இசைஞானி இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் கே. ராஜன் வேண்டுகோள்!!
இசையால் தமிழ் சினிமாவை நிரப்பிக்கொண்டிருக்கும் இசைஞானி அவர்களுக்கும்... மற்ற இசைக்கலைஞர்களுக்கும்... வணக்கம்!!
தமிழ் சினிமாவின் நலிந்த, போட்ட பணத்தை திரும்ப மீட்டெடுக்க முடியாது தினம் தினம் காணாமல் போய்க்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சார்பாக இந்தக் கடிதம்.
உங்கள் மீதும்... தங்களின் இசையின் மீதும் மிகப்பெரும் பற்று கொண்டவன். பல நேர உணவாகவும்.. இறந்து போகாமல் காத்து வைத்திருக்கும் மருந்தாகவும் தங்களின் இசையை மதிக்கிறோம்.
ஆதலின் இனி நான் வைக்கப் போகும் கோரிக்கைகளினால் உம் இசையின் அருமை தெரியாதவன் என்றோ ... மரியாதை அற்றவனென்றோ எண்ணிவிட வேண்டாம்...
இது உரிமைப் பிரச்சனை. அப்பன் பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேறன்னு சொல்லுவாங்களேஅந்த மாதிரி ஒரு சொத்துத் தகராறுன்னு வச்சுக்கங்களேன்..
ஒரு படத்தின் இசை உரிமை (ராயல்டி) என்பது யாரைச் சேரும் என்பது எதை வைத்து முடிவு செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.
ஒரு உயிர் உருவாக தந்தையும் தாயும் காரணம் போல் இங்கு ஒரு சினிமாவின் பாடல் உருவாக இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும் காரணம் இல்லையா?
இசையமைப்பாளர் தாயாக இருந்தால் அந்த பாடல் உருவாக பணம் தந்து உருவாக்கியவர் தந்தையல்லவா??
அதெப்படி ஒரு பாடலின் ராயல்டி என்பது இசையமைப்பாளரை மட்டும் சென்றடைகிறது?
தயாரிப்பாளருக்கும் கிடைத்திருக்க வேண்டுமே?
இத்தனை நாள் எங்கே போனீர்கள்?? நான் வழக்கு தொடுத்து போராடிப் பெற்ற பின் பங்கு பிரிக்க வந்து நிற்கிறீர்களா? என்ற கேள்வி உங்கள் பக்கமிருந்து வீசப்படக்கூடும்.
ஆம். உண்மைதான். இந்த அப்பாவித் தயாரிப்பாளர்களுக்கு வெறுமனே பணம் போட மட்டும் தெரிகிறது.
எங்கெங்கு என்னென்ன ரைட்ஸ் இருக்கு? அதன் விலை என்ன? எப்படி அதை காசாக்குவது எனத் தெரியாமல் எல்லாவற்றையும் போட்டுவிட்டு தோற்றால் வெறுங்கையோடு ஊருக்குத் திரும்ப மட்டுமே தெரிந்திருக்கிறது...
ஆனால் இசைஞானி நீங்கள் உங்கள் உரிமையைப் போராடி பெற்றுள்ளீர்கள். மற்றவர்கள் போல் காசாசையினால் இதைச் செய்தீர்கள் என்று சொல்ல நான் முட்டாள் அல்ல.
இது உரிமை. நம் உழைப்பை எவனோ சுரண்டி காசாக்கும் ஊழலுக்கான முடிவு. ஆனால் இதில் தயாரிப்பாளர்களுக்கும் உரிமை உள்ளதே...
அந்தக் காசை யாரிடம் எப்படி பெறுவது??
இசையமைப்பாளர் ராயல்டி பெற்று தயாரிப்பாளருக்குத் தரவேண்டுமா?? அல்லது தயாரிப்பாளர்களுக்கென்று தனியாக ராயல்டி பெறும் வசதி இருக்கிறதா?? இல்லை... இசையமைப்பாளர்களுக்கு மட்டும்தானா??
எப்படி இந்த ராயல்டி முறை வகுக்கப்பட்டுள்ளது?? ஏன் இது தயாரிப்பாளர்களுக்கு வருவதில்லை? என்ற கேள்விகளை கேட்க வேண்டும்... யாரிடம் கேட்பது எனத் தெரியாததால் உங்களிடம் கேட்கிறேன்...
எங்களுக்கும் சேர வேண்டிய ராயல்டியை நீங்கள் தனியாகப் பெற்றிருப்பதால் உங்களிடம் கேட்கிறேன்...
ஒரு பாடல்.. பின்னணி இசை இப்படி எல்லாம் உருவாகக் காரணமான பணத்தை முழுமையாக நாங்கள் செலுத்துகிறோம்.
உணவு.. போக்குவரத்து செலவு... பாடகர்கள்... தங்கும் செலவு.. இசையமைக்க ஆகும் செலவு... தண்ணீர் பாட்டில் முதற்கொண்டு தயாரிப்பாளர்கள் நாங்கள் செலவு செய்கிறோமே... எங்களுக்கு ஏன் அந்த ராயல்டி உரிமை இல்லை??
இசை உங்கள் சிந்தனையால் நெய்யப்பட்ட ஒன்று என்றாலும்... அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் எல்லா தளத்தையும் நாங்கள்தானே உருவாக்கித் தந்தோம்?? பின் எப்படி எங்களுக்கு இதில் உரிமையில்லை...?
நீங்கள் தனிப்பட்ட முறையில் செய்துகொள்ளும் ஆல்பங்களுக்கு... பக்திப் பாடல்களுக்கு நாங்கள் கேட்கவில்லை... எங்கள் தயாரிப்பில் உருவான படத்தில் உள்ள பாடல்களுக்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது??
அய்யா.. இதில் நீங்கள் எனச் சொன்னது தனிப்பட்ட இசைஞானியை சொல்லவில்லை... ஒட்டுமொத்த இசையமைப்பாளர்களையும் குறித்தது அது.
ஆனால் நீங்கள் உங்களுக்கான உரிமையைப் பெறும் அதேசமயத்தில் தயாரிப்பாளர்களுக்கான உரிமையையும் சுட்டிக்காட்டி பெற்றிருக்கலாமே அய்யா...
தயாரிப்பாளர்களுக்கும் ராயல்டி உண்டு என்ற சட்டத் தீர்வை பெற்றுத் தந்திருந்தால் நீங்கள் பெறப்போகும் ராயல்டியால் எங்கள் மனமும் வயிறும் குளிர்ந்திருக்குமே...
இப்போதாவது எங்களுக்கு அந்த உரிமையை பங்கிட்டுத்தர வாதாடுங்கள்.. நாங்களும் உடன் சேர்கிறோம். அல்லது எப்படிப் பெறுவது என்ற வழிகாட்டலையாவது முன்னின்று செய்யலாமே??
அல்லது தாங்கள் பெறும் ராயல்டியில் குறிப்பிட்ட சதவீதம் அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு என் மூலம் தரப்படும்... அல்லது அந்தந்த இசையமைப்பாளர்கள் தருவார்கள் என அறிவிக்கலாமே??
இதில் ஏதாவதொன்றை இசைஞானியிடமிருந்து பதிலாகப் பெற காத்திருக்கிறேன்.
நலிந்த தயாரிப்பாளர்களின் நலத்தை நீங்களும் விரும்புவீர்கள் என்ற ஆசையில்....
இவண்
கே. ராஜன்
தலைவர்,
தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் குழு
No comments:
Post a Comment