தென்னிந்திய நடிகர் திரு. ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.
திரு ராம் சரண் அவர்கள் மெகா ஸ்டார் என மக்களால் கொண்டாடப்படும் நடிகர் திரு சிரஞ்சீவி திருமதி. சுரேகா சிரஞ்சீவி அவர்களுக்கு மகனாக 1985 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்தார். புகழின் வெளிச்சம் தன் மகன் மீது படாமல் இருக்க ராம் சரணை சென்னையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் படிக்க வைத்தார். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கல்லூரியில் சேர்ந்தார் ராம் சரண். கல்லூரி நாட்கள் தொட்டே திரைத்துறை மீது பேரார்வம் கொண்டிருந்தார்.
தன்னை தேர்ந்த நடிகராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் குதிரையேற்றம், நடனம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். திரு. ராம்சரண் அவர்கள் 2007 ஆம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார்.
அந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார். அதுவும் மாபெரும் வெற்றியை பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். நடிகர் என்றதோடு மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், சமூக சேவகர், தொழில் முனைவோர் என்று பல அவதாரங்களை எடுத்தார்.
2022 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்தியாவை தாண்டி ஜப்பான் முதலான உலக நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் மத்தியில் மெகா பவர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்தார்.
மகதீரா மற்றும் சிறுத்தை ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு பிலிம் பேர் மற்றும் காமதேனு விருதுகள் வழங்கப்பட்டன. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் நாட்டுக்கூத்துப் பாடலுக்கு ஆஸ்கர் விருதும் பெற்று உலகப்புகழ் அடைந்தார்.
போர்ப்ஸ் இதழின் சிறந்த 100 செலப்ரிட்டி பட்டியலில் இவரும் இடம்பிடித்தார். திரைத்துறையைத் தாண்டி சமூக சேவையில் தன் தந்தையுடன் இணைந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டார்.
ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர், குண்டூர் என பல மாவட்டங்களை தாண்டி தெலுங்கானா மாநிலம் வரை தொண்டு செய்ய தன்னார்வ அமைப்புகளை தொடங்கினார். இரத்ததான முகாம்கள் பலவற்றை நடத்தியுள்ளார். கொரோனா காலத்தில் மக்களுக்கு மிகவும் தேவையாக இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வரை இலவசமாக தேவைப்படுவோருக்கு வழங்கியுள்ளார். திரைத்துறை, சமூகநலன் சார்ந்த பணி ஆகியவற்றில் இவரது சேவையைப் பாராட்டி இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமை கொள்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம்.
All about Vels University
1992 ஆம் ஆண்டில் வெறும் 36 மாணவர்களுடன் டாக்டர் ஐசரி.கே.கணேஷ் அவர்களால் தொடங்கப்பட்ட கல்வி நிலையம் தற்போது 43 கல்வி நிறுவனங்கள் 42 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 7 ஆயிரத்து 500 ஊழியர்களுடன் வேல்ஸ் குழுமம் கல்வி சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது. தமிழ்நாடு கடந்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், தில்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பல் மருத்துவம், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை வேல்ஸ் கல்விக் குழுமம் நிர்வகித்து வருகிறது.
மேலும், சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளிலும் பள்ளிகளை நிறுவி உலக நாடுகளில் பெருமையுடன் பயணித்து வருகிறது வேல்ஸ் கல்விக் குழுமம்.
No comments:
Post a Comment