Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Tuesday, 26 September 2023

கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும்

 *“கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா* 








*“இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” ; ரஜினிகாந்த்தையே வியப்பில் ஆழ்த்திய லால் சலாம் ஆடை வடிவமைப்பாளர் சத்யா* 


சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் மலிங்கா இணைந்து எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆனால் பலரும் நினைப்பது போல அவர் கிரிக்கெட் வீரர் மலிங்கா அல்ல.. தமிழ் சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் காஸ்ட்யூமர் சத்யா தான் அவர்.


ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கிவரும் லால் சலாம் படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள சத்யா, மேலும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படத்தில் தான் நடித்த கதாபாத்திர தோற்றத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஞாபகார்த்தமாக சத்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இன்று அவரை கிரிக்கெட் வீரர் மலிங்காவாக பலரையும் நினைக்க வைத்துள்ளது.  


மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மூலமாக ஆடை வடிவமைப்பாளராக தனது பயணத்தை துவங்கிய சத்யா கிட்டத்தட்ட 46 படங்கள் வரை பணியாற்றி உள்ளார். ராஜா ராணி, இரும்புத்திரை, தெறி, பைரவா, ரஜினி முருகன், மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளதுடன் சமீபத்தில் டைம் டிராவலை மையப்படுத்தி வெளியான மார்க் ஆண்டனி படத்தின் சவாலான ஆடை வடிவமைப்பையும் அசத்தலாக செய்து முடித்தவர் இந்த சத்யா தான் என்பது இன்னொரு ஆச்சரியம். 


தனது புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ள நிலையில், லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் தற்போது இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவாக திடீரென வைரலானது குறித்தும் உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்கிறார் சத்யா.


“லால் சலாம் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி மூலமாகத்தான் அந்த படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆடை வடிவமைப்பாளராக மட்டுமல்லாமல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன். கிட்டத்தட்ட 22 நாட்கள் இந்த படத்திற்காக ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். ஒவ்வொரு நாளும் அவரிடம் இருந்து புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டேன். சிலபேர் வெளியில் ஒரு மாதிரியாகவும் கேரவனுக்குள் ஒரு மாதிரியாகவும் தங்கள் குணாதிசயத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் இத்தனை நாள் நான் பார்த்த மனிதர்களில் ரஜினி சார் உள்ளேயும் வெளியேயும் எப்போதுமே ஒரே மாதிரியான மனிதர்தான். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் எப்படி ஒருவர் தன்மையான மனிதனாக இருப்பது என்பதற்கு அவரைவிட வேறு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.  


இந்த படத்தில் அவருக்கான ஆடைகளை வடிவமைக்கும் பொறுப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். அவரைப் பொறுத்தவரை குறை நிறை எதுவாக இருந்தாலும் நம்மிடம் வெளிப்படையாக பேசி விடுவார். ஒரு விஷயத்தை சரியாக செய்து விட்டால் ஒன்றுக்கு மூன்று முறை திரும்பத் திரும்ப  நம்மை பாராட்டுவார். ஒருமுறை சிரமமான விஷயம் ஒன்றை ரொம்பவே எளிதாக செய்து முடித்தேன் அதேசமயம் இன்னொரு விஷயத்தில் இரண்டு முறை முயன்றும் சரிவரவில்லை.. அப்போது என்னிடம் அவர், என்ன சத்யா ரொம்ப கஷ்டமான விஷயத்தை எளிதாக செய்து விட்டீர்கள்.. எளிதான ஒரு விஷயத்திற்கு இவ்வளவு சிரமப்படுகிறீர்களே என்று கூறினார்.. 


அவர் அப்படி சொல்வது கூட நம் மீதான அக்கறை, அன்புடன் தான் இருக்கும்.. இன்னும் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் சார் என்று அவரிடமே கேட்டு அதை சரியாக செய்து முடித்தேன்.. அதில் அவருக்கும் ரொம்பவே சந்தோசம். நாம் சொல்லும் ஒரு விஷயம் சரியாக இருந்தால் எந்த ஈகோவும் பார்க்காமல் அதை மனதார ஏற்றுக்கொள்வார். படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும்போது என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு ‘சும்மா கலக்குறீங்களே’ என்று ஜாலியாக கூறி உற்சாகப்படுத்துவார். 


கிட்டத்தட்ட 170 படங்கள் வரை நடித்துவிட்ட அவர் இத்தனை படங்களில் அணியாத ஆடை வகைகளே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படத்திற்கு படம் புதிது புதிதாக பலவிதமான ஆடைகளை அவர் அணிந்து நடித்துள்ளார். அதனால் இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரியும் அதேசமயம் இதுவரை அவர் அணிந்த உடைகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாகவும் மேலும் அவரது ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாகவும் ஆடைகளை வடிவமைத்துள்ளேன். இந்த மாதிரி ஒரு ரஜினியை பார்த்து ரொம்ப நாளாச்சு என்று ரசிகர்கள் ஆச்சரியமும் சந்தோஷமும் படும் வகையில் வின்டேஜ் ரஜினியை கண்முன் நிறுத்தும் விதமாக லால் சலாம் படத்தில் அவரது ஆடைகள் இருக்கும். 


இந்த படத்திற்கு பிறகும் மீண்டும் அடுத்ததாக ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றுவேனா இல்லையா என்பது தெரியாது. அதனால் இந்த படத்தையே அவருடன் பணியாற்ற எனக்கு கிடைத்த கடைசி வாய்ப்பாக நினைத்து, எந்த அளவிற்கு சிறப்பாக பணியாற்ற முடியுமோ அந்த அளவிற்கு வேலை செய்துள்ளேன் என நினைக்கிறேன். படம் வெளியான பிறகு அவர் அணிந்துள்ள ஆடைகளை பார்த்து அதேபோல யாரேனும் ஒருவராவது விரும்பி அணிந்தார்கள் என்றால் அதுவே எனது வேலைக்கு கிடைத்த கவுரவமாக நினைபேன்.


ரஜினி சாருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி பலரும் என்னை இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா என்றே நினைத்துக் கொண்டார்கள். அது ஒருவகையில் எனக்கு பெருமை தான்.  அதனால் மலிங்கா போன்ற தோற்றத்திலேயே என்னை மறு உருவாக்கம் செய்து ஒரு லுக் டெஸ்ட்டும் எடுத்துக்கொண்டேன்.. ஏனென்றால் தற்போது நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். ஒருவேளை நாளை மலிங்காவின் பயோபிக் பற்றி படம் எடுக்கிறார்கள் என்றால் அந்த ஆடிசனுக்கு முதல் ஆளாக சென்று நிற்பேன்” என்று கூறுகிறார் நம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment