Featured post

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம்

 *Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் !!* *'டூரிஸ்ட...

Tuesday, 18 May 2021

மருத்துவமனையின் அத்தனை சங்கிலிகளிலிருந்தும் விடுபட்ட

 மருத்துவமனையின் அத்தனை சங்கிலிகளிலிருந்தும் விடுபட்ட சிட்டுக்கிருவியாய் 

நேற்றிரவு இல்லம் திரும்பினேன்.

ஒரு மாத பூர்ண ஓய்வுக்கு பிறகு 
மெல்ல என் பணிக்கு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

அபாயக்கட்டத்தைக் கடக்க 
நட்பின் கரங்களால் 
பேருதவி செய்த 
சில உயர்ந்த உள்ளங்களை 
நினைவு கூறாமல் என் கடமை தீராது

கொரானாத் தொற்று ஏற்பட்ட 
முதல் தினத்தில் இருந்து 
எனக்கான மருத்துவ ஆலோசனைகளை சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் வழங்கியவண்ணம் இருந்தார்.

ஆனால் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் மற்றும் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிறைந்து வழிந்ததால் நானே முடிவெடுத்து வீட்டிலே தனிமைப்படுத்திக்கொண்டதில் காய்ச்சல் குறையவில்லை. சகல வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து விடுங்கள் மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தினார்.
ஆனால் என் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 
என் இல்லம் அருகே உள்ள சின்ன மருத்துவமனையில் சேர்ந்தேன்.
குழந்தை மருத்துவர் ஆல்பர்ட் அவர்கள் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டார்
ஆனால் அங்கு சேர்ந்த பிறகு வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் என் உடல்நிலை மோசமான சூழ்நிலையை எட்டியபடியிருந்தது.

தயாரிப்பாளர்கள் Jsk சதீஷ்குமார் அவர்களும், 
தயாரிப்பாளர் டி.சிவா அவர்களும் 
எனை பெரிய மருத்துவமனைக்கு மாறிவிடும்படி எச்சரித்தவண்ணம் இருந்தனர்.

அன்றிரவு எனக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் என் நுரையீரல் மருத்துவமனையில் சேர்ந்த போது ஏற்பட்ட பாதிப்பை விட மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாகவும் காட்டியது.

நண்பன் வரதன் அந்த சிடி ஸ்கேனை மருத்துவர் சிவராமனுக்கு அனுப்ப அவர் உண்மையில் மிகவும் பதறி…….வரதன் மிக அவசரம் ! மிக அவசரம் ! தவற விடும் நொடிகள் மிக ஆபத்தானவை என்று அறிவுறுத்தி எட்டு திசையும் எனக்கான மருத்துவமனைக்கு போராடி, கடைசியில் உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் மதிப்பிற்குரிய ராதாகிருஷ்ணன் மற்றும் உதயசந்திரன் அவர்களைத்தொடர்புக்கொண்டு அப்போலோவில் தொற்று நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் ராமசுப்ரமணியம் அவர்களிடம் உரையாடி என் நிலமையை எடுத்துரைத்து எனக்கான ஒரு படுக்கையை மருத்துவர் கு.சிவராமன் அப்போலோவில் பெற்று விட்டார்.

அதிகாலையிலே எனை மருத்துவமனை மாற்றும் முயற்சி பற்றி நண்பர் வரதன் சொன்னான்.
"அப்போலாலாம் நமக்கு சரியா வருமாடா...நாமளலாம் மிடில்கிளாஸ் என்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்துவிடு" என்று கெஞ்சினேன்.

"வாயப்பொத்திக்கிட்டு சும்மாயிரு" 
என்றபடி நான் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டேன்.

எனை பரிசோதித்த மருத்துவர் ராமசுப்ரமணியம் 
'ஒரு உயிர்காக்கும் மருந்தின் பெயரை உச்சரித்து இந்த மருந்து அது எங்கள் மருத்துவமனையில் இப்போது ஸ்டாக் இல்லை எங்கிருந்தாவது இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் தருவியுங்கள்..ஆபத்தான கட்டத்தில் உள்ளார் என்று அறிவுறுத்தினார்.

மீண்டும் எட்டுதிசைக்கும் வரதனுக்கு போராட்டம்…..

திசையெங்கும் கைகளை நீட்டியிருக்கிறான்.

தன் போனில் உள்ள அத்தனை போன் நம்பர்களுக்கும் இரவு தகவலை பரிமாறி யிருக்கிறான்.

ஒரு பக்கம் இயக்குநரும் என் குருவுமான ஷங்கர் சார் அவர்கள்,லிங்குசாமி, இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்கள் உயர்திரு Jsk சதீஷ்குமார், T. சிவா சார் , மதுரை பாராளுமன்ற எம் பி. சு.வெங்கடேஷன், நடிகர் பார்த்திபன், நடிகர் அர்ஜூன்தாஸ் என தொடங்கி அந்த நண்பர்கள் லிஸ்ட் மிகப் பெரியது.

அத்தனை பேரும் என் நேசத்துக்கிரியவர்கள்.

மருத்துவர் சிவராமனின் இடையறாது போராட்டத்தில் உயர்திரு ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் அவர்களின் தயவில் அந்த உயிர்காக்கும் மருந்து மருந்துவமனைக்கு ஐந்து மணி நேரத்திலே வந்து சேர்ந்தது.

என் ரத்த நாளங்களில் ஏற்றப்பட்ட 
48 மணி நேரம் கழித்து 
நான் அபாயக் கட்டத்தைக் கடந்தேன்.

வரதன் அழைத்தான்

பொழச்சுக்கிட்ட என்றான்

தெரியும் என்றேன்.

இதற்கு முழுக் காரணம் 
ஓரே பெயர் 
அது டாக்டர் கு.சிவராமன் 
டாக்டர்கு.சிவராமன் 
டாக்டர் கு.சிவராமன்
டாக்டர் கு.சிவராமன் 
என்று அழுத்தி சொன்னான்.

நன்றி நவிழ்ந்து 
மருத்துவர் கு. சிவராமன் அவர்களுக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பினேன்.

நன்றி என்று சொல்லிவிட்டு 
"வரதன் அலைஞ்ச அலைச்சல்கள் இருக்கே பாலன்! நீங்கள் கொடுத்து வைத்தவர் ! இத்தனை ஒரு ஆருயிர் நண்பனைப்பெற என்று வரதனுக்கு அவர் புகழாரம் சூட்டினார்.

வரதன்

கல்லூரி நண்பன்

என் முதல் படத்திலிருந்து என்னுடன் 
என் எல்லா சுக துக்கங்களிலும் 
உடன் நிற்பவன்.

என் வெற்றிகளில் அவனுக்கு பெரும்பங்குண்டு

என் உடல்நிலையை மொத்தமாக வரதன் பார்த்துக்கொள்வான் என்ற கவலையின்றியே மருத்துவமனையில் நிம்மதியாக துயில் கொண்டேன்.

நான் மட்டுமின்றி என் மனைவிக்கும் கொரோனாத்தொற்று ஏற்பட்டது…
அதற்கும் மருத்துவம் பார்த்து 
என் இரு குழந்தைகளையும் தனிமைப்படுத்தி 
சாத்தூருக்கு என் மச்சானுடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்து 
நேற்று 
இன்று 
நாளை 
என என் நிழலுடன் இருக்கும் உயிர்த்தோழன்….

என்ன வேண்டும் நண்பா உனக்குஎடுத்துக்கொள் என்றால்

எழுந்து வாடா ! வேலைகள் கிடக்கிறது என்கிறான்.

ஆருயிர் நண்பர்களை 
நீங்கள் ஒருநாளும் தேடமுடியாது 
அதுவாக உங்கள் இதயம் தேடி வரும்

நான் கொடுத்து வைத்தவன்

அப்படியொரு ஒரு இதயத்தின் பக்கத்தில் இருக்கிறேன்.

திசையெங்கும் உள்ள தெய்வங்களுக்கு நன்றி !!!!!!!!!!!

என் செலவானாலும் பரவாயில்லை பாலனைக்காப்பாற்றி விடு நாங்கள் செலவு செய்கிறோம் என்று நின்ற இன்னொரு ஆருயிர் தோழர்கள் அமெரிக்காவில் உள்ள பள்ளித்தோழன் முருகன் 
சென்னையில் உள்ள கிருஷ்ணகுமார்…..

நட்பின் கரங்கள் எனை 
அன்பின் சிப்பியில் 
அடைகாத்து 
அருளியதால் 
சுகமாய் இல்லம் திரும்பியிருக்கிறேன்

நன்றியை விட 
உயர்ந்த வார்த்தை உண்டெனில் 
உணர்ச்சிக்கரமான வார்த்தை உண்டெனில்
கண்ணீர் கசியும் வார்த்தை உண்டெனில்
அதை என் நட்பின் திசையெங்கும் படைக்கிறேன்.

No comments:

Post a Comment