Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Wednesday, 20 October 2021

நெல் கொள்முதலில் மெகா கொள்ளை..

 நெல் கொள்முதலில் மெகா கொள்ளை...

மௌனம் காக்கும் மந்திரிகள்! 

(20-10-2021)

p


விவசாயிகள் நலனில் உண்மையான அக்கறைகொண்ட கட்சியான மக்கள் நீதி மய்யம், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் என்பது நியாயமான முறையிலும் நேர்மையான வழியிலும் நடைபெற வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஆட்சியாளர்கள்தான் மாறுகிறார்களே தவிர நெல் கொள்முதல் ஊழல் குறைந்தபாடில்லை. ஏற்கெனவே, ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்ற பரிதாபகரமான நிலையில் வாழ்ந்துவரும் தமிழக விவசாயிகள்,  கொள்முதல் நிலையங்களில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளால் உழக்கு அல்ல... முதலீடுகூட மிஞ்சாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் கொள்ளை குறித்து ‘பசுமை விகடன்’ இதழ் விரிவான செய்தித் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நெல் கொள்முதல் செய்வதற்காக விவசாயிகள் அளிக்கவேண்டிய லஞ்சப் பணம் பற்றிய விவரங்கள் துல்லியமாக வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வோர் அறுவடைப் பருவத்திலும் நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 500 கோடி ரூபாய் வரை ஊழல், லஞ்ச முறைகேடு நடைபெறுவதாக அந்த இதழ் குறிப்பிடுகிறது. சென்ற ஆட்சியைவிட தற்போது லஞ்சத்தொகை கூடியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த இதழ், ‘இதை முற்றிலும் ஒழிக்கத் தயாரா?’ என்ற சவாலையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை நோக்கி முன்வைத்துள்ளது.


நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட முன்னணி இதழ் இத்தகைய சவால் ஒன்றை முன்வைத்திருக்கும் நிலையில், மாண்புமிகு முதல்வரோ, மாண்புமிகு அமைச்சர்களோ இதுகுறித்து எந்தப் பதிலும் அளித்ததாகத் தெரியவில்லை. டெல்டா பகுதி விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது இந்தப் பிரச்சனையில் முதல்வரும் அமைச்சர்களும் மௌனம் சாதிப்பது நல்லதல்ல. செல்லும் இடங்களிலெல்லாம் `இத்தனை இத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்’ எனப் பட்டியலிட்டு மார்தட்டும் முதல்வர் அவர்கள், இதையும் அவருடைய சாதனைப் பட்டியலில் சேர்த்துவிட்டாரா என்ன?


டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்கிறார்கள். வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்று புகழுரைக்கிறார்கள். அதேசமயம், தமிழக விவசாயிகளை அன்றாடம் வஞ்சிக்கும் செயல்களையும் செய்கிறார்கள். அதுபற்றி கிஞ்சித்தும் குற்றவுணர்ச்சியே இன்றி நடமாடுகிறார்கள். இப்போக்கு இன்று நேற்று துவங்கியது அல்ல... நீண்டகாலமாகவே தமிழக அரசியல் நிலை இதுதான்.


சமீபத்தில் ஓர் ஊடக நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், `ஊடகங்களின் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். சொன்னால் மட்டும் போதாது, அதைச் செயலிலும் காண்பிக்க வேண்டும். அந்த வகையில், ‘பசுமை விகடன்’ இதழ் சுட்டிக்காட்டியுள்ளதைக் கவனத்தில்கொண்டு, டெல்டா விவசாயிகளிடம் கொள்ளையில் ஈடுபடுபவர்கள்மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், இனி இதுபோன்ற கொள்ளை நடைபெறாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது. 


ஊழலும் லஞ்சமுமே, மக்கள் நலன் நாடும் சமூகத்திற்கும் அரசியலுக்கும் எதிரான மாபெரும் நச்சுகள் என்ற முடிவில் உறுதியாக இருக்கும் மக்கள் நீதி மய்யம், அவற்றைக் களைய  முழுமூச்சுடன் போராடுவதில் எப்போதும் உறுதியுடன் இருக்கும்.


- சிவ இளங்கோ, 

மாநிலச் செயலாளர், மக்கள் நீதி மய்யம்.

No comments:

Post a Comment