Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Wednesday, 18 September 2024

வாழை பட 25 வது நாள் கொண்டாட்டம்

 வாழை பட 25 வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா !! 












Navvi Studios  நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, “வாழை”திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது. இப்படத்தைத் தமிழகமெங்கும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. 4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியினை படக்குழுவினர் கோலாகலமாகக் கொண்டாடினர். 


பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 


இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த ரெட்ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி, அர்ஜூன் துரை ஆகியோருக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது.  


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சார்பில் விழாவில் கலந்துகொண்ட பிரதீப் அவர்களுக்கு  வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது.



ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது… 

மாரி சார் ரெட்ஜெயன்ட் மூவிஸ்க்கு எப்போது ஸ்பெஷல், எங்களுக்கு மாமன்னன் எனும் மாபெரும் வெற்றியைத் தந்தார். இப்போது வாழை மூலம் மீண்டும் ஒரு வெற்றியைத் தந்துள்ளார். இந்தப்படத்தில் இணைந்தது மனதுக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது. படத்தில் சந்தோஷ் நாராயணன் அற்புதமான இசையைத் தந்திருந்தார், கலை, திவ்யா, நிகிலா, என எல்லோரும் அட்டகாசமாக நடித்திருந்தார்கள், அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.   


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சார்பில் பிரதீப் பேசியதாவது…

வாழை ஹாட்ஸ்டாரின் முதல் திரையரங்குத் திரைப்படம், இன்னும் சில திரைப்படங்கள் ரெடி ஆகிக்கொண்டிருக்கிறது. ரெட்ஜெயன்ட் மூவிஸுக்கு நன்றி. இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் என் நன்றிகள். இன்னும் 10 வருடத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் எத்தனை படங்கள் செய்தாலும், வாழை தனித்து நிற்கும், வாழை தமிழ் சினிமா வரலாற்றில், மிக மிக முக்கியமான படம். இப்படம் மூலம் மாரி என்ற நண்பன் கிடைத்தது மகிழ்ச்சி. மாரி தனித்துவமான கலைஞன். அவருடன் மீண்டும் ஒரு புராஜக்ட் செய்ய பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லா நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.  



ஸ்டன்ட் மாஸ்டர் சுப்புராயன் பேசியதாவது....

வாழையைத் தமிழகமே வாழ்த்துகிறது.  இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர் இருவரையும் மனதளவில் இத்திரைப்படம் பாதித்திருக்கிறது, அதனால் தான் இந்த அளவு அவர்கள் இந்தப் படத்தைப் பாராட்டுகிறார்கள்.  

ஒரு படத்துக்கு எது முக்கியம் கதை, ஆனால் வாழையை நாவலாக எழுதியிருக்கலாம், குறும்படமாக எடுத்திருக்கலாம், ஆனால் அதை அருமையான ஒரு காவியமாக்கியுள்ளார் மாரி. வாழைக்குப் பல அர்த்தங்கள் இருக்கிறது, வாழையை மாரி இன்னும் சிறப்பாக்கியிருக்கிறார். மாரி எப்போதும் ஃபைட் எல்லாம் லைவாக இருக்க வேண்டும் என்பார், அதிலும் உணர்வுகள் இருக்க வேண்டும் என்பார், அவர் உழைப்பு தான் அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றியைத் தந்துள்ளது. அவருக்குத் தேசிய விருது கிடைக்க வேண்டும், இந்தப் படத்திற்குத் தேசிய விருது கிடைக்கும். இப்படத்தில் நடித்த அனைவரும் மிகப்பெரும் உழைப்பைத் தந்துள்ளனர், அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


கலை இயக்குநர் குமார் கங்கப்பன் பேசியதாவது…

இப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு நன்றி. எனக்கு வாய்ப்பு தந்த மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி. படத்தில் நடித்த நடிகை, நடிகையர் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. நவ்வி ஸ்டூடியோஸ் இன்னும்  பல படங்கள் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 



எடிட்டர் சூர்ய பிரதமன் பேசியதாவது…

முதன்முதலில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் டிராஃப்ட் படிக்கும்போது, நான் இந்தப்படத்தின் எடிட்டராக இருப்பேன் என்பதே தெரியாது, இந்த படம் தந்த எமோஷனல் ஜர்னி வித்தியாசமானது. எடிட்டிங்கில் சிவனைந்தனின் ஆரம்பக் கட்டம் மகிழ்ச்சியாக இருந்தது.  கிளைமாக்ஸ் முற்றிலும் புதிதானது, கிளைமாக்ஸ் ஷூட் கூட்டிப்போனார், அதை எடிட் செய்யும் போது, அந்த மரண ஓலம் தான் கனவிலும் வரும். கிளைமாக்ஸ் சரி வராமல் தவித்தோம். குடுகுடுப்பை சத்தம், பறவையின் சத்தம் வையுங்கள் அது தான் கிளைமாக்ஸ் என்றார் அது வந்தவுடன் கிளைமாக்ஸ் வந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி. 



திங்க் மியூசிக் சந்தோஷ் பேசியதாவது…

வாழை பற்றி நிறையப் பேசிவிட்டார்கள், அனைவருக்கும் நன்றி மட்டும் தான் சொல்ல வேண்டும். இந்தப்படத்தை எங்களை நம்பித் தந்த  மாரி செல்வராஜுக்கு நன்றி. நவ்வி ஸ்டூடியோஸ், டிஸ்னி, ரெட்ஜெயன்ட் எல்லோருக்கும் நன்றி. இந்தப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் இன்னும் மனதிலேயே இருக்கிறது. எல்லா உதவி இயக்குநர்களும் வாழை மாதிரி ஒரு படம் என தங்கள் கதையைச் சொல்லும் படி, ஒரு பெஞ்ச்மார்க்கை உருவாக்கி விட்டார் மாரி. வாழ்த்துக்கள் 


நடிகர் கலையரசன் பேசியதாவது…

இப்படத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. வாழை என் வாழ்வில் மிக முக்கியமான படம், இன்டஸ்ட்ரியிலிருந்து நிறையப் பேர் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டினார்கள், எல்லோர் மனதை பாதித்திருந்தால் தான் இந்த பாராட்டு வரும். முதல் நாளிலிருந்து அனைவரும் இப்படத்திற்கு, நேர்மையாகப் போட்ட உழைப்பு தான் இந்த வெற்றிக்குக் காரணம், அனைவருக்கும்  என் நன்றிகள். 


திலீப் சுப்பராயன் பேசியதாவது…

ஆக்சன் மாஸ்டராக போய், தயாரிப்பாளராக மாறியது மிக நெகிழ்வான தருணம். மாரி சார் ரைட்டிங்க் எனக்கு ரொம்பப் பிடிக்கும், வாழை ஏன் மிக முக்கியம் என்றால், ஏற்கனவே ஒரு படம் செய்து தோற்றிருக்கிறோம், ஆனால் சினிமா தந்தது, என ஏற்றுக்கொண்டேன்,  ஆனால் அதுவே இப்போது எனக்கு வெற்றியைத் தந்துள்ளது. சினிமாவை நேசித்தால், அது திரும்பத் தரும். நவ்வி ஸ்டூடியோஸ், டிஸ்னி, ரெட்ஜெயன்ட் எல்லோருக்கும் நன்றி. மாரி சாருக்கு நன்றி. தெலுங்கில் ஒரு ஷூட்டில் படம் பார்த்த எல்லோரும் மனமுருகி இப்படத்தைப் பாராட்டினார்கள், பத்திரிக்கையாளர்கள் கொண்டாடினார்கள், அனைவருக்கும் என் நன்றிகள். 


நடிகை திவ்யா துரைசாமி பேசியதாவது…

மிக நிறைவான விழாவில் இருக்கிறேன், புளூஸ்டார் படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நிறைவான விழா. மாரி சார் முதல் நாள், உன் கேரியரில், உனக்கு ஒரு நல்ல படம் தருவேன் என்றார். அவரை மட்டும் நம்பித்தான் இந்த படத்திற்குள் போனேன். அதனை நூறு சதவீதம் நிறைவேற்றி விட்டார். மிகப்பெரிய மகிழ்ச்சி. என்னுடன் உழைத்த கலைஞர்கள் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. 



இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது…

பரியேறும் பெருமாளுக்குப் பிறகு வாழை படத்திற்கு, பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள் எனக் கேட்டிருந்தேன். நீங்கள் மிகப்பெரும் ஆதரவைத் தந்துள்ளீர்கள் நன்றி, 2012 ல் ஃபிலிம்மேக்கராக ஆரம்பித்த ரஞ்சித், மாரி, நலன் என எல்லோரும் நல்ல படம் செய்து, மிகப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளார்கள். மகிழ்ச்சி. ஒரு நல்ல கதை, வசூலிலும் சாதிப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. வாழை என்னுடைய ஃபேவரைட் படங்களில் எப்போதும் இருக்கும், இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி. 


நடிகை நிகிலா விமல் பேசியதாவது…

பூங்கொடி பாத்திரத்தைத் தந்ததற்கு மாரி சாருக்கு நன்றி. மாரி சார் வாழக்கையை வாழ்வது கஷ்டம், ஆனால் அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் படமாகத் தந்துள்ளார், அதில் நானும் ஒரு பார்ட்டாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. எனக்கு அழகிய லைலா போலப் புகழ் கிடைப்பதை விட, பூங்கொடியைக் கொண்டாடுவது தான் மகிழ்ச்சி. ஹாட்ஸ்டார் உடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி. திலீப் சுப்பராயன் மாஸ்டர் என் குடும்பம் மாதிரி, தமிழில் அவருடன் தான் நிறையப் படங்களில் பணியாற்றியுள்ளேன். இந்த குடும்பத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றிகள். 


இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது…

என் சக தமிழ் திரைத்துறை தோழர்களுக்கு நன்றி. என் திரையுலகம் இந்த வாழை படத்தைக் கொண்டாடிய விதம், எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. திரைத்துறை இயக்குநர்கள், நண்பர்கள் தான் முதலில் இப்படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தார்கள். நன்றி. நான் வேலை பார்த்த அனைத்து தயாரிப்பாளர்களும் கொடுத்த சுதந்திரம் தான் இந்த வெற்றிக்குக் காரணம், ரஞ்சித் சார், தாணு சார், ரெட்ஜெயன்ட், டிஸ்னி என நால்வருக்கும் என் நன்றிகள். திலீப் மாஸ்டர் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தாய் என்பார், ஆனால் ஃபைட்டில் நான் எப்போதும் உணர்வைக் காட்சிகளைச் சேர்த்து வைப்பேன், அதற்கான சுதந்திரம் தருவார். நான் படம் எடுப்பேன் அதில் ஃபைட் இருக்காது என்பார், அப்போதிருந்து அவரை நேசிக்க ஆரம்பித்து விட்டேன். வாழை பார்த்து நானும் இணைந்து செய்கிறேன் என்றார். அப்போதிலிருந்து இந்த பயணம் தொடர்கிறது. இந்த படத்தை நானே வெளியிடக் காரணம், ரெட்ஜெயன்ட் இருக்கிறது எனும் தைரியம் தான். செண்பக மூர்த்தி சார் படம் பார்த்து, உங்களுக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கும் என வாழ்த்தினார். நன்றி. என் டீம் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர். அதை விட என் நடிகர்கள் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர், அவர்கள் தான் இந்த வெற்றிக்குக் காரணம். கலையரசன், திவ்யா, நிகிலா விமல் எல்லோரும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறினார்கள். இந்த பையன்களை என்னவேணாலும் செய்ய வைக்க முடியும் எனத் தெரியும், ஆனால் நடிகர்கள் எப்படி ஒத்துக்கொண்டார்கள் என ஆச்சரியப்பட்டேன், நிறைய அவர்களைத் துன்புறுத்தியுள்ளேன், ஆனால் அதைப் புரிந்துகொண்டார்கள். நிகிலா விமலை முதலில், வேறு படத்திற்காகத் தான் தேர்ந்தெடுத்தேன், இது தான் என் வாழ்க்கையின் பெரிய படம் எனச் சொல்லி, நடிக்க வைத்தேன்.  ஏன் கிளைமாக்ஸில் டீச்சர் இல்லை என எல்லோரும் கேட்டார்கள்,  ஆனால் அப்போது அவரது டேட் இல்லை, இந்தப்படத்தை மொத்தமாக முடித்து விட்டு ஒன்றரை வருடம் கடந்து தான், கடைசி பாட்டை எடுத்தேன். இந்தப்படம் ஒரு முழுமை இல்லாமல் இருந்தது, படம் பார்ப்பவர்கள் என்ன உணர்வோடு செல்வார்கள் என நினைத்துத் தான் பாட்டை படமாக்கினேன். அப்போது சிவனைந்தன் டீச்சர் மடியில் படுத்து அழுவதாகத் தான் காட்சிகள் இருந்தது. அதை எடுத்திருந்தால் இப்போது வரும் சர்ச்சைகள் இருந்திருக்காது. என்னைப்பற்றி கேள்விகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கான பதில் தான் வாழை படம். இன்னும் பல படங்கள் எடுத்துக்கொண்டே இருப்பேன், நான் வாழ்நாள் முழுதும் என் கதைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பேன் நான் ஓய்வு பெறும் போது, அடுத்துக் கதை சொல்ல ஆட்களைத் தயார் செய்திருப்பேன். அவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள். நீ ஏன் வலியைச் சொல்கிறாய் ? பெருமை இல்லையா ? என்கிறார்கள். இதோ இந்த பசங்க தான் என் பெருமை. இன்னும் இன்னும் பல கதைகள் வரும். என் வாழ்க்கையைக் கலையாக மாற்றியிருக்கிறேன் இந்த கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன். நன்றி.

No comments:

Post a Comment