*சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் வர்த்தக மையத்தை நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு மற்றும் நடிகரும் ராஜ்யசபா உறுப்பினருமான டாக்டர் கமல் ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர்.*
அவருடன் வேல்ஸ் கல்வி குழுமங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Dr. MGR Educational and Research Institute) நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ.சி. சண்முகம், உடனிருந்னர்.
வேல்ஸ் வர்த்தக மையம் பெரிய அளவிலான வர்த்தகக் கண்காட்சிகள், தொழில் மற்றும் வணிக மாநாடுகள், கார்ப்பரேட் நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், விருது விழாக்கள், திருமணங்கள், உச்சி மாநாடுகள் மற்றும் பெரும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் நவீன வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 20,000 பேர் கலந்து கொள்ளக்கூடிய வசதியும், 6,000 வாகனங்கள் நிறுத்தும் வசதியுடனும் அமைந்துள்ள இந்த மையம், சென்னையின் மிகப் பெரிய அரங்குகளில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த முக்கியமான வளாகத்துடன் இணைந்து அமைந்துள்ள வேல்ஸ் திரைப்பட நகரம், தமிழ்நாட்டின் ஒரே திரைப்பட நகரமாக இருந்து வருகிறது. இது இந்தியாவின் முன்னணி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புகளுக்கான முக்கிய தளமாக வளர்ந்து வருகிறது. விரிந்த வெளிப்புற படப்பிடிப்பு தளங்கள், நவீன தயாரிப்பு வசதிகள், விருந்தினர் தங்குமிடங்கள், ஆறு திரையரங்குகள் கொண்ட வேல்ஸ் திரையரங்குகள் மற்றும் தனித்த உணவக வளாகம் ஆகியவற்றுடன், பொழுதுபோக்கு மற்றும் படைப்புத் துறைகளில் VELS குழுமத்தின் வலுவான அடையாளத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
வேகமாக வளர்ந்து வரும் வணிக மற்றும் தொழில்நுட்ப வழித்தடத்தில் அமைந்துள்ள வேல்ஸ் வர்த்தக மையம், முக்கிய கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கான முன்னணி தளமாக உருவெடுத்து, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தின் உட்கட்டமைப்பின் மேம்பாடு உள்ளிட்ட காரணத்தால் முதலீடுகளும், வேல்ஸ் குழும நிறுவனங்கள் போன்ற தனியார் அமைப்புகளின் பங்களிப்பினாலும் சாத்தியமானதாக அவர் கூறினார். இத்தகைய முயற்சிகள், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையை மேலும் வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார்.
சிறப்பு உரையாற்றிய பத்மபூஷன் டாக்டர் கமல்ஹாசன், இன்று சென்னை, பான்-இந்தியா திரைப்பட தயாரிப்பு மையமாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார். தமிழ் திரையுலகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இளைய தலைமுறையை அவர் ஊக்குவித்தார். திருமதி குஷ்மிதா கணேஷ் குறித்து குறிப்பிடுகையில், ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் ஒளி மங்கிவிடுமோ என்ற அச்சம் இருந்ததாகவும், ஆனால் இளம் தலைமுறையின் தலைமையும் படைப்பாற்றலும், தமிழ் சினிமா தேசிய மற்றும் உலகளாவிய உயரங்களை எட்டும் என்ற நம்பிக்கையை மீண்டும் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் வீரமணி; தேமுதிக துணை பொதுச் செயலாளர் திரு. எல்.கே. சுதீஷ்; தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் திரு. ஜெயந்திலால் சாலனி; நடிகர்கள் ஆர். பார்த்திபன், செந்தில், ஸ்ரீபிரியா; VGP சந்தோஷம்; முன்னணி கல்வியாளர்கள் மற்றும் தொழில், வர்த்தக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சமூக பொறுப்புணர்வை மீண்டும் வலியுறுத்தும் வகையில், தொடக்க விழாவின் போது வேல்ஸ் குழுமம், ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு நலத்திட்டப் பொருட்கள் மற்றும் மதிய உணவை வழங்கியது. மேலும், இந்த மாணவர்களுக்காக வேல்ஸ் திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தின் சிறப்பு காட்சியும் திரையிடப்பட்டது.






No comments:
Post a Comment