Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Monday, 26 April 2021

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தற்காலிக

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதை குறித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிக்கை


ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா?!


கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்புகள் நேரிடுகிறது. உயிர்காக்கும் ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பது என்பதில் சிறிதும் உடன்பாடில்லை. 


இதற்காக நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம், மதிமுக, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு இல்லை. காரணம் எளிதானது. சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டே ஆகவேண்டும் என்று போராட்ட களத்தில் நின்ற கட்சிகள் இவை.  


ஒரு நாளைக்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறனுடையது தமிழகம். தற்போதைய தேவை நாள் ஒன்று 240 டன் ஆக்சிஜன். 1200 டன் ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறனும் வசதியும் தமிழகத்திற்கு உள்ளது. 


எந்த ஒரு தொழிற்சாலையிலும் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். குஜராத்தில் பனாஸ் பால் கூட்டுறவுச் சங்கம் வெறும் 72 மணி நேரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவி உற்பத்தியைத் துவங்கியுள்ளது ஓர் எளிய உதாரணம். தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் உடைய நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் நிறைய இருக்கின்றன என்கிறார்கள் தொழிற்துறையினர். இந்தியாவின் பல மாநிலங்கள் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவை எட்டியுள்ளன. உண்மையான பிரச்சனை தேவைப்படும் இடங்களுக்கு ஆக்சிஜனை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கான வினியோக வசதிகள் இல்லை என்பதே என்கிறார்கள் வல்லுனர்கள். ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை திறந்துதான் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவேண்டும் என்பது ஏற்புடையதல்ல. 


ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க ஒத்துழைக்கக் கூடியவர்களை மட்டும் கூட்டி ஆலையைத் திறக்கலாம் எனும் ஒருமித்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. லாக்டவுணில் லட்சக்கணக்கானவர்கள் பட்டினி கிடந்த போதும், சாலைகளில் நடந்தே சென்று அடிபட்டுச் செத்தபோதும் கூட கூட்டப்படாத அனைத்துக் கட்சி கூட்டம் ஸ்டெர்லைட்டுக்காக மட்டும் கூடுகிறது.  




ஸ்டெர்லைட் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த 13 பேரின் குடும்பமும் சுற்றமும் இவர்களை மன்னிக்காது. ஓர் அவசர கால நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்வதா?


திமுகவின் மகத்தான ஆட்சியால் தென்மாவட்டங்களில் நாளொன்றுக்கு 16 மணி நேர மின்வெட்டு நிலவியது. தென் மாவட்ட மக்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளாயினர். அப்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்தது. தென்மாவட்ட மக்கள் கூடங்குளம் அணு உலை திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை. மின்சாரம் தேவைதான். ஆனால், கடல்வளத்தை அழித்து இடிந்தகரை மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்வாதாரத்தையும் குலைத்துதான் மின்சாரம் கிடைக்கும் என்றால் அது தேவையில்லை என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. தமிழக அரசும் தூத்துக்குடி மக்களின் உணர்வுகளையும் எதிர்காலத்தையும் மதித்தே முடிவு எடுத்திருக்க வேண்டும்.  


மீண்டும் சொல்கிறோம், பெருந்தொற்று காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் உற்பத்தி தேவை என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. தமிழகம் இத்தருணத்தில் தேசத்திற்குக் கைகொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.  ஆனால், அது தூத்துக்குடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து நடத்திய போராட்டத்தைப் பொருளிழக்கச் செய்யும் விதமாக அமைந்து விடக் கூடாது. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் இன்னொரு நெடிய போராட்டத்திற்கான விதையைத் தூவிடும் இந்த முடிவை மாநில அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.  


கமல் ஹாசன்,

தலைவர் – மக்கள் நீதி மய்யம்.

No comments:

Post a Comment