Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Tuesday, 28 August 2018

கலைஞர் எனும் கொள்கைத் தீபத்தை கையில்

கலைஞர் எனும் கொள்கைத் தீபத்தை கையில்
ஏந்தி நடக்கும் இலட்சியத் தலைவர் மு.க. ஸ்டாலின்

தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு
எம்.எல்.ஏ., கருணாஸ் வாழ்த்து

 திராவிட முன்னேற்றக் கழகம் இன்று புதிதாய் பிறக்கிறது! பெரும் மதிப்பிற்குரிய அன்புச்சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இன்று தலைவராய் பிறக்கிறார்! “ ஒரு நாயகன் உதயமாகிறான்.. ஊரார்களின் இதயமாகிறான்” என்று காவியக் கவிஞர் வாலி எழுதிய வரிகளுக்கு ஏற்ப.. புதிய சூரியனாய் மு.க. ஸ்டாலின் உதயமாகிறார். முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்!

மாணவர் கழகப் பொறுப்பாளராக, இளைஞரணிச் செயலாளராக, மாநிலப் பொருளாளராக, சென்னை மேயராக, துணை முதல்வராக, செயல்தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக படிப்படியாக உயர்ந்து பரிமாணம் பெற்றவர் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.

14 வயது முதல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெறும் இயக்கத்தின் பாதையில் பயணம் செய்கிறவர். போராட்டக் களம், சிறைவாழ்க்கை, தியாகத் தழும்புகள் என இவரது தன்வரலாறு நீளும். அதுதான் இவரை இன்று தலைவர் சிம்மாசனத்தில் அமர்த்தியிருக்கிறது.

கலைஞர் எனும் கதிரவனின் கரம்பிடித்து நடந்து, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற சொற்றொடரை நெஞ்சில் எழுதி கழகத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.

எம் பெருமதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் செயல்முடியாத நிலை வந்த போது செயல்படும் தலைவராய் செயலாற்றி மக்கள் மனதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே மு.க. ஸ்டாலின் தலைவராகிவிட்டார்.

தமிழக இப்போது நெருக்கடியான அரசியல் சூழலில் நின்று கொண்டிருக்கிறது. இந்த அசாதரண சூழலை இன்று தலைவராய் பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் மாற்றுவர் நாம் மாற்றுவோம் என நான் நம்புகிறேன்.

பகுத்தறிவு, சமத்துவம், சமூக நீதி இம்மூன்றையும் முக்கோணமாக்கி அம்மூக்கோணத்தின் உச்சியில் நின்று தமிழருக்கான உரிமையை மீட்கும் பாசறையாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கிறது!

தலைவராய் பொறுப்பேற்றுள்ள தலைவர் மு.க. ஸ்டாலின் இயக்கத்தின் பாதையில் புதிய பூக்களை நடுவார்! எத்தனை உட்கட்சி இடர்பாடுகளையும் தலைமைப் பண்புகளோடு கடந்து செல்வார் இந்த ஆற்றல் அவருக்கு உள்ளது என்பதை நாம் அறிவோம்!

இன்று புதிதாய் பிறந்தோம் என்ற மகாகவியின் பாடலுக்கேற்ப இன்று புதிதாய் பிறந்தேன் என்று மு.க. ஸ்டாலின் உரைத்தது மிகப் பொருத்தமானதாகும். புதிய தலைவராய் பிறந்து கழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் மலர்ச்சிக்கும் திசைகாட்டும் சூரியனாய் மு.க. ஸ்டாலின் இருப்பார் என்பது எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை!

பெரியார், அண்ணா, கலைஞர், என்ற திராவிட ஆலமரத்தில் மு.க. ஸ்டாலினும் ஒரு கிளையாக துளிர்க்கிறார் என்பது வரலாற்றுப் பொருத்தம் ஏனென்றால் 1944 ஆகஸ்ட் 27 ஆம் நாள் திராவிடர் கழகம் தோன்றியது. இன்று அதே ஆகஸ்ட் 27 இல் மு.க. ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்கிறார். வரலாற்றுச் சக்கரம் எப்போதும் கனக்கச்சிதமாக சுழலும்! அது நாளையும் சுழலும்!

கலைஞர் அவர்களின் கொள்கைத் தீபத்தை கையில் ஏந்தி நடக்கும் தலைவராய் மு.க. ஸ்டாலின் இன்று தலைவராகியுள்ளார். புதிய விடியல் பிறந்ததாய் நெஞ்சம் மகிழ்கிறது! தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தெரிவிப்பதில் முக்குலத்தோர் புலிப்படை பெருமை கொள்கிறது!

இவ்வாறு தனது அறிக்கையில் எம்.எல்.ஏ., கருணாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment