்த படத்தில் அப்பா பையனுக்கு இருக்கும் சென்டிமென்ட் காட்சிகள் படம் முழுவதுமே இருக்கும்.


மேலும், என்னுடைய 18 வருட கால சினிமா பயணத்தில் பீட்டர் ஹெயின் மாஸ்டர் போல் ஒரு ஸ்டண்ட் இயக்குநரை நான் பார்த்ததில்லை. அவர் பாதுகாப்பு தான் முதலில் பார்ப்பார். அவருடைய பணியை அர்ப்பணிப்போடு செய்வார். ஒவ்வொரு காட்சி முடிந்ததும் அவரை நான் பார்ப்பேன். அவர் உற்சாகமடைந்தால் தான் எனக்கு திருப்தியாக இருக்கும்.


காட்சியில் 50 பேர் உங்களை சுற்றி அடிக்க வருவார்கள் நீங்கள் எப்படி உங்களை காப்பாற்றிக் கொள்வீர்கள்? என்று கேட்டுவிட்டு என் விருப்பத்திற்கு விட்டுவிட்டார். அந்த சவால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், என்னுடன் சண்டையிட்ட வீரர்களுக்கு நிஜமாகவே அடி விழுந்தது. காட்சி முடிந்ததும் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்டேன்.


 ஹிந்தியில் என்னுடைய படம் வெளியானால் தமிழ் மொழிக்கு 50 மற்றும் ஹிந்தி மொழிக்கு 50 திரையரங்குகள் கிடைக்கும். ஆனால் இந்த படத்தை அதிகாரப்பூர்வமாகவே வெளியிடுகிறார்கள். ஆகையால்,சுமார் 450 திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளம் மற்றும் கன்னட மக்கள் எப்போதும் ஒரிஜினல் தான் விரும்புவார்கள். நாங்கள் அந்த மொழிகளில் டப்பிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அது மட்டுமல்ல, திரைப்பட விழாக்களுக்கு சென்றேன். அங்கும் படத்தை புரமோட் செய்ய முடியும் என்பதை அறிந்து கொண்டேன்.


இப்படத்தின் புரமோஷனுக்காக ஒவ்வொரு ஊராக சென்றதில் என் ட்ரஸ்ட் மூலமாக படிக்கும் 15 மாணவிகளுக்கு இலவசமாக சிறந்த கல்லூரியில் இடங்கள் கிடைத்துள்ளது.


 திருட்டு வீடியோவை அழிப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழு ஆறு மாதங்கள் கடினமாக உழைத்து கண்டுபிடித்து வைத்துள்ளோம். ஆனால், அரசாங்கம் நினைத்தால் அதை எளிதில் ஒழித்து விடலாம். ஏனென்றால், சைபர் கிரைமில் தொழில்நுட்பங்கள் இருக்கின்றது. அனைத்து தளங்களையும் முடக்குவதற்கு வாய்ப்பு இருக்கும்போது திருட்டு வீடியோ ஒளிபரப்பாகும் தளங்களை மட்டும் ஏன் அவர்களால் தடை செய்ய முடியவில்லை என்று தெரியவில்லை. ஆனால், என்றாவது ஒருநாள் பிரதமர் மோடி அவர்களை சந்தித்தால் இரண்டு விஷயங்களுக்காக கோரிக்கை வைப்பேன். ஒன்று திருட்டு வீடியோ தளம் இன்னொன்று ஜிஎஸ்டி.


 திருட்டு வீடியோ தளத்தை அழித்தால் தளத்தை ஐபி முகவரியை மாற்றி வேறொரு பெயரில் புதிதாக தொடங்குகிறார்கள். இது இப்படியே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதை யார் செய்கிறார்கள், அவர்களுடைய வீடு, குடும்பம் என்று மொத்த விபரம் என்னிடம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் கூகுள் வழிகாட்டியும் இருக்கிறது.


ஒரு காட்சிக்கு 10 பேர் மட்டுமே வந்திருக்கும் நிலையில், இவர்கள் மொத்தமாக 50 டிக்கெட்டுகள் வாங்கிக் கொண்டு நடுவில் ஸ்டாண்ட் வைத்து படம் பிடித்து வெளியிடுகிறார்கள். இப்போது யார் தளத்தில் முதலில் வெளியிடுவது என்று போட்டிகளே நடக்கிறது.


#சத்யம் திரைப்படத்தில் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு விரைப்பாக நடித்து விட்டேன். ஆனால், லத்தி படத்தில் அதற்கு எதிரான கதாபாத்திரம். அது சவாலாக இருந்ததால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தின் 45 நிமிட சண்டைக் காட்சிகளுக்காக இடம் தேடிக் கொண்டிருந்தோம். நிறைய இடத்தில் தேடி இறுதியாக ஹைதராபாத்தில் பீட்டர் ஹெயின் மாஸ்டர் தான் கண்டுபிடித்தார். அந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்து வெடித்த பின் படப்பிடிப்பு நடத்திவிட்டு, மறுநாள் உரிமையாளர் வருவதற்குள் சுத்தம் செய்து வைத்தோம்.


#கைதி படம் எப்படி முதலில் மன்சூர் அலிகானில் ஆரம்பித்து கார்த்தியில் முடிந்ததோ?! அதுபோல இந்த படம் முதலில் சமுத்திரக்கனிக்கு தான் எழுதப்பட்டது. சமுத்திரக்கனி நடித்திருந்தால் முருகானந்தம் என பெயரிடப்பட்டிருக்கும்.


 இப்போதைக்கு சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன். கர்நாடகாவில் நான் அரசியலுக்கு வர போவதாக ஒரு செய்தி பரவியது. அது தெரிந்ததும் எனது அப்பாவிற்கு தொடர்பு கொண்டு நிறைய பேர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். ஆனால், அது உண்மை இல்லை. குப்பத்தில் நான் மூன்று வருடங்கள் தங்கி இருந்தேன். அப்போது தினமும் ஒவ்வொரு குவாரிக்கும் நான் செல்வேன். அங்கு இருக்கும் மக்களுக்கு நான் நன்றாக பரிச்சயம் என்பதால் அரசியலுக்கு வருவேன் என்று செய்தி வந்துள்ளது. அதேபோல் நான் பிஜேபி தலைமை அலுவலகத்திற்கு செல்வதாகவும் ஒரு செய்தி பரவியது. அப்போது நான் அசாமில் இருந்தேன். பிறகு காசிக்கு சென்றேன். கங்கை ஆற்றில் பிணங்கள் எரியும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்பினேன் ஆனால் செல்ல முடியவில்லை. அங்கு ஒருபுறம் ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரரின் உடலும் எரிந்து கொண்டிருக்கும். மறு புறம் ஆயிரம் ரூபாய்க்கு வழியின்றி இருப்பவரின் உடலும் எரிந்து கொண்டிருக்கும். நாமும் இறுதியாக இங்கு தான் வர போகிறோம். ஆகையால், யாருக்கும் பேதமில்லை, எல்லோரும் ஒன்று தான் என்று தோன்றியது. எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேனா என்பது தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது ஒரு துறை அல்ல; அது ஒரு சமூக சேவை! யாரெல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்களோ, அனாதை இல்லத்திற்கு ஒருவேளை சாப்பாடு போடுகிறார்களோ அவர்களும் அரசியல்வாதி தான். மற்றவர்களுக்கு உதவுவது தான் அரசியல். அதை என்னால் இப்போதே செய்ய முடியும் போது, பதவிக்கு வந்து தான் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.


வரும் பிப்ரவரி மாதத்தில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறேன். நான் படம் இயக்குவேன் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. நான் எழுதியது வேறு கதை. ஆனால், இயக்கப் போவது வேறு. அந்த கதையில் ஏழு தெரு நாய், ஒரு பூனை, ஒரு குதிரை சம்பந்தப்பட்ட விலங்குகளின் கதை. அந்த விலங்குகளை ப்ளூ கிராஸில் தத்தெடுத்து வெளிநாட்டு பயிற்சியாளரை வரவழைத்து பயிற்சி அளித்து படத்தை உருவாக்கப் போகிறோம். அந்தப் படம் தான் அறிமுக இயக்குநராக நான் இயக்கும் படமாக இருக்கும். அடுத்து நான் நடிக்கும் படம் # மார்க்ஆண்டனி, #துப்பறிவாளன்-2. 


கொரோனா காலத்தில் விஜய்-க்கு கதை சொல்ல வேண்டும் என்று ராமு சாரை தொடர்பு கொண்டேன். அப்போது முடியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் நிச்சயம் அவரை வைத்து இயக்குவேன். ஒரு ரசிகனாக இயக்குவேன். அவருக்காக அவருக்கு பிடித்த மாதிரி கதையை எழுதி வருகிறேன். அவர் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவ்வப்போது தோன்றும் போதெல்லாம் சுவரில் எழுதி விடுவேன். வெளியே இருந்தால் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து வைப்பேன்.


மிஷ்கின் அழைத்தால் நிச்சயம் அவரது அலுவலகம் செல்வேன். தயாரிப்பாளராக அல்ல, ரசிகனாக செல்வேன்.


அமைச்சராக பதவி ஏற்கும் போது தான் உதயநிதி ஸ்டாலின் என்று அப்பா பெயரை உபயோகித்தார். அதுவரை உதயா என்று தான் கூறுவார். #லத்தி படம் வெளியான பிறகு இங்கு ஒரு பிலிம் சிட்டி வேண்டும். ஏற்கனவே சென்னையில் இருப்பதை மேம்படுத்தினாலே போதும் என்று கோரிக்கை வைப்பேன் என்றார்.

No comments:

Post a Comment