Featured post

சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்!

 சுஹாசினியின் இளமையை வர்ணித்த ஆர். பார்த்திபன்!  'தி வெர்டிக்ட்' திரைப் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா! என் இளமையின் ரகசியம் எ...

Thursday, 11 October 2018

கரூரில் உள்ள "எல்லோரா" தியேட்டர்

கரூரில் உள்ள "எல்லோரா"  தியேட்டர் மீது போலீஸ்  நடவடிக்கை!

'ஒரு குப்பைக் கதை' என்ற சமூக அக்கறையுள்ள திரைப்படத்தை 'முகமது அஸ்லம்' என்ற தயாரிப்பாளர் தயாரித்து அதை கடந்த மே மாதம் 25 - ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் 'ரெட் ஜெயண்ட்' என்ற பெரிய நிறுவனம் மூலமாக வெளியிட்டார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தத் தயாரிப்பாளர் ஏற்கெனவே 'பாகன்' என்ற படத்தை ஸ்ரீகாந்த்,    ஜனனி ஐயர் மற்றும் சூரி ஆகியோரை வைத்து இயக்கி வெற்றி பெற்றவர். மற்றும் ஊடகவியலாளர்.

அவரது 'ஒரு குப்பைக் கதை' திரைப்படம் மயிலாடுதுறை கோமதி திரையரங்கில் திருட்டுத்தனமாகப் படம் பிடிக்கப்பட்டதைக் கண்டு பிடித்து, அந்தத் தியேட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது யாவரும் அறிந்தததே.

இதே படத்தை கரூரில் இயங்கும் 'அஜந்தா, எல்லோரா' என்ற இரட்டைத் தியேட்டர் அரங்கத்தில் 'எல்லோரா' என்ற தியேட்டரில் திருட்டுத்தனமாக படம் பிடித்து, இண்டர்நெட்டில் ஏற்றி படத்தின் வியாபாரத்தைப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கினர்.

இதையறிந்த தயாரிப்பாளர் முகமது அஸ்லம் 'ஃபாரன்சிக் வாட்டர்மார்க்' முறையில் கண்டுபிடித்து அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார்.

இந்த எல்லோரா தியேட்டர் உரிமையாளரான மீனாட்சிசுந்தரம் என்பவர் 'பெஸ்ட் ராமசாமி' என்ற கொங்கு கட்சித் தலைவரின் சம்பந்தி என்று அறியப்படுகிறது.

மேலும், அந்த மாவட்டத்தின் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

எனவே, இவர் போலீஸ் நடவடிக்கையான கைது, புரஜக்டர் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்வது ஆகியவை நடக்காமல் தடுக்க, முன்ஜாமீன் பெற்றுக் கொண்டார். ஆனாலும், போலீஸ் அவர்மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

சங்கத்தின் தலைவர் என்ற வேலியே பயிரை மேய்ந்திருக்கிறது

இது குறித்து தயாரிப்பாளர் அஸ்லம் கூறும்போது,

"அனைத்து தரப்பினரும் பாராட்டிய  இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படத்தைத் தயாரிக்க பலருடைய உழைப்பும், பொருளாதாரமும் அடங்கி உள்ளது. அப்படிப்பட்ட ஒரு படத்தை இவர்கள் நாசமாக்கி விட்டார்கள்

குடும்பம்
குடும்பமாய்  தியேட்டர்களில் வந்து பார்க்க வேண்டிய படத்தை
இவர்கள் செய்த திருட்டுக் காரியத்தால் பல கோடிகள் வருமான இழப்பை ஏற்படுத்தி விட்டது. மட்டுமல்லாமல் பல லட்சக்கணக்கான மக்களை திருட்டுத்தனமாக இண்டர்நெட்டில் பார்க்க வைத்த மாபெரும் குற்றத்தையும் செய்துள்ளார்கள். மேலும், இந்தத் திருட்டில் இருந்து தப்பிப்பதற்காக சட்டத்தை ஏமாற்றிக்  கொண்டிருக்கிறார்கள்

இது முறையற்ற செயல்.

தவறை உணர்ந்து தகுந்த நஷ்டஈடு கொடுத்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இல்லையென்றால்  கோர்ட்டில் பல கோடிக்கு நஷ்டஈடு வழக்குப் போட்டு சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை    வாங்கித்தரும் வரை ஓய மாட்டேன்" என்று காட்டமாக கூறினார்.

ஏற்கெனவே கிருஷ்ணகிரி முருகன்  தியேட்டரில் 'மனுசனா நீ' என்ற படத்தைத் திருடியது சம்பந்தமாக அதன் தயாரிப்பாளர் கஸாலி வழக்குப் போட்டிருக்கிறார்.

மேலும் கோலிசோடா டூ, தொட்ரா, ராஜா ரங்குஸ்கி, சீமராஜா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களைத் திருடிய தியேட்டர்கள் மீதும் வழக்குப் பதிவு வேலைகள் நடந்துவருகின்றன.

தியேட்டர் உரிமையாளர்களும், அதை சார்ந்த சங்கங்களும்  பொறுப்போடும் நேர்மையோடும் நடந்து கொண்டால் இந்தத் தொழில் பாதுகாக்கப்படும்.  இல்லையென்றால் தொழிலே நாசமாகி விடும்  என்று தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், நேர்மையாக தொழில் செய்யும் தியேட்டர் உரிமையாளர்களும்,  சினிமா கலைஞர்களும் மற்றும் இதையே நம்பி வாழக்கூடிய தொழிலாளர்களும் கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment