Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Thursday, 28 October 2021

ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்தது ஏன்

 *ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்தது ஏன்? சூர்யா சொல்லும் சுவாரஸ்ய விளக்கம்*


ஜெய் பீம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தில் தான் ஏன் முதன்முறையாக ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தேன் என்பதை சூர்யா விளக்கியுள்ளார்.






சூர்யா தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியதில் இருந்தே, ரசிகர்களை வியக்கவைக்கத் தவறியதில்லை. தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் சிறப்பாக நியாயம் செய்வார். அது ஒரு காவலர் பாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு தொழிலதிபர் பாத்திரமாக இருந்தாலும் சரி. இல்லை அடுத்த வீட்டு பையன் போல் ஒரு ஹீரோவாக இருந்தாலும் சரி. ஜெய் பீம் திரைப்படத்தில் முதன்முறையாக வழக்கறிஞராக நடிக்கிறார். வழக்கறிஞர் சந்துரு அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிச்சல்மிக்கவர். இந்தக் கதாபாத்திரம் பற்றியும், தான் ஏன் முதன்முறையாக ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தேன் என்பதைப் பற்றியும் சூர்யா விளக்கியுள்ளார்.


"நான் இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்னதாகவே, நீதிபதி சந்துரு ஐயாவை சந்தித்தேன். இயக்குநர் த.செ.ஞானவேல் தான் அதற்கு ஏற்பாடு செய்தார். என்னிடம் நீதிபதி சந்துரு பற்றி கூறும்போது அவர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்றனர். அவரைப் பற்றிய நிறைய உத்வேகம் தரும் செய்திகளைக் கூறினார். அவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்கு வக்கில் ஃபீஸ் பெற்றதில்லை என்பதைத் தெரிவித்தனர். அவரிடம் பேசியும், அவரைப் பற்றி, அவரது இளமைக் கால துடிப்பைப் பற்றி பேசியும், படித்தும் தெரிந்து கொண்டேன். அவருடைய கதை இந்த உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றுசேர வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். நீதிபதி சந்துரு போன்றோர் போற்றுதலுக்கு உரியவர்கள். ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கான உரிய மரியாதையை செய்யவில்லை. நாங்கள் அவருடைய கதையைச் சொல்லி இளம் மனதில் அக்கினிப் பிரவேசம் செய்ய எண்ணினோம். அதன் சாட்சிதான் ஜெய் பீம். இத்திரைப்படத்திற்காக நாங்கள் உயர் நீதிமன்ற வளாக செட் போட்டுள்ளோம். இது தமிழ்த் திரைப்படத்தில் இதுவரை யாரும் செய்திராதது. எனவே, இவையெல்லாம் சேர்ந்துதான் என்னை முதல்முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்கவைத்தது" என்றார்.


ஜெய் பீம் திரைப்படம் சிந்தனையைத் தூண்டும் கதைக்களம் கொண்டது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானது.  தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். 


’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநர் கதிர். 


'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.

No comments:

Post a Comment