*நிஜமாகவே அழுது நடித்திருக்கிறேன்..*
*- கவுதம் வாசுதேவ் மேனன்!*
வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் "கருமேகங்கள் கலைகின்றன". ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் கவுதம் மேனன் பேசும்போது,
தங்கர் பச்சான் கேட்டு என்னால் நோ என்று சொல்ல முடியாது. பாரதிராஜா சார் தான் இந்த படத்தின் கதாநாயகன் என்று கூறினார். நடிப்பதை விட இயக்குவது தான் சுலபம். இந்த படத்தில் நிறைய காட்சிகளில் புதுவிதமாக நடித்திருக்கிறேன். நிஜமாகவே அழுது நடித்திருக்கிறேன். ஆனால், யோகிபாபுவுடன் காட்சிகள் இல்லாததில் வருத்தமாக இருந்தது. அடுத்த படத்தில் அவருடன் நடிப்பது குறித்து பேசியிருக்கிறேன்.
இந்த படத்தில் அனைவருக்குமே ஒரு தேடல் இருக்கும். பாரதிராஜா சாருக்கு ஒரு தேடல் இருக்கும், அதிதி பாலன் ஒரு விஷயமாக தேடிக் கொண்டிருப்பார். நான் ஒன்றை தேடிக் கொண்டிருப்பேன். பாரதிராஜா சாருக்கு மகனாக நடித்திருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் பாரதிராஜா சார் என்னை அடிக்க வேண்டும், முதலில் தயங்கினார், பின்பு அடித்துவிட்டார். எப்போதோ வாங்க வேண்டியதை இப்போது வாங்கிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டேன்.
தங்கர் பச்சானுடன் நிறைய பேசுவோம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால் தான் இப்படத்தில் நான் இருக்கிறேன்.
தங்கர் பச்சான் என்னுள் நிறைந்தவன் என்று என்னைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அது ஏன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். அதேபோல், அவரும் எனக்குள் நிறைந்திருப்பார். ஜி.வி. நீங்கள் நன்றாக பணியாற்றியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை, வாழ்த்துகள் என்றார்.
No comments:
Post a Comment